அதிகளவு அரச ஊழியர்கள் இருந்தும் மக்களது தேவைகள் தீர்க்கப்படாதிருப்பது ஏன் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா கேள்வி!

Saturday, November 26th, 2016

எமது நாட்டில் சுமார் 14 இலட்சம் அரச பணியாளர்கள் பணியில் இருந்து வருவதாகத் தெரிய வருகிற நிலையில் மக்களின் பல்வேறு பிரச்சினைகள் தீர்க்கப்படாத நிலைமைகளை அன்றாடம் ஊடகங்கள் வாயிலாக அறிய முடிகின்றது. இவ்வாறான நிலை ஏன் தோன்றுகிறது என்பது குறித்து ஆராய்ந்து பார்க்க வேண்டிய கட்டாய தேவை இருந்து வருகிறது என்பதை நான் இங்கு அவதானத்துக்கு கொண்டு வர விரும்புகின்றேன் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.

2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் –

உலகிலேயே அதி கூடிய அரச ஊழியர்கள் உள்ள நாடு இலங்கை என்றும் உலகிலுள்ள ஏனைய நாடுகளில் 250 பேருக்கு ஓர் அரச ஊழியர் என்ற வீதத்தில் உள்ள நிலையில் இலங்கையில் 25 பேருக்கு ஓர் அரச ஊழியர் என்ற வீதத்தில் இருப்பதாகவும் எமது சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரிய அவர்கள் முன்பு பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சராக இருந்தபோது கூறியது எனக்கு நினைவுக்கு வருகிறது.

அந்த வகையில் தற்போது எமது நாட்டில் சுமார் 14 இலட்சம் அரச பணியாளர்கள் பணியில் இருந்து வருவதாகத் தெரிய வருகிறது. எனினும் நாட்டில் எமது மக்களின் பல்வேறு பிரச்சினைகள் தீர்க்கப்படாத நிலைமைகளையும் அன்றாடம் ஊடகங்கள் வாயிலாக அறிய முடிகின்றது.

இவ்வாறான நிலை ஏன் தோன்றுகிறது என்பது குறித்து ஆராய்ந்து பார்க்க வேண்டிய கட்டாயத் தேவை இருந்து வருகிறது என்பதை நான் இங்கு அவதானத்துக்கு கொண்டு வர விரும்புகின்றேன். இந்த இடத்தில் பல்வேறு துறைகள் சார்ந்து பல ஆளணி வெற்றிடங்கள் காணப்படுவதையும் நாம் மனதில் கொள்ள வேண்டும். அதே நேரம் ஆளணிகள் இருக்கின்ற நிலையில் அந்தப் பணிகளின் தாமதங்களுக்கு உள்ளாகுவதற்கான காரணங்கள் அறியப்பட வேண்டும் எனவும் இந்தப் பணியாளர்களிடையெ வினைத்திறன் இல்லை எனில் அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் சிறந்த முகாமைத்துவம் இல்லை எனில் அதற்கான வசதிகளை எற்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றேன்.

அரச ஊழியர்கள் தமது கையடக்கத் தொலைபேசிகளை முறையற்ற ரீதியில் பயன்படுத்துவதால் ஒரு நாளைக்கான சேவையின்போது 18 இலட்சம் மணித்தியாலங்கள் வீணடிக்கப்படுவதாக அண்மையில் அரச தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்திருந்ததையும் இங்கு அவதானத்துக்குக் கொண்டுவர விரும்புகின்றேன்.

அதே நேரம் எமது நாட்டில் தமிழ் மொழி மூலமான மக்கள் அரச நிறுவனங்களின் ஊடான தங்களது தேவைகளை நிறைவேற்றச் செல்கின்றபோது மொழி ஒரு தடையாக அமைந்து விடுகின்ற சந்தர்ப்பங்கள் ஏராளம் என்பதை இங்கு பலரும் அறிவீர்கள் என நான் நம்புகின்றேன்.எனவே அந்தந்த மாவட்டங்களில் பொது மக்களுக்கு இலகுவாகத் தங்களது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு ஏற்ற வகையில் பணியாளர்களை பணிகளில் அமர்த்தப்படுவது முக்கியமான ஒரு விடயமாகும் என்பதை இங்கு நான் வலியுறுத்த விரும்புகின்றென் என தெரிவித்துள்ளார்.

001 copy

Related posts:

புதிய அரசியலமைப்பில் சிறுபான்மை இனங்களின் பாதுகாப்பும், உரிமைகளும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் - ஊடகவ...
நெடுந்தீவு இறங்குதுறை விரிவாக்கம் நெடுந்தாரகையின் இலவச போக்குவரத்து குறித்து செயலாளர் நாயகம் டக்ளஸ் ...
வாழ்விடங்களில் தொடர்ந்தும் வாழ்வதற்கு உதவுமாறு பண்டாரிக்குளம் மக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம்...