வடக்கு மக்களின் பொதுப் போக்குவரத்தில் அரசு அக்கறைகாட்டவில்லை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Monday, March 25th, 2019

நாட்டில் தலைநகர் கொழும்பிலும், அதனை அண்டியப் பகுதிகளிலுமாக வசிக்கின்றவர்கள் போக்குவரத்துப் பிரச்சினை காரணமாக தங்களது வாழ்நாளில்  சுமார் 6 வருடங்களை வீதியில் செலவிட்டு வருவதாக அண்மையில் ஒரு தகவல்கள் குறிப்பிடுகின்றது. இங்கே, போக்குவரத்து வசதிகள் இருந்தும், வாகன நெரிசல்கள் காரணமாக இந்த நிலை இம் மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற அதேநேரம், வடக்கு மாகாணத்திலே – குறிப்பாக வன்னிப் பகுதியிலே எமது மக்கள் போக்குவரத்து வசதிகளின்மை காரணமாக தங்களது வாழ்நாளில் பல வருடங்களாக வீதிகளில் நடந்தே காலத்தைக் கழித்து வருகின்றனர் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இடம்பெற்ற போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு, துறைமுகங்கள், கப்பற்துறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சு ஆகிய அமைச்சுகள் தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

முல்லைத்தீவு மாவட்டத்தை எடுத்துக் கொண்டால், சுமார் 124 பாடசாலைகள் செயற்பட்டு வருகின்ற நிலையில், அதில் 70க்கும் மேற்பட்ட பாடசாலைக்குச் செல்வதற்கென போக்குவரத்து வசதிகள் இல்லை என்றே தெரிய வருகின்றது.

கிளிநொச்சி மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் இதே நிலைமையே காணப்படுகின்றது. இதன் காரணமாக மாணவர்கள், ஆசிரியர்கள் மட்டுமன்றி அந்தப் பகுதிகளில் வாழுகின்ற மக்களும் போக்குவரத்து வசதியின்றி பெரும் சிரமங்களை அடைந்து வருகின்றனர்.

இலங்கை போக்குவரத்து சபையின் வடக்கு சாலையினால் அதிகளவிலான வருமானங்களை ஈட்டுவதாகக் கூறும் நிலையில், வடக்கு மக்களின் பொதுப் போக்குவரத்து சேவை தொடர்பில் போதிய அக்கறை காட்டாத நிலைமை தொடர்ந்து கொண்டே வருகின்றது.

எனவே, வன்னிப் பகுதியில் குறிப்பாக மீள்குடியேற்றப்பட்ட பகுதிகள் உள்ளிட்ட பகுதிகளில் இலங்கை போக்குவரத்துச் சபையின் ஊடான போக்குவரத்துச் சேவைகளை பொதுப் போக்குவரத்துச் சேவை என்ற அடிப்படையில், விரிவுபடுத்துவதற்கும், அதிகரிப்பதற்கும், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும் என்பதனை இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.

அதேநேரம், கொழும்பிலிருந்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை நோக்கியதான இலங்கைப் போக்குவரத்து சபையின் பேருந்துகளுக்கான ஆசன முற்பதிவுகளை மேற்கொள்கின்றபோது, பயண அனுமதிச் சீட்டுக்கும், முற்பதிவுக்குமான கட்டணத்தைவிட அதி கூடிய நிதி பொது மக்களிடமிருந்து அறவிடப்பட்டு வருவதாக எமது மக்களிடமிருந்து தொடர்ந்தும் முறைப்பாடுகள் கிடைத்து வருகின்றன. இது தோடர்பில் கௌரவ அமைச்சர் அர்ஜூன ரனதுங்க அவர்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

Related posts: