இரணைமடு குளத்தால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்க வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!

Wednesday, January 9th, 2019

கடந்த வருடம் டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி கிளிநொச்சியில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் தொடர்பாக சில விடயங்களை, குறிப்பாக இவ் அனர்த்தம் ஏற்பட்டதற்குரிய காரணி மற்றும் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பாக இச்சபையின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகின்றேன்.

குறுகிய நேரத்தில் ஏற்பட்ட பெருமழையே இதற்கு காரணம் எனக் கூறி பொறுப்புவாய்ந்த சில அதிகாரிகள் தப்பித்துக்கொள்ள முயல்கின்றனர். ஆனால், உண்மை நிலை அதுவல்ல என்றே தெரிய வருகின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற இரசாயன ஆயுதங்கள் சமவாயம் தொடர்பான திருச்சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

இரணைமடுக் குளம் 36 அடி வரை நீரை தேக்கக் கூடியதாக, அதாவது ஒரு இலட்சத்து இருபதாயிரம் ஏக்கர் அடி நீரை தேக்கி நிற்கக் கூடிய முறையில் புனரமைக்கப்பட்டு, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் திறந்துவைக்கப்பட்டது.

ஜனாதிபதி அவர்களால் வான்கதவுகள் திறக்கப்பட்ட அன்றைய தினமே இரணைமடுக் குளம் முழுமையாக நிரம்பிய நிலையிலேயே இருந்துள்ளது. அன்று வான்பாய்ந்தபின் வான்கதவுகள் மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவரப்பட்டதாக அறிகின்றேன். இதன்போது எறதாழ 9 அங்குலத்திலிருந்து ஒரு அடி வரையிலான நீர் படிப்படியாக வெளியேற்றப்பட்டுள்ளது எனத் தெரிய வருகின்றது.

இந்நிலையில், அன்றிலிருந்து 21 ஆம் திகதி மாலைவரை பெய்த மழை வீழ்ச்சி காரணமாக மீண்டும் குளத்தின் நீர்மட்டம் அதன் உச்ச எல்லையாகிய 36 அடியை அண்மித்திருந்துள்ளது என்றும்,

இதனைத் தொடர்ந்து 21 ஆம் திகதி இரவு குறுகிய நேரத்தில் பெய்த கனமழை காரணமாக குளத்தின் நீர்மட்டம் 40 அடியைத் தாண்டி உயர்ந்து, அணையையும் மேவி வழிந்தோடிக்; கொண்டிருந்தது என்றும் தெரிய வருகின்றது.

அதன்பின் விழித்தெழுந்த அதிகாரிகள் அதிகாலை அளவில் அவசர அவசரமாக வான்கதவுகளை திறக்க முற்பட்டபோது அதிக நீர் நிரம்பியதன் அமுக்கம் காரணமாக மின்னியக்கியின் மூலமான வான்கதவுகள் இயங்க மறுத்துள்ளன. இதனால் கைகளினால் அவற்றை திறந்துள்ளனர். சரியான முறையில் நீர் முகாமைத்துவம் செய்;யப்படாது, அதாவது குறுகிய இடைவேளையில் வான்கதவுகளை படிப்படியாக திறந்து முகாமைத்துவம்  செய்யப்படாமல் திடீரென, ஒரேநேரத்தில்  வான்கதவுகள் திறந்ததன் விளைவால் பெருமளவான நீர் குறுகிய நேரத்தில் அதிவேகத்துடன் வான் பாய்ந்துள்ளது. இங்கு அவதானிக்க வேண்டியது என்னவெனில்,

இரணைமடுக் குளத்திற்கு பொறுப்பான அதிகாரிகள் ஜனாதிபதி அவர்களினால் இரணைமடுக் குளம் திறந்துவைக்கப்பட்ட பின்பு, அதாவது டிசம்பர் மாதம் 7 திகதியிலிருந்து, நீரின் மட்டத்தை சரியாக முகாமைத்துவம் செய்திருந்தால் இவ்வாறான பேரழிவை தடுத்திருக்கலாம்.

அழிவுகளின் பின் கிளிநொச்சி அரச அதிபரினால் தயாரிக்கப்பட்ட அறிக்கையின் பிரகாரம் கிளிநெச்சியில் மழை வெள்ளத்தினால் ஏற்பட்ட அனர்த்தத்திலும் பார்க்க வான் வேகமாகப் பாய்ந்ததனால் ஏற்பட்ட அனர்த்தமே அதிகமெனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிளிநொச்சியைச் சேர்ந்த ஒரு தமிழ் அரசியல்வாதி குளத்தின் நீர் முகாமைத்துவத்தில் தலையிட்டு, தனது குறுகிய நோக்கம் கருதி  வான்கதவுகளை  திறந்துவிடவேண்டாம் என அழுத்தம் கொடுத்ததாக கதைகள் வெளியாகிவருகின்றன.

அரசாங்கம், அதுகாலவரை 82 ஆயிரம் ஏக்கர் அடி நீர் சேகரித்துக்கொண்டிருந்த இரணைமடுக் குளத்தை, ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் ஒரு இலட்சத்து இருபது ஆயிரம் ஏக்கர் அடி நீரை சேகரிக்கும் நிலைக்கு கொண்டு வந்து, குறிப்பிட்ட ஒரு லட்சத்து இருபதாயிரம் ஏக்கர் அடி நீர் சேகரிக்கப்பட்டதன் பின்னர் அதில் வெறும் 8 ஆயிரத்து 100 ஏக்கர் அடி நீரை வருடத்திற்கு யாழ்ப்பாணத்துக்கு குடிநீராக வழங்க இருந்த புனரமைப்பு திட்டத்தையும் இதே அரசியல்வாதி தான் வடக்கு மாகாணசபையுடன் இணைந்து நிறுத்திய பெருமைக்குரியவர்.

கடந்த 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலையே இரணைமடுக் குளம் நிரம்பிய நிலையில் இருந்தும், தொடர்ந்தும் மழை பெய்துகொண்டிருந்த நிலையில் அதன் விளைவாக எந்நேரத்திலும் வான்கதவுகள் திறக்கவேண்டியிருந்தும்; வான் பாயும் பகுதிகளில் வாழும் மக்களுக்கு முன்னெச்சரிக்கையினை கொடுக்கும்படியான அறிவித்தல்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு குளத்தின் முகாமைத்துவத்திற்கு பொறுப்பானவர்கள் கொடுத்ததற்கான எவ்வித சான்றுகளும் இல்லை என்றே கூறப்படுகின்றது.

இதன் விளைவாகவே பலர் பாரியளவில் தமது உடமைகள், ஆவணங்கள் மற்றும் கால்நடைகளையும் இழக்க நேரிட்டுள்ளது. ஒரு தனிநபர் மட்டும் 45 மாடுகளை இழந்ததாக அறியவருகின்றது.

அதுமட்டுமல்ல, குளத்தின் நீர் நிர்வாகத்திற்கு பொறுப்பானர்கள் 21 ஆம் திகதி; மாலை இரணைமடுக் குளமும்; அதற்கு நீர்வழங்கும் ஏனைய குளங்களும்; நிரம்பிய நிலையில்,  தொடர்  மழை பெய்துகொண்டிருந்தும் அவசியமேற்பட்டால் வான்கதவுகளை திறக்கவேண்டிய முன்னேற்பாடுகள் எதனையும் மேற்கொள்ளாதிருந்ததன்  விளைவே நீர்மட்டம் ஏறத்தாள 40 அடி வரை சென்ற நிலையில் வான்கதவுகளை அதிகாலை அவசர அவசரமாக அதுவும் மின்சார வான்கதவுகள் அதிக நீர் கொள்ளளவினால் செயலிழந்த பின் கையினால் திறக்க நேரிட்டது. குள நிர்வாகத்திற்கு பொறுப்பான உயர் அதிகாரிகள் எவரும் 22 ஆம் திகதி காலைவரை சம்பவ இடத்திற்கு செல்லவில்லை என அறிகின்றேன்.

இது தொடர்பாக பூரண விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டும் என மாண்புமிகு பிரதமர் அவர்கள் கிளிநொச்சி வந்திருந்தபோது நான் கேட்டிருந்தேன். அதற்கு அங்கு பிரசன்னமாகியிருந்த அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் இணக்கம் தெரிவித்திருந்தார். அத்துடன் அன்றைய கூட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணமாக ரூபா 10 ஆயிரம் வழங்குவதற்கு முடிவெடுக்கப்பட்ட போது அதனை ரூபா 25 ஆயிரமாக அதிகரிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டிருந்தேன். அதே கோரிக்கையினை மீண்டும் நான் இங்கு வலியுறுத்துகின்றேன்.

Related posts:

133 மில்லியன் வரிப்பணத்தை வட மாகாணசபைக்கு விடுவித்துக் கொடுங்கள்  - நாடாளுமன்றத்தில் டக்ளஸ் எம்.பி!
செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஈ.பி.டி.பி. யின் கிளிநொச்சி மாவட்ட விசேட மாநாடு ஆரம்பம்!
எமது வெற்றிக்காக வாக்களிக்காதவர்கள் நடைமுறை ரீதியாக தோற்றுப் போயிருக்கின்றார்கள் – அமைச்சர் டக்ளஸ் ச...