வடக்கின் மின்சார சபை எதிர்கொள்ளும் ஆளணிகளின் பற்றாக்குறைக்கு நிரந்தர தீர்வு வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Tuesday, December 5th, 2017

மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு  தொடர்பில் எடுத்துக் கொண்டால் வடக்கு மாகாணத்தைப் பொறுத்த அளவில் ஆளணிகளின் பற்றாக்குறைகளே மாபெரும் பிரச்சினையாக இருப்பதாகத் தெரிய வருகின்றது.

அந்த வகையில் மின்மானி வாசிப்போர் பற்றாக்குறை பாரியளவில் நிலவுவதாகவே தெரிய வருகின்றது. இதனால் மாதாந்த மின் கட்டணப் பட்டியல்கள் பயனாளிகளுக்குக் கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டு வருகின்றன என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மின்வலு புதுப்பிக்கத்தக்க சக்தி பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி கடந்றொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அபிவிருத்தி ஆகிய மூன்று அமைச்சுக்கள் தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

முல்லைமாவட்டத்தில் புதுக்குடியிருப்பு வேணாவில் ஆகிய பகுதிகளில் மீள்குடியேறிய மக்களுக்கு கடந்த ஒக்டோம்பர் மாதம் வரையில் ஒரு வருட காலமாக மின் கட்டணப் பட்டியல் கிடைக்கப்பட்டிருக்கவில்லை என அம் மக்கள் முறையிட்டிருக்கின்றனர்.

கிளிநொச்சி மாவட்டத்திலும் சில பகுதிகளுக்கு கடந்த வருடம் ஒக்டோம்பர் மாதத்திலிருந்து, இந்த வருடம் ஒக்டோம்பர் மாதம் வரையில் மின் கட்டணப் பட்டியல் வழங்கப்பட்டிருக்கவில்லை எனத் தெரிய வருகின்றது.

மன்னார் மாவட்டத்தில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஆண்டான்குளம், ஆட்காட்டிக்குளம் உள்ளிட்ட சில கிராமங்களுக்கு மின் வாசிப்பாளர்கள் மூன்று மாதங்களுக்கு ஒரு தடவையே வருவதாக அம் மக்கள் தெரிவிக்கின்றனர். யாழ்ப்பாணத்திலும் இதே நிலையே எற்பட்டுள்ளதாக மக்கள் முறையிடுகின்றனர்.

அந்த வகையில் வடக்கு மாகாணத்தில் பல பகுதிகளிலும் இத்தகைய நிலைமைகள் பரவலாகக் காணப்படுவதுடன்;, குறிப்பாக மீள்குடியேற்ற பகுதிகள் மற்றும் தொலைதூரப் பகுதிகளிலேயே இந்நிலை மிக அதிகமாகக் காணப்படுவதாகத் தெரிய வருகின்றது.

எமது மக்களின் நிலைமைகள் குறித்து இங்கு இருப்பவர்களுக்கு நன்கு தெரியும் என்றே நம்புகின்றேன். இதை கௌரவ அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவர்களும் நன்கறிவார்கள் என தெரிவித்துள்ளார்.

Related posts: