நாம் அதிகாரத்தை கைப்பற்ற நினைப்பது மக்கள் சுதந்தரமாக வாழ்வதற்கே அன்றி நாம் சுகபோகங்களை அனுபவிப்பதற்கல்ல – டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Sunday, July 1st, 2018

ஆட்சி அதிகாரங்களை கைப்பற்றி அரசியல் சுகபோகங்கள் காண்பது எமது நோக்கமல்ல. மக்கள் நாளாந்தம் எதிர்கொண்டுவரும் அவலங்களிலிருந்தும் துயரங்களிலிருந்தும் மீட்டு நிம்மதியான ஒரு வாழ்வியல் சூழ்நிலைக்கு இட்டுச் செல்வதற்காகவே அவ்வதிகாரங்களை நாம் கோருகின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் வன்னி மாவட்டத்தின் கிளிநொச்சி மன்னார் பிரதேச மக்கள் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்-

வடக்கு மாகாணசபையை ஆட்சி செய்யும் சந்தர்ப்பம் எமக்கு கிடைத்திருந்தால் எமது மக்கள் எதற்கெடுத்தாலும் வீதிக்கிறங்கி போராடும் சூழ்நிலை ஏற்பட்டிருக்காது.

மாறாக மாகாணசபையின் அதிகாரங்களைக்கொண்டு மக்களது வாழ்வியல் தேவைப்பாடுகளையும் சமூக மேம்பாடுகளையும் கட்டியெழுப்பி புதிய எழுச்சியுடன் வளமான தேசமாக எமது மாகாணத்தை மாற்றியமைத்துக்  காட்டியிருப்போம்.

அந்தவகையில் இன்று மக்களிடம் காணப்படுகின்ற தெளிவான நிலைப்பாடானது எதிர்காலத்தில் வரவுள்ள சந்தர்ப்பங்களை சரியாக பயன்படுத்திக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகின்றது.

அவ்வாறு அந்த சர்தர்ப்பம் மக்களால் முழுமையாக எமக்கு வழங்கப்படும் பட்சத்தில் எமது மக்கள் அபிவிருத்தியில் மட்டுமல்ல அரசியல் உரிமையிலும் வெற்றிகண்டவர்களாக வாழக்கூடிய சூழ்நிலையை நாம் உருவாக்கிக் காட்டுவோம். அதற்கான ஆற்றலும் ஆளுமையும் மட்டுமல்ல தன்நம்பிக்கையும் என்னிடம் உண்டு என்றும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்தார்.

இதன்போது குறித்த மாவட்டங்களின் பிரதிநிதிகள் தமது பிரதேசங்களில் காணப்படும் பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் செயலாளர் நாயகத்திடம் தெரியப்படுத்தியிருந்தனர்.

குறித்த பிரதிநிதிகளின் கோரிக்கைகளை கருத்திற்கொண்ட செயலாளர் நாயகம் காலக்கிரமத்தில் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பெற்றுத்தருவதற்கு முயற்சிப்பதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது கட்சியின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாக செயலாளரும் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான வை.தவநாதன் உள்ளிட்ட கட்சியின் மன்னார் கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய முக்கியஸ்தர்களும் பிரதேச சபை உறுப்பினர்களும் உடனிருந்தனர்.

IMG_20180701_112357

Related posts: