நினைவேந்தல் நிகழ்வை பொது அமைப்பு நடத்துவதே பொருத்தமாக இருக்கும்- -செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Thursday, May 24th, 2018

யுத்தத்தில் பலியான உறவுகளை நினைவு கூரும் நிகழ்வை தலைமை ஏற்று நடத்துவதற்கு பொருத்தமான பொதுவான அமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும். அந்த அமைப்பின் செயற்பாடானது, அரசியல் கட்சிபேதங்களைக் கடந்ததாகவும், பிரதேச வேறுபாடுகளைக் கடந்ததாகவும் செயற்படவேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் –

கடந்த மே 18ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்சியின் ஏற்பாடுகளில் பல குறைபாடுகள் இருந்ததாகவும், தீர்மானமான நிகழ்ச்சி நிரல் இல்லாமல் அந்த நிகழ்வுகள் பல தரப்பினருக்கிடையேயான இழுபறிகளுக்கு மத்தியில் எழுந்தமானமாக நடைபெற்றதாகவும், பிரதேச பாகுபாடுகள் பார்க்கப்பட்டு அஞ்சலி செலுத்த ஒன்று கூடிய பலர் அவமானப்படுத்தப்பட்டதாகவும் கவலை தரும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

அன்றைய தினத்தில் இன உணர்வாளர்களையும், முன்னாள் போராளிகளையும், உறவுகளைப் பறிகொடுத்தவர்களையும், மக்களின் பிரதிநிதிகளையும் அப்புறப்படுத்திவிட்டு, நினைவேந்தல் நிகழ்வை தனிப்பட்ட ரீதியில் எவரேனும் நடத்துவது பொருத்தமாக இருக்காது.

உறவுகளை இழந்த தமிழ் மக்கள் தமது உறவுகளை நினைத்து சுடரேற்றவும், மலர்கள் தூவி அக வணக்கம் செலுத்தவும் உரித்துடையவர்கள். அந்தக் கடமையைச் செய்வதற்கு எவரும் தடையாகச் செயற்படமுடியாது. அவ்வாறு எவரேனும் செயற்படுவது கண்டனத்திற்குரியதாகும். இதுபோன்ற குறைபாடுகள் கடந்த 18ஆம் திகதி நடைபெற்றதாகத் தெரியவருகின்றது.

இவ்வாறான விமர்சனங்களும், மனவருத்தங்களும் எதிர்காலத்தில் ஏற்படாதவாறு தமிழ் மக்கள் ஒற்றுமையாக ஒரே நோக்கத்துடன் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நினைவேந்தல் நிகழ்வு நடைபெறவேண்டும்.

நடந்து முடிந்த தவறுகளைக் கடந்து எதிர்காலத்தில் எவ்வாறு இறந்தவர்களை கௌரவமாக நினைவு கூறுவதற்கான கடமையை நிறைவேற்றுவது என்பதையும், தமிழர்கள் அனைவரும் மாகாண மற்றும் அரசியல் வேறுபாடுகளுக்கப்பால் ஒன்றுபட்டு அந்த நிகழ்வுக்கு அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வது என்பதையும் திட்டமிட்டு செயற்படுத்தவேண்டும்  எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts:

ஆபத்தில் தவித்தவர்களை விரைந்து மீட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு மீண்டவர்கள் நன்றி தெரிவிப...
வடக்கிலுள்ள தனியார் பாதுகாப்பு முகவர் நிலையங்களில் உழைப்பு சுரண்டல் நடைபெறுகின்றது – நாடாளுமன்றில் ட...
கடற்றொழில்சார் ஏற்றுமதியாளர்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேற்றப்படும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உற...

தேசிய கொள்கை அமைப்பதனூடாகவே விவசாயிகள் நன்மை பெறமுடியும் - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்...
உரிய காலத்தில் இரணைமடுக் குளத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டிருந்தால் அழிவுகளையும் சேதங்களையும் தடுத்...
இயலுமானவரை மக்களது பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க உழைக்கவேண்டும் – கட்சியின் நல்லூர் பிரதேச...