மர்ஹூம் அஸ்ஸெய்யித் அலவி மௌலானாவின் நாமத்தை கொழும்பில் ஒரு வீதிக்கு சூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்!  – டக்ளஸ் தேவானந்தா

Wednesday, June 22nd, 2016

நம் நாட்டின் மூத்த தொழிற்சங்கவாதியும், மேல் மாகாணத்தின் முன்னாள் கௌரவ ஆளுநருமான மர்ஹூம் அஸ்ஸெய்யித் அலவி  மௌலானா அவர்களது நாமத்தை கொழும்பிலுள்ள ஒரு முக்கிய வீதிக்கு சூட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் செயலாளர் நாயகம் அவர்கள் மேலும் கருத்து தெரிவிக்கையில், எமது நாட்டின் மூத்த தொழிற்சங்கவாதியான அன்னார் 1948ம் வருடம் முதல் அப்பணியை திறம்படச் செய்வதில் சளைக்காது உழைத்தவர். 1956ம் வருடம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து தனது அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்த அவர் தனது இறுதி மூச்சு வரை அதே கட்சியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருந்தவர். பிரதி அமைச்சராகவும், அமைச்சராகவும் பணியாற்றி, பின்னர் மேல் மாகாணத்தின் ஆளுநராக தொடர்ந்து 13 வருடங்கள் பதவி வகித்தவர்.

எல்லோருடனும் பண்புடன் பழகும் குணம் வாய்த்த மௌலானா அவர்கள், நாட்டின் மூவின மக்களினதும் அன்பினைப் பெற்றவராக விளங்கியவர். எவருமே குறை கூறாத வகையில் தனது நடத்தையைப் பின்பற்றிய ஒரு நல்ல மனிதராக வாழ்ந்து காட்டிய பெருமகன். மும்மொழி பாண்டித்தியம் பெற்ற அன்னார், மும்மொழிகளிலும் அடுக்கு மொழியில் கதைக்கும் ஆற்றலை தன்னகத்தே கொண்டிருந்த சிறப்புக்குரியவர்.

அன்னாரைக் கௌரவிப்பதற்கு இந்த நாடு கடமைப்பட்டிருக்கிறது. அந்த வகையில் மர்ஹூம் அஸ்ஸெய்யித் அலவி மௌலானா அவர்களது நாமத்தை கொழும்பிலுள்ள ஒரு முக்கிய தெருவுக்கு சூட்ட இந்த அரசும், கொழும்பு மா நகர சபையும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related posts:

யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இழப்பீட்டுக் கொடுப்பனவுகளு...
யாழ். சிறுத்தீவினை அண்டிய கடற் பிரதேசத்தில் நீர் வேளாண்மையை அபிவிருத்தி செய்வது தொடர்பில் அமைச்சர் ட...
கொரோனா தடுப்பூசி வழங்கு நிலையங்களை நேரில் சென்று கண்காணிக்கும் அமைச்சர் டக்ளஸ் – மக்களுக்கு தடுப்பூச...