வடக்கு மகாணத்திற்கென நீர்ப்பாசன கொள்கைத் திட்டம் ஒன்று அவசியம் – டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!
Wednesday, November 22nd, 2017
வடபகுதியின் விவசாயத்துறையினை மீண்டும் தூக்கி நிறுத்த வேண்டுமானால், வடக்கு மகாணத்திற்கென நீர்ப்பாசன கொள்கைத் திட்டம் ஒன்று அவசியமாதாகும் – என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்றைய தினம் விவசாயம், மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல், நீர்ப்பாசனம் மற்றும் நீர் வழங்கல், ஆரம்பக் கைத்தொழில் ஆகிய அமைச்சுக்கள் தொடர்பில் நாடாளுமன்றில் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் –
எமது நாட்டில் அதிகரித்து வருகின்ற சனத்தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியினைப் பெருக்க வேண்டியது அத்தியவசியமானதொரு ஏற்பாடாக இருத்தல் வேண்டும். அண்மைக்காலமாக அரிசியை இறக்குமதி செய்து கொண்டிருப்பதுபோல், ஏனைய அனைத்து உணவுப் பொருட்களுக்கும் இறக்குமதியினையே நம்பி வாழுகின்ற சூழல் ஏற்படுமானால், அது எமது பொருளாதார வளர்ச்சிக்கு பாரிய பாதகத்தினை ஏற்படுத்துவது மட்டுமல்லாது, எமது மக்களில் பெருந்தொகையினரை பட்டினிக்குள்ளும், வாழ்வாதாரங்கள் இன்றிய வெறுமைக்குள்ளும் தள்ளிவிடும் என்பது உறுதியாகும். எனவே, எமது நாட்டின் விவசாய உற்பத்திகளில் பெரும் பங்களிப்பினை வழங்கி வந்திருக்கும் எமது பகுதியின் விவசாயத்துறையினை மீண்டும் தூக்கி நிறுத்த வேண்டுமானால், வடக்கு மகாணத்திற்கென நீர்ப்பாசன கொள்கைத் திட்டம் ஒன்று அவசியமாகும்.
அந்தவகையில் பார்க்கின்றபோது, விவசாய பொருட்களின் இறக்குமதி, விவசாய உள்ளீடுகளின் விலையுயர்வு, முறையான நீர்ப்பாசன வசதியின்மை, உயர் ரக விதைகள் இன்மை, கிருமிகள் மற்றும் நோய்களின் தாக்கங்கள், நிலத் துண்டாக்கம் – சிறியளவு நிலப் பயன்பாடு என்பவையே எமது விவசாய செய்கையைப் பாதிக்கின்ற பிரதான காரணிகளாக இருக்கின்றன.
எனவே, மேற்படி பிரதான தடைகளை அகற்றக்கூடிய வழிவகைளை இந்த அரசு மேற்கொள்வதற்கு முன்வர வேண்டியது அவசியமாகும்.
அத்துடன், விவசாய தொழில்நுட்பத்தை விரிவாக்கஞ் செய்தல், வர்த்தக சேவையை வலுவூட்டல், தனியார் முயற்சிகளை பலப்படுத்துதல், விவசாய தகவல் தொழில்நுட்பத்தினை விருத்தி செய்தல், விவசாய வளங்களைப் பாதுகாத்தல் போன்ற ஏற்பாடுகளையும் மேற்கொள்வதற்கு முன்வர வேண்டும்.
இங்கு, விவசாய வளங்களைப் பாதுகாத்தல் எனும்போது, அவை அபகரித்துச் செல்லப்படுதலும், படையினரின் தேவைகளுக்காக என முடக்கி வைத்திருப்பதுமான செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும் என்பதை மீண்டும், மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றேன்.
Related posts:
|
|
|


