தேர்தல்கால கூச்சல்களை ஏற்பதா? தேர்தலுக்கு பின்னரான நிகழ்வுகளை ஏற்பதா? குழப்பத்தில் தமிழ் மக்கள் –  நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Friday, June 8th, 2018

‘வடக்கிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும்’ – ‘வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்ற எமக்கு வாக்களியுங்கள்’ என வடக்கு மக்களிடம் வாக்கு கேட்கின்ற அரசியலையும், இந்த கோசங்களை அப்படியே சிங்களத்தில் மொழிபெயர்த்து, தென்பகுதியில், ‘இதோ தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் வருகிறது’–‘வடக்கிலிருந்து இராணுவம் வெளியேற்றப்படப் போகின்றது’– ‘நாட்டைப் பாதுகாக்க எமக்கு வாக்களியுங்கள்’ என தென்பகுதி மக்களிடம் வாக்கு கேட்கின்ற அரசியலையும் போல், நாங்கள் ஒருபோதும் அரசியலில் ஈடுபட்டதும் இல்லை. ஈடுபடப் போவதும் இல்லை என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு நிதியம் திருத்தச் சட்டமூல தொடர்பிலான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

அண்மையில் கூட ஒரு விசித்திரமான சம்பம் நடந்திருக்கிறது. வடக்கில் இருந்து படையினரை வெளியேற்றுவோம் என்று கூச்சலிட்டு தமிழ் மக்களின் குருதியை கொதிப்பேற்றி வாக்குகளை அபகரித்துக்கொண்டவர்கள் சுற்று சூழல் பாதுகாப்பு தினத்தில் அதே படையினருடன் இணைந்து மரங்களை நட்டிருக்கிறார்கள். தேர்தல் காலங்களில் இடும் கூச்சல்களை ஏற்பதா?.. அல்லது தேர்தல் முடிந்த பின்னர் அதற்கு மாறாக நடக்கும் இது போன்ற நிகழ்வுகளை ஏற்பதா? இந்த குழப்பங்களில் தமிழ் மக்கள் இன்று மூழ்கியிருக்கிறார்கள்.

இந்த நாட்டில் தேசிய பாதுகாப்பு கருதி இராணுவமானது அந்தந்த மாவட்டங்களின் சனத் தொகைக்கும், இன விகிதாசாரத்திற்கும் ஏற்ப நிலை கொண்டிருக்க வேண்டும் என்பதை நாம் ஆரம்பத்திலிருந்தே வலியுறுத்தி வருகின்றோம். இதில் எவ்விதமான தர்க்கங்களும் எமக்கில்லை.

ஆனால், எமது மக்களின் சொந்த காணி, நிலங்களை விடுவித்து, எமது மக்களுக்குரிய வாழ்வாதார இடங்களை விடுவித்து, அரசுக்கு சொந்தமான – பொருளாதார ரீதியிலான வளங்கள் குன்றிய காணிகளில் அவர்கள் நிலை கொள்ள வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்.

இதைவிடுத்து, வடக்கு – கிழக்கு மகாணங்களில் படையினர் எமது மக்களின் காணி, நிலங்களில் இருந்து கொண்டு, வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும், தேசிய பாதுகாப்பிற்கும் இடையில் என்ன சம்பந்தம் இருக்கின்றது? என்பதே எமது மக்கள் மத்தியில் எழுந்துள்ள கேள்வியாகும்.

படையினரின் இந்த வர்த்தக நடவடிக்கைகள் என்பது வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மட்டுமல்ல, இந்த நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் இன்று வியாபித்தே உள்ளது என்பதையும் நான் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

விவசாயத்துறை, கால்நடைப் பண்ணைகள், உல்லாசப் பிரயாணத்துறையுடன் இணைந்த ஹோட்டல்கள், செங்கல் உற்பத்தி, கைப்பணிப் பொருட்கள் உற்பத்தி போன்ற துறைகளில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டு வருவதாகவே தெரிய வருகின்றது.

அரச ஊதியங்களைப் பெறுகின்ற படைச் சிப்பாய்களைப் பயன்படுத்தி, அரச செலவில் பாரிய மானியங்களைப் பெற்று, மக்களின் வளங்களைப் பயன்படுத்தி, அரச செலவில் கட்டிடங்கள், உபகரணங்கள், வாகனங்கள் பெற்றும், முதலீடுகளை மேற்கொண்டும் இவர்கள் எமது பகுதிகளில் மேற்கொள்கின்ற வர்த்தக நடவடிக்கைகளின் முன்பாக, எமது பகுதிகளில் தொழில் முயற்சிகளை ஆரம்பிப்பதற்கு எந்தவொரு முதலீட்டாளருமே முன்வராத நிலையும் தற்போது ஏற்பட்டுள்ளது.

போட்டி முதலீட்டாளர்களுக்குக் கிடைக்கப் பெறாத சாதகமான அரச வளங்களை பயன்படுத்தி இவர்கள் தமது வர்த்தக நடவடிக்கைளை மேற்கொண்டு வருவதனால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்பதையே இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.

Related posts:

மாற்றம் ஒன்றுக்காக மக்களுக்கு சரியான வழியைக் காட்டுங்கள் கட்சி உறுப்பினர்களுக்கு செயலாளர் நாயகம் வி...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவு மண்டபத்தில் இழப்பீட்டுக் கொடுப்பனவுக...
கடற்றொழில் செயற்பாடுகளின் வினைத்திறனை அதிகரிக்க புதிய கட்டிடம் : அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் திற...

வாக்குறுதி வழங்கியவர்களுக்கு அழுத்தத்தை கொடுத்து போராட்டத்தின் நியாயத்தை எடுத்துரைக்கும் என நம்புகிற...
முரண்பாடுகளுக்கு தீர்வுகாண விரைவில் கடற்றொழில்சார் தேசியக் கொள்கை - நாடாளுமன்றில் அமைச்சர் டக்ளஸ் ...
யாழ் மாவட்ட செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தலைமையில் விசேட கூட்டம் - முக்கிய விடயங்கள் தொடர்பில் ஆராய்...