தோழர் பிடல் கஸ்ரோ என்ற வல்லமையின் வரலாறு எம்மிடம் இருந்து விடைபெற்றுச் சென்று விட்டது – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா!

Thursday, December 1st, 2016

தோழர் பிடல் கஸ்ரோ என்ற வல்லமையின் வரலாறு எம்மிடம் இருந்து விடைபெற்றுச் சென்று விட்டது.உலக வல்லாதிக்கத்தின் உத்தரவுக்குப் பணியாத வலிய குரலின் உயிர் மூச்சு நின்று போனது..

உலகெங்கும் உள்ள ஒடுக்கப்படுகின்ற தேசங்கள் யாவும் இன்று அந்த இழப்பின் துயரத்தில் ஆழ்ந்திருக்கிறது.

உரிமை கேட்டு எழுந்து வந்த உலக மக்கள் யாவரும் தமது உரிமைப்போரின் வழிகாட்டியை இழந்து விட்ட துயரத்தை சுமந்து கொண்டிருக்கிறார்கள்.

தோழர் பிடல் காஸ்ரோ அவர்களுக்கு இந்த நாடாளுமன்றத்தில் அஞ்சலி செலுத்த எமக்கு வாய்ப்பு வழங்கியமைக்கு முதலில் நான் நன்றி செலுத்துகிறேன்.

தோழர் பிடல் காஸ்ரோ அவர்கள் தனியே கியூபா நாட்டு மக்களின் தலைவர் மட்டுமல்ல…

கியூபா தேசத்தின் வேர்களில் இருந்து எழுந்து வளர்ந்தாலும் அகிலத்தின் திசையெங்கும் தன் விழுதுகளைப் பரப்பிய பெரு விருட்சம் தோழர் பிடல் காஸ்ரோ.

எங்கெல்லாம் ஒடுக்கப்படுகின்ற மக்கள் வாழ்கின்றார்களோ அங்கெல்லாம் அவர்களின் உரிமைக் குரலாக ஒலித்தவர் தோழர் பிடல் அவர்கள்.

கியூபா தேசத்தின் கரும்புத்தோட்டமொன்றில் பிறந்த இரும்பு மனிதர் தோழர் பிடல் கஸ்ரோ அவர்கள் உழைக்கும் மக்களுக்காகவே தன்னை வருத்தி உழைத்தவர்.

கியூப நாட்டின் சர்வாதிகாரியாக இருந்த கொடுங்கோலன் பாட்டிஸ்ட்டாவின் ஒடுக்கு முறைகளை உடைத்தெறிந்து மாபெரும் மக்கள் புரட்சியையே நடத்திக் காட்டியவர் தோழர் பிடல் கஸ்ரோ.

அதன் மூலம் உலகெங்கும் உள்ள ஒடுக்கப்படுகின்ற தேசங்களின் மக்களுக்குப் புரட்சியின் வெற்றி குறித்த நம்பிக்கையை விதைத்தவர்.

பொதுவுடமை தத்துவத்தின் இரட்டை நாயகர்களாக எவ்வாறு கார்ல் மாக்ஸ் மற்றும் எங்கெல்ஸ் ஆகிய இருவரும் இருந்தார்களோ.

அது போன்றுதான் தோழர் பிடல் கஸ்ரோ அவர்களும் தோழர் சேகுவரா அவர்களும் உலக மானிட விடுதலையின் இரட்டைக்குழல் துப்பாக்கியாக எழுந்து நின்றார்கள்.

எல்லோரும் அவரை கியூபா தலைவர் பிடல் கஸ்ரோ என்றே அழைக்கின்றார்கள். ஆனாலும் நாம் அவரை ஒரு தலைவராக மாத்திரம் அன்றி உலக மக்களின் உன்னத தோழராகவே பார்க்கிறோம்.

சுயநலமில்லா தலைவர் அவர் தான் தலைமை ஏற்று வழிநடத்திய கியூபா தேச விடுதலைப் போராட்டத்தில் தனது சகோதரர் தோழர் ரவுல் காஸ்ரோ அவர்களையும். தனது சகோதரி சாந்த மரியாளையும் தன்னோடு இணைத்துக்கொண்டவர் தோழர் பிடல் கஸ்ரோ.

ஆகவே தன்னலமற்ற அந்தத் தலைவருக்கு தலை வணங்கும் தகுதியை  நான் பெற்றிருப்பதாகவே உணர்கின்றேன்.

ஏனெனில் எமது உரிமைப்போராட்டத்தில் நாமும் எம்முடன் கூட இருந்த இன்னுயிர் தோழர்களை மட்டுமன்றி எனது சகோதரியையும் இன்னொரு சகோதரனையும் கூடஎமது மக்களின் விடுதலைப்போரில் இழந்திருக்கிறேன்.

தோழர் பிடல் கஸ்ரோவின் வரலாறு எமக்கு ஓர் அனுபவம் அவர் எமக்கு ஓர் வழி காட்டி…. மரணத்தையே வெல்லும் சூட்சுமங்களைத் தன்னகத்தே கொண்டவர் தோழர் பிடல் கஸ்ரோ. வல்லரசுகளின் வாசல் அருகில் வரையென நிமிர்ந்து நின்றவர் தோழர் பிடல் கஸ்ரோ. பல நூறு தடவைகள் அவர் கொலை முயற்சிகளில் இருந்து தப்பித்துக்கொண்டவர்

ஆனாலும் மரணத்தைக்கண்டு அவர் ஒரு போதும் அஞ்சி வாழ்ந்த வரலாறு இல்லை. மரணத்தை வெல்லும் சூட்சுமங்களை நாம் தோழர் பிடல் கஸ்ரோ அவர்களிடம் இருந்துதான் கற்றுக்கொண்டவர்கள்.

எமது மக்களின் அரசியலுரிமைக்கு தீர்வு காணாத வரை எனக்கு மரணம் இல்லை என்று நான் கூறி வந்த உண்மையின் கருப்பொருள் தோழர் பிடல் கஸ்ரோ அவர்களே!

வரலாறு எம்மை விடுதலை செய்யும் என்ற தோழர் பிடல் கஸ்ரோ அவர்களது வரலாற்றுப் புகழ் மிக்க நீதிமன்ற உரை கியூபா தேச மக்களுக்கு மட்டுமன்றி.. தோழர் பிடல் காஸ்ரோ அவர்களுக்கு மட்டுமன்றி…

தமிழ் பேசும் மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்து உழைத்து வரும் எமக்கும் ஓர் எதிர்கால நம்பிக்கையை விதைத்து வைத்திருக்கிறது.

தோழர் பிடல் காஸ்ரோவையும் கியூபா தேசத்தையும் சூழ்ந்து கொண்ட சூழ்ச்சிகள் ஏராளம். பெரும் எடுப்பில் பரப்பிவிடப்பட்ட அரசியல் அவதூறுகள் கொஞ்ச நஞ்சமல்ல.

இத்தனை தடைகளுக்கு மத்தியிலும் கியூபா தேசமும் தோழர் பிடல் காஸ்ரோவும் எழுந்து நிமிர்ந்ததுஇ வரலாறு எம்மை விடுதலை செய்யும் என்ற அவரது நம்பிக்கை ஒன்றுதான்.

அந்த நம்பிக்கைதான் எமது குருதியிலும் இன்று வரை கலந்து ஓடிக்கொண்டிருக்கிறது. சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகு கியூபாவின் கதை முடித்தது என்ற கொக்கரிப்புகள் எழுந்தன.

கியூபா ஒரு கீரைப்பாத்தி அளவு தேசம்தான். ஆனாலும் அந்த நாட்டின் சிம்மாசனத்தில் உட்கார்ந்திருந்த தோழர் பிடல் கஸ்ரோ சூரியனின் வலிமைக்கு ஒப்பானவர். ஆகவேதான் அந்த சூரிய தேசம் எந்தச் சூழலிலும் வீழ்ந்து விடாமல் நிமிர்ந்து நின்றது.

தோழர் பிடல் கஸ்ரோ அவர்கள் எமக்கு பரிசளித்த வல்லமைக்கும் மன வலிமைக்கும் நம்பிக்கை தரும் உறுதிக்கும் நிறைவான நன்றிகள்.

கால மாற்றமும் சூழல் மாற்றமும் எமது பாதை எதுவென்பதை தீர்மானிப்பதாக இருந்தாலும்.எமது இலக்கு நோக்கிய இலட்சியப்பயணம் ஒன்றுதான்.

தோழர் பிடல் கஸ்ரோ அவர்களின் மனவுறுதி எமது இலட்சிய பயணமெங்கும் கூட வரும். தோழர் பிடல் கஸ்ரோ அவர்களை எமது ஆழ்மனங்களில் நினைவேந்தி…

தமிழ் முஸ்லிம் சிங்கள உழைக்கும் மக்களின் உரிமைக்காகவும் ஒடுக்கப்படுகின்ற தேச மக்களின் விடியலுக்காகவும்.. இன சமத்துவ ஒற்றுமைக்காகவும்… மகத்தான மானிட விடுதலைக்காகவும் நாம் குரல் கொடுப்போம். உறுதியுடன் உழைப்போம்!…

தோழர் பிடல் கஸ்ரோக்கு நாம் செவ்வணக்கம் செலுத்துகின்றோம்… என தெரிவித்துள்ளார்.

DD

Related posts:

சொந்த நிலங்களை மீட்பதற்கு தமிழ் மக்கள் யாருக்கும் விலை கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை - நாடாளுமன்றில் ...
யாழ் முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து ஆதரவு தெரிவிப்பு!
மக்களின் பலமானஆணை கிடைத்தால் அரசியல் கைதிகளை விடுதலை செய்வேன் - செய்வதைத்தான் சொல்வேன் – அமைச்சர் டக...

சட்டவிரோத செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் விஷேட கூட்...
வடக்கிலும் தொழில்முறைசார் கிரிக்கெட் வீரர்கள் உருவாகுவதற்கான சூழல் உருவாக்கப்படும்!
அபிவிருத்தி திட்டங்களுக்கான அங்குரார்பண நிகழ்வின் கிளிநொச்சி மாவட்ட ஏற்பாடுகள் தொடர்பில் அமைச்சர் டக...