கையாலாகாதவர்களால் முடங்கிக் கிடக்கிறது யாழ் நகரத்தின் அபிவிருத்தி  – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Thursday, November 30th, 2017

வீடுகளுக்கான முறைறயான குழாய் நீர் விநியோகத் திட்டங்கள் இன்றியும் முறையான கழிவகற்றல் முறைமைகள் இன்றியும் காணப்படுகின்ற ஒரு நகரமாகவே யாழ் நகரம் காணப்படுகின்றது. அந்தவகையில் யாழ் நகர அபிவிருத்தி திட்டத்தின் தற்போதைய நிலை என்ன என்பதை கௌரவ அமைச்சர் சம்பிக்க ரணவக்க அவர்களிடம் கேட்க விரும்புகின்றேன் என ஈம க்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்றைய தினம் பிராந்திய அபிவிருத்தி அபிவிருத்திப் பணிப் பொறுப்பு  நகரத் திட்டமிடல் நீர் வழங்கல் வடிகாலமைப்பு மற்றும் மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு ஆகிய நான்கு அமைச்சுக்கள் தொடர்பில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

யாழ் நகர அபவிருத்தி ஏற்பாடுகளின் போது போக்குவரத்து தொடர்பில் அவதானங்களைச் செலுத்துகையில் சுற்றுவட்ட இரயில் போக்குவரத்து தொடர்பில் அதிக அவதானங்கள் செலுத்தப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

அத்துடன் யாழ் மாவட்டத்தில் செயற்பட்டு வருகின்ற நகர அபிவிருத்தி அதிகார சபைக்கென சொந்தக் கட்டிடமொன்று இல்லாத நிலை காணப்படுவதாகத் தெரிய வருகின்றது.  இவ்விடயம் தொடர்பிலும் மேற்படி நகர அபிவிருத்தி;த் திணைக்கள அதிகார சபையின் பௌதீக வளங்கள் மற்றும் ஆளணியினரின் வினைத்திறன்கள் மேம்பாடு தொடர்பிலும் கௌரவ அமைச்சர் அவர்கள் வலுவுள்ள ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

அத்துடன் நகர அபிவிருத்தி செயற்பாடுகளை நோக்குகின்றபோது பிரதான நகரங்களை மையப்படுத்தியதான அபிவிருத்திகளை முன்னெடுக்கின்ற அதே நேரம் அதற்கு சமாந்தரமாக பிராந்திய நகரங்களின் உருவாக்கங்களும் அவசியமாகின்றன என்றே கருதுகின்றேன். குறிப்பாக எமது நாட்டில் 1931ஆம் ஆண்டுக் காலப் பகுதியிலிருந்து 2015ஆம் ஆண்டு காலப் பகுதிவரையில் அநேகமாக பின்தங்கிய பகுதிகள் நோக்கியே அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்ட்டு வந்தமை காரணமாக பிரதான நகர்ப் பகுதிகளிலிருந்து மக்கள் அபிவிருத்தி பெற்ற பகுதிகள் நோக்கி நகர ஆரம்பித்தனர். தற்போது பிரதான நகரங்களை மையப்படுத்தியதான அபிவிருத்திகளின்போது பெருமளவிலான மக்கள் பிரதான நகரப் பகுதிகளையே நோக்கி வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும். அந்தவகையில் மீளவும் சேரிகள் போன்ற குடியிருப்புகளுக்கான வாய்ப்புகள் ஏற்படலாம்.

மேலும் அடுக்குமாடிக் கட்டிட முறைமையினை பிரதான நகரப் பகுதிகளில் மிக அதிகமாகக் காணக்கூடியதாக இருக்கின்றது. இந்த முறையின் கீழ் பொருளாதார நிலையில் ஒரே மட்டத்திலான மக்கள் பெருவாரியாக ஒரே இடத்தில் குவிக்கப்படுகின்ற நிலைமைகள் ஏராளம். இவ்வாறு மக்கள் பலர் ஒரே இடத்தில் குவிக்கப்படுவதால் மனித வளங்கள் தொடர்பிலான ஏனைய பகுதிகளுக்கான தேவைகளில் பாதிப்புகள் எதிர்நோக்கப்படுகின்ற நிலைமைகளும் பொருளாதார ரீதியில் பலம் குன்றிய மக்கள் ஒரே இடத்தில் குவிக்கப்படுவதால் அவர்களது பொருளாதார நிலை மேம்படாததொரு நிலைமையும் இல்லாமல இல்லை. மேலும் இத்தகைய மாடிக் கட்டிடங்கள் அநேகமானவை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள்ளாகவே பழுதடைகின்ற நிலைமைகளையும் நாம் கண்டு வருகின்றோம். எனவே இத்திட்டம் தொடர்பில் மீள் பரிசீலனை செய்ய வேண்டியதொரு நிலையும் உண்டு என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

Related posts: