புகையிலையே தடைசெய்யப்பட்ட நாட்டில் கேரளக் கஞ்சாவின் வருகை சீரழிவை தருகின்றது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Thursday, June 7th, 2018

2020ஆம் ஆண்டில் போதைப் பொருளை ஒழிப்பதாகக் கூறிக்கொண்டு, புகையிலைச் செய்கையைத் தடை செய்வதற்;கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், கேரள கஞ்சா இந்த நாட்டுக்குள் நாளாந்தம் மிக அதிகளவில் கடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அந்தவகையில் ‘போதைப் அற்ற நாடு’ என்பது வெறும் பிரச்சாரங்களில் மட்டுமல்லாது, அதனை ஒழிக்கக்கூடிய ஏற்பாடுகள் வலுவுள்ளதாக மேற்கொள்ளப்படுதல் குறித்தும் அதிக அவதானம் செலுத்தப்படல் வேண்டும் – என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர்நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்று நடைபெற்ற மதுவரிக்; கட்டளைச் சட்டத்தின் கீழான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

இன்று இந்த நாட்டில் போதைப்பொருட்களை ஒழிக்கின்ற அல்லது கட்டுப்படுத்துகின்ற நிறுவனங்களில் கடமையாற்றுகின்றவர்கள் எந்தளவிற்கு அர்ப்பணிப்புடன் அத்துறையில் ஈடுபட்டுள்ளனர்? என்பதும் எமது மக்கள் மத்தியில் கேள்விக்குறியாகவே இருந்து வருகின்றது.
இதைவிட தற்போது போதை மாத்திரைகளும் இந்த நாட்டுக்குள் அதிகளவிலான பாதிப்பை உண்டு பண்ணுகின்ற அளவிற்கு வியாபித்து வருவதாகவே தெரிய வருகின்றது. இந்த வகையில் சுமார் 15க்கும் மேற்பட்ட போதை மாத்திரைகள் நாட்டுக்குள் புழக்கத்தில் இருப்பதாகவே கூறப்படுகின்றது.

இந்த நாட்டில் மதுபாவனையும் அதிகரித்தே காணப்படுகின்றது. இதற்கு பிரதான காரணமாக கடந்த வரவு ௲ செலவுத் திட்டத்தில் பியருக்கானவிலை குறைப்பு சுட்டிக்காட்டப்படுகின்றது.

சட்டவிரோத மது பாவனையை அல்லது உற்பத்தியைக் கட்டப்படுத்துவது மற்றும் உல்லாசப் பிரயாணிகளின் வசதிகள் கருதி என மேற்படி பியர் விலை குறைப்பிற்கு பிரதான காரணங்கள் கூறப்பட்டன.

இந்த நாட்டில் சட்டவிரோத மதுபான பாவனை தொடர்பிலோ அல்லது உற்பத்தி தொடர்பிலோ தேசிய மட்டத்திலான புள்ளி விபரங்கள் இல்லை என்றாலும், தொழில்நுட்ப ரீதியிலான துணை தேசிய ஆய்வுகளைப் பொறுத்தமட்டில் சட்டவிரோத மதுபான பாவனையில் ஈடுபடுவோர் இந்த நாட்டில் 10 வீதத்திற்கும் குறைவானவர்கள் என்றே கூறப்படுகின்றது. இந்த நாட்டில் சுமார ;40 வீதமானோர் மது பாவனைக்கு உட்பட்டுள்ள நிலையில், அதில் 10 வீதத்திற்கும் குறைவான – அதாவது சுமார் 6 – 7 வீதமானோர் மட்டுமே சட்டவிரோத மதுபாவனைக்கு உட்பட்டுள்ள நிலையில், பியர் விலைக் குறைப்பானது சட்டவிரோத மது பாவனையாளர்களை அதிலிருந்து விடுபட எந்தளவிற்கு அழுத்தங்களைக் கொடுக்கும் என்பது கேள்விக்குறியான விடயமாகும்.

அதே நேரம், உல்லாசப் பயணிகளின் வசதியினை கருதி பியர் விலையின் குறைப்பு ஏற்படுத்தப்பட்டதெனில், உல்லாசப் பிரயாணிகளுக்கான சுற்றுலா மையங்களை அமைத்து, அதற்குள் விசேட ஏற்பாடாக மேற்படி விலைக் குறைப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். அதைவிடுத்து, உல்லாசப் பிரயாணிகளுக்கு என்று கூறிக் கொண்டு, நாடாளாவிய ரீதியில் அதற்கான விலையைக் குறைத்ததே இன்று நாட்டில் மதுபான பாவனை அதிகரிப்புக்கு பிரதான காரணமாக இருக்கின்றது என்றே தெரிய வருகின்றது.

பியருக்கு விதிக்கப்பட்டிருந்த வரியானது 50 வீதத்தினால் குறைக்கப்பட்டதன் காரணமாக 1995ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்த நாட்டில் மது பாவனையானது அதிகரித்தே காணப்பட்டது. 2006ஆம் ஆண்டில் புகையிலை மற்றும் மதுசாரம் மீதான கொள்கை இந்த நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டதன் காரணமாக 2007ஆம் ஆண்டு முதல் இந்த நாட்டில் மதுபான பாவனையில் வீழ்ச்சி ஏற்பட்டிருந்தது.

2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னர், மதுபான உற்பத்திகள் வடக்கு, கிழக்கு மாகாணங்களை நோக்கி மிக அதிகளவில் நகர்த்தப்பட்டதன் காரணமாக, 2010ஆம் ஆண்டு முதல் மீண்டும் இந்த நாட்டில் மதுபான பாவனையானது அதிகரிக்க ஆரம்பித்து, கடந்த கால யுத்தப் பாதிப்புகளைவிட மிக அதிகளவிலான பாதிப்புகளை ஏற்படுத்துகின்ற அபாயமாக இன்று வடக்கு, கிழக்கு உட்பட முழு நாட்டையுமே ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்ற நிலையில், தற்போதைய பியர் விலைக் குறைப்பும் அதற்கு பக்க வாத்தியமாக இருந்து, மதுபாவனையில் இந்த நாடு உலகில் 4வது இடத்தைப் பிடித்துக் கொண்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts: