காலநிலைகூட எமது மக்களை கடனாளிகளாகவே ஆக்கிவிட்டுள்ளது – டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Thursday, November 16th, 2017

தெற்கே, இயற்கை அனர்த்தங்கள் அனர்த்த ஆபத்துகள் நிறைந்த பகுதிகளை நோக்கியே வருடந்தோறும் வருகின்றன!

அனால் வடக்கே… மக்கள் வாழுகின்ற குடியிருப்புப் பகுதிகள் நோக்கியே இயற்கை அனர்த்தங்களும் வாரந்தோறும் நுழைகின்றன. கடைசியில், காலநிலைகூட எமது மக்களை கடனாளிகளாகவே ஆக்கிவிட்டுள்ளது.இதுதான் எமது மக்களது நிலை என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் 2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

மழை என்றால் கடும் மழை… அந்த மழை நீரை சேமித்து வைப்பதற்கு உரிய எற்பாடுகள் இல்லை… கடந்த காலத்தில் செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகளும் இன்று கவனிப்பாரற்றுப் போயிருக்கின்றன…

ஆனால்… மழை நீரை சேமிப்போம் என்கின்ற அறிவிப்புப் பதாதைகள் மாத்திரம் இன்னும் அப்படியே இருக்கின்றன! மாகாண சபையினர் இந்த பதாதைகளை மாத்திரமே அடிக்கடி தூர்வாரிக் கொண்டிருக்கிறார்கள்!

மழை காலங்களில் எமது மக்கள் தரையிலும் இருக்க முடியாது – கூரை ஏறி இருக்கவும் முடியாத நிலை!வெள்ளம்! வழிந்தோட கால்வாய்கள் இல்லை! இருந்த கால்வாய்களும் இருந்ததற்கே இன்று அடையாளமில்லாத நிலை!

மழை விட்டதும் வரட்சி! கடும் வரட்சி! தீவகப் பகுதிகளை விட்டு மக்கள் வெளியேறும் நிலை கொண்ட வரட்சி! விலங்குகள் செத்து மடியும் வரட்சி!அப்போதும் மக்களுக்கு தரையில் இருக்கவும் முடியாத நிலை! கூரை ஏறி இருக்கவும் முடியாத நிலைதான்!

மரங்கள் இல்லை! காடுகள் அழிக்கப்படுகின்றன! பெறுமதியான மரங்கள் சட்டவிரோதமாக வெட்டப்படுகின்றன! திருட்டு மணல் சுரண்டல்கள்! கேள்வி கேட்பதற்குக்கூட இன்று யாரும் அங்கு இல்லாத நிலை! அனாதை நிலை!

வரட்சி தொடரும் கடுமையாக… முடிவில் மழை தொடரும் அதைவிட கடுமையாக… பின்னர் மீண்டும் மாறி, மாறி இதே நிலைமைகள்தான்!இப்படியே ஏராளமான பிரச்சினைகள,; எமது மக்களின் அரசியல் உரிமைகள் தொடர்பான பிரச்சினைகள் வரையில் தீர்க்கப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன.. என்றார்.

Related posts: