கால அவகாசம்வரை காத்திருக்காமல் தீர்மானத்தை நிறைவேற்ற உடனடிச் செயற்பாடு அவசியம்!

Saturday, March 25th, 2017

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு அரசாங்கத்திற்கு இரண்டு வருடகால அவகாசம் வழங்கப்பட்டிருக்கின்றது. மனித உரிமைகள் பேரவையின் இந்த முடிவை பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றபோதும் அதுவே நடந்து முடிந்திருக்கின்றது. ஆனால் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கவும், உண்மை கண்டறியப்படவும், பரிகாரம் காணப்படவும் நம்பிக்கை தரக்கூடிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.

இலங்கை அரசாங்கத்திற்கு இரண்டுவருட கால அவகாசம் வழங்க வேண்டும் என்று ஏற்கனவே கூறியிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், தற்போது கால அவகாசம் வழங்கப்பட்டிருப்பதை தாம் வரவேற்பதாகவும் கூறியிருப்பது விசித்திரமானதாகும்.

அரசாங்கத்தின் கால அவகாசக் கோரிக்கைக்கு ஆதரவளித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்,அரசாங்கத்திடமிருந்து தமிழ்மக்களின் அரசியல் அபிலாஷைகள் மற்றும் பிரதான கோரிக்கைகள் தொடர்பில் வலுவான உடன்பாடுகளைக் கண்டிருந்தால் அவை பயனுள்ளதாக அமைந்திருக்கும்.

போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் விடயங்களில் எதிர்பார்க்கப்படும்நீதியானது காலதாமதப்படுத்தப்படுமானால் அது மறுக்கப்படும் நீதியாகும்.இந்நிலையில் அரசுக்கு வழங்கப்பட்டுள்ள மேலும் இரண்டு வருட கால அவகாசம் என்பது தமிழ்மக்களுக்கு ஏமாற்றத்தையே கொடுத்திருக்கின்றது.

பொய் வாக்குறுதிகளை வழங்கி வாக்குகளை அபகரித்தவர்கள்,புதிய அரசாங்கத்திற்கு ஐ.நத மனித உரிமை ஆணையகம் முன்னர் வழங்கியிருந்த கால அவகாசத்தை தமிழ்மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு அணுகியிருக்க வேண்டும். இப்போது அவ்விடயம் தமது கைகளையும் மீறி மேலும் இரண்டு வருடங்கள் கால அவகாசம் வழங்கும் அளவுக்கு சென்றுவிட்டதாகவே தமிழ்மக்கள் உணர்கின்றனர்.

இந்நிலையில் இரண்டு வருட கால அவகாசத்தை பார்த்துக் கொண்டு இருக்காமல்,மனித உரிமைகள் ஆணையாளர் கூறியிருப்பதன் பிரகாரம் கால அட்டவணையை நடைமுறைப்படுத்த அரசுக்கு உரிய அழுத்தங்களையும்,வற்புறுத்தல்களையும்கொடுக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வர வேண்டும் என்றும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.

Related posts: