தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எதிராக உணர்வு ரீதியிலான யுத்தம் முன்னெடுக்கப்படுகின்றதா? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. கேள்வி!
Thursday, June 6th, 2019
இந்த நாட்டில் ஒரு பக்கத்தில் தமிழ் மக்களுக்கு எதிரான உணர்வு ரீதியலான செயற்பாடுகளும், மறு பக்கத்தில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான உணர்வு ரீதியிலான செயற்பாடுகளும் சமாந்தரமான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருவதையே அவதானிக்க முடிகின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நடைபெற்ற இலங்கை மதிப்பீட்டு நிறுவகம் தொடர்பிலான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் –
ஏற்கனவே கையகப்படுத்திக் கொண்டுள்ள காணிகள் போதாக்குறைக்கு மேலும் காணிகளை கையகப்படுத்துகின்ற, பலவந்தமாக பிடிக்கின்ற, பல்வேறு திணைக்களங்களின் பெயர்காளல் சூறையாடப்படுகின்ற நிலைமைகளும் தொடர்கின்றன.
அண்மையில்கூட முல்லைத்தீவு, பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய விவகாரம் ஏற்பட்டு, இன்னமும் அங்கு குழப்ப நிலைமைகள் தோற்றுவிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
கன்னியா வெந்நீரூற்று பகுதியில் அத்துமீறிய செயற்பாடுகள் தொடர்கின்றன. இதேபோன்று வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தோறும், இத்தகைய கபளீகரமான செயற்பாடுகள் ஏதோ ஒரு வடிவத்தில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டே வருகின்றன.
இத்தகைய செயற்பாடுகள் எமது மக்கள் மத்தியில் உணர்வு ரீதியானது மட்டுமன்றி, உடல் ரீதியிலானதுமான தாக்கங்களை ஏற்படுத்திக் கொண்டே இருக்கின்றன.
அந்த வகையில் பார்க்கின்றபோது, இந்த நாட்டில் ஒரு பக்கத்தில் தமிழ் மக்களுக்கு எதிரான உணர்வு ரீதியலான செயற்பாடுகளும், மறு பக்கத்தில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான உணர்வு ரீதியிலான செயற்பாடுகளும் சமாந்தரமான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருவதையே அவதானிக்க முடிகின்றது.
ஒரு பக்கத்தில் இந்துக்களின் ஆலயங்கள் குறிவைக்கப்படுகின்ற. மறுபக்கத்தில் இஸ்லாமியர்களது பள்ளிவாயில்கள் குறிவைக்கப்படுகின்றன. புராதன சின்னங்கள் குறிவைக்கப்படுகின்றன. குறிவைப்போர் வெவ்வேறு தரப்பினர்களாக இருந்தாலும், செயற்பாடு ஒன்றுதான்.
எனவே, இத்தகைய நிலைமைகளில் மாற்றம் ஏற்படாத வரையில், இந்த நாடு உறுப்படப் போவதில்லை.
எமது மக்களது காணி விடுவிப்பு, தமிழ் அரசியல் கைதிகள் விடுவிப்பு, காணாமற்போனோர் கண்டுபிடிப்பு என அனைத்து விடயங்களும் உடனயடிhகத் தீர்க்கப்படும் எனக் கூறிக் கொண்டு ஆட்சிக்கு வந்த இந்த அரசும், அந்த வாக்குறுதிகளை மறந்தவிட்டது, இந்த அரசை கொண்டு வந்தோம் என மார்தட்டிய தமிழ்த் தரப்பும் அதனை மறந்துவிட்டது.
என்றாலும், இவை எதனையும் எமது மக்கள் மறந்துவிடவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
Related posts:
|
|
|


