கொரோனா தொற்றுக்குள்ளானோர் எவரும் சமூகத் துரோகிகள் அல்லர் – மனிதாபிமானக் கண் கொண்டு அணுகுவது அவசியம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Friday, October 23rd, 2020

கொரோனா தொற்றின் அறிகுறிகள் கொண்டோர், கொரோனா தொற்றுக்கு உள்ளானோர் எவரும் பயங்கரவாதிகளோ அல்லது சமூகத் துரோகிகளோ அல்லர். அத்தகைய எண்ணம் இந்த சமூகத்தில் இருந்தால், இந்த தொற்றினை ஒருபோதும் எம்மால் வெற்றி கொள்ள முடியாது.

எனவே, தொற்றாளர்களை மனிதாபிமானக் கண் கொண்டு அணுகுவதற்கும், உரிய சிகிச்சைகளின்பால் அவர்களை உட்படுத்துவதற்கும் அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டியது அவசியமாகும்.

அதேநேரம் இத் தொற்றுக்கு உள்ளாவோர் அச்சம் கொள்வதற்கு, மறைந்து வாழ்வதற்கு எவ்விதமான அவசியமும் இல்லை என்பதனையும் கருத்தில் கொள்ள வேண்டும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்றையதினம் நாட்டை மீண்டும் உலுக்கிக் கொண்டிருக்கின்ற கொவிட் – 19 தொற்று அனர்த்தம் தொடரப்பிலான விவாதத்தில் கலந்துகொண்டபின் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

இந்த தொற்று இப்போதைக்கு இந்த நாட்டை விட்டு விடைபெறும் எனக் கூறுவதற்கில்லை. ‘கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, குணமடைந்தவர் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி என்பது 3 மாதங்கள் முதல் 5 மாதங்கள் வரையிலேயே இருக்கும் என்றும், ஆதலால் மீண்டும் அவர்கள் பாதிக்கப்படலாம்’ என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்ஸில் அண்மையில் தெரிவித்திருப்பதையும் நாம் அவதானத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

எனவே, விதிக்கப்பட்டுள்ள சகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளை ஒவ்வொருவரும் உரிய முறையில் கடைப்பிடிப்பது அவசியமாகும் என்பதை இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன் என தெரிவித்துள்ளார்.

Related posts: