சுற்றுவட்டம், சமிக்ஞை விளக்கு அமைப்பதுது தாமதமாகலாம் – பொலிஸார் இராணுவம் இணைந்து உடனடி போக்குவரத்து கட்டுப்பாடுகளை முன்னெடுக்குமாறு அமைச்சர் டக்ளஸ் உத்தரவு!

Sunday, November 28th, 2021

கிளிநொச்சியில் அடிக்கடி ஏற்பட்டுவரும் வீதி விபத்துக்களைக் கட்டுப்படுத்துவதற்கு சுற்றுவட்டம் அமைப்பதோ, சமிக்ஞை விளக்குகள் பொருத்துவதோ காலதாமதமாகலாம் என்பதால், உடனடியாக பொலிஸாரும், இராணுவத்தினரும் இணைந்து வீதிப் போக்குவரத்துக் கட்டுப்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் உத்தரவிட்டுள்ளார்.

கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் மாவட்டத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளின் முன்னேற்ற நிலை தொடர்பான மீளாய்வுக் கூட்டமொன்றை நடத்திய கடற்றொழில் அமைச்சரும், மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவருமான டக்ளஸ் தேவானந்தா உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

கிளிநொச்சி ஏ9 வீதியில் அண்மையில் பாடசாலை மாணவி ஒருவர் விபத்துக்குள்ளாகி மரணமடைந்தார். இதனையடுத்து, வீதி விபத்துக்களைக் கட்டுப்படுத்துவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை பல தரப்புக்களாலும் முன்வைக்கப்பட்டு வருகிறது.

விபத்து நடைபெற்ற மறுநாளே மாகாண கல்வியமைச்சின் செயலாளர் இளங்கோவனின் ஏற்பாட்டில், மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று மேற்கொள்ளப்பட்டு, கல்விப் பணிப்பாளர், சுகாதார சேவைகள் பணிப்பாளர், பொலிஸ் தரப்பினருடன், மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இணைப்பாளர் ஆகியோரை உள்ளடக்கி விசேட குழுவொன்று தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக உருவாக்கப்பட்டிருந்தது.

மேலதிக மாவட்டச் செயலாளர் (காணி) திருலிங்கநாதன் தலைமையில் உருவாக்கப்பட்ட இந்தக் குழு, அமைச்சரின் இணைப்பாளர், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் வை.தவநாதன் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கி மீண்டும் சந்தித்து விபத்துக்களைக் கட்டுப்படுத்துவதற்கான யோசனைகளை முன்வைத்திருந்தது.

இவைபற்றி இன்று விரிவாக ஆராய்ந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, டிப்போ சந்தியில் சுற்றுவட்டம் அமைப்பதில் இடச்சிக்கலும், சட்டச் சிக்கல்களும் இருக்கலாம் என்பதால், அதனைச் செய்துமுடிக்க காலதமாதமாகலாம் என்பதைச் சுட்டிக்காட்டி, அதுவரையில் காத்திருக்காமல் பரந்தன் சந்திமுதல், முறிகண்டி வரையில் ஏ9 வீதியில் பொலிஸாரும், இராணுவத்தினரும் இணைந்து வீதிப் போக்குவரத்து விதிமுறைகளை கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்துடன் கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் மற்றும் மாவட்ட இராணுவத் தளபதி ஆகியோருடன், மாவட்டச் செயலாளரை உடனடியாக கலந்துரையாடல் நடத்தி இதனை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நடைமுறைப்படுத்துமாறும் அவர் மேலும் பணிப்புரை விடுத்தள்ளார்.

இதேவேளை, டிப்போ சந்தியில் வீதிச் சமிக்ஞை விளக்குகளைப் பொருத்துவதே பொருத்தமான நடவடிக்கையாக இருக்க முடியும் என்றும், இதுதொடர்பில் முன்னரும் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களில் கலந்துரையாடப்பட்டிருந்தது என்றும், மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் மற்றும் அமைச்சரின் மேலதிக இணைப்பாளர் றுஷாங்கன் ஆகியோர் சுட்டிக்காட்டியதையடுத்து, வீதி அபிவிருத்தி அதிகாரசபை பிரதம பொறியியலாளர் இளங்கீரன் அதுபற்றி விரைவில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


தமிழ் தேசிய கூட்டமைப்பினரை நம்பியதால் நாம் நாதியற்று தவிக்கின்றோம் - வரணிப்பகுதி மக்கள் ஆதங்கம்!
ஒருவருக்கு இருக்கும் பெயர் இன்னெருவருக்கும் இருக்கும் என்பதை தேர்தல் ஆணைக்குழு அறிந்திருக்கவில்லையா...
கொரோனாவிற்கு பின்னரான நிலவரங்களைக் கையாளும் நோக்கோடு, சாவால்களுக்கு மத்தியில் பல்வேறு நடவடிக்கைகள் ம...