கைத்தொழிற்துறை ஊக்குவிப்பு தொடர்பில் பல முன்மொழிவுகள் : ஆரோக்கியமான நிலை  என்றே கருதுகின்றேன் –  டக்ளஸ் தேவானந்தா!

Friday, December 2nd, 2016

இம்முறை வரவு – செலவுத் திட்டத்தில் சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழிற்துறை ஊக்குவிப்புக் கருதிய பல முன்மொழிவுகளைக் காண முடிகின்றது. இது ஓர் ஆரோக்கியமான நிலை  என்றே கருதுகின்றேன் – என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் வலியுறுத்தியுள்ளார்.

இன்றையதினம் 2017ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்தகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் அவர் குறிப்பிடுகையில் –

எமது நாட்டின் பாரம்பரிய தொழிற்துறைகள் குறித்தும் அவதானம் செலுத்த வேண்டியுள்ளது. குறிப்பாக, 100 வருடங்கள் பழைமையான மட்பாண்டக் கைத்தொழிலில் ஈடுபட்டு வருகின்ற புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த முந்தல், புளிச்சான்குளம் கிராம மக்கள், தங்களுக்குத் தேவையான ‘ஓவெல்ல’ மண் தட்டுப்பாடு தொடர்பில் முறைப்பாடுகளை முன்வைத்து வருகின்றனர்.

வடக்கைப் பொறுத்த வரையிலும் இந்த மட்பாண்டக் கைத்தொழிலில் ஈடுபடுகின்ற மக்கள் பெருவாரியாகக் காணப்படுகின்றனர்.

இதே போன்று தென் பகுதியைச் சேர்ந்த எலதெனிய தேவேந்திர கிரமமானது பாரம்பரியமாக கம்மல் தொழிலில் ஈடுபட்டு வருகின்ற கிராமமாகும். இங்கும் அவர்களுக்குரிய மூலப் பொருளான இரும்பு கிடைப்பதில் பாரிய சிக்கல்கள் இருப்பதாகக் கூறப்படுகின்றது.

பிரம்பு சார் கைத்தொழிலில் ஈடுபடுகின்றவர்களுக்குத் தங்களது மூலப் பொருளான பிரம்புகளைக் கொண்டு வருவதில் தடைகள் இருப்பதாகக் கூறப்படுகின்றது. இவ்வாறான சிறு தொழில் முயற்சியாளர்களிடையே பல்வேறு பிரச்சினைகள், தேவைகள் காணப்படுகின்றன.

எனவே இத்துறை தொடர்பிலும் கௌரவ அமைச்சர் அவர்கள் அவதானம் செலுத்துவார் என நம்புகின்றேன்.  இம்முறை வரவு – செலவுத் திட்டத்தில் சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழிற்துறை ஊக்குவிப்புக் கருதிய பல முன்மொழிவுகளைக் காண முடிகின்றது. இது ஓர் ஆரோக்கியமான நிலை  என்றே கருதுகின்றேன்.

இந்த நிலையில், நவீன தொழில் நுட்பச் சந்தையின் கேள்விகளுக்கேற்ப மென் பொருள் உற்பத்திக் கிராமங்களை அமைக்கும் ஒரு திட்டத்தை முன்னெடுக்க முடியுமென நம்புகின்றேன். குறிப்பாக, வேலைவாய்ப்புகளை எதிர்பார்த்திருக்கின்ற இளைஞர், யுவதிகள் மிக அதிகமாகக் காணப்படுகின்ற வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உள்ளடங்கலாக இந்த முயற்சியை மேற்கொள்ள முடியும். இது தொடர்பிலும் கௌரவ அமைச்சர் அவர்கள் தனது அவதானத்தைச் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டு, அத்துடன், இங்கு ஆரம்பக் கைத்தொழில் அமைச்சுத் தொடர்பாக சில விடயங்கள் தொடர்பிலும் அவதானத்தைச் செலுத்த விரும்புகின்றேன்.

அண்மையில் ஏற்பட்ட வறட்சி காரணமாக நாடளாவிய ரீதியில் சிறு ஏற்றுமதிப் பயிர்கள் பல அழிவுற்றதாகக் கூறப்பட்டது. அந்த அழிவுகளுக்கு முகங்கொடுத்துப் பாதிக்கப்பட்ட விவசாய மக்களுக்கு உரிய நட்டஈடுகள் உரிய முறையில் வழங்கப்பட்டதா என்பதை அறியத் தருமாறும், நாட்டில் வல்லப்பட்டைகள் வெட்டி, வெளிநாடுகளுக்கு கடத்தப்படுகின்ற முயற்சிகள் தொடர்பிலும் அடிக்கடி செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில், வல்லப்பட்டைகளை முறையாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடிய சாத்தியங்கள் உள்ளனவா என்பது குறித்து ஆராய்ந்து பார்க்குமாறும் கேட்டுக் கொண்டு விடைபெறுகின்றேன்.

Untitled-5 copy

Related posts:

வாழ்வாதாரத்தை பாதுகாக்காது வாய்ச்சவாடல் விடுவதால் பயனில்லை - கோரக்கன்கட்டு மக்கள் மத்தியில் செயலாளர்...
எக் ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தின் பாதிப்பு குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நாளை விசேட...
"அபிவிருத்திக்கு எதிரானவர்கள் நாங்கள் அல்ல” - எனினும் மக்களின் ஏகோபித்த இணக்கம் இன்றி எடுக்கப...