காணி வழங்கியதில் தவறு இருப்பின் தீர்வு பெற்றுத்தரப்படும் – பளை செல்வபுரம் மக்களிடம் டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!

Friday, February 15th, 2019

கச்சாய் வீதிப்பகுதியில் காணப்படும் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் 48 ஏக்கர் காணி முறையற்ற வகையில் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளமையால் அந்த அரச காணியை தமக்குப் பெற்றுத் தந்து தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் வீட்டுத்திட்டத்தைப்பெற்றுக்கொள்வதற்கு வழிவகை செய்து தருமாறு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவிடம் பளை செல்வபுரம் பகுதி மக்கள் மகஜர் ஒன்றைக் கையளித்துள்ளனர்.

இன்றையதினம் பளைப்பகுதிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அங்குள்ள மக்களது பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து அறிந்து கொண்டார். இதன்போதே குறித்த பகுதிமக்களால் மகஜர் கையளிக்கப்பட்டது.

குறித்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது காணிசீர்திருத்த ஆணைக்குழுவினால் கச்சாய் வீதியில் காணப்படும் 48 ஏக்கர் காணிகள் முறைகேடான வகையில் பலருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இவற்றில் வெளிநாடுகளில் உள்ளவர்களுக்கும் குறித்த காணி வழங்கப்பட்டுள்ளதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஆனால் எமது பிரதேசத்தில் பல மக்கள் காணிகளற்று காணப்படுகின்றனர். இதனால் அவர்களுக்கு வீட்டுத்திட்டமும் வழங்கப்படாதிருக்கின்றது. எமது பிரதேசத்திலுள்ள வறிய மக்களுக்கு குறித்த காணி முறையான வகையில் பகிர்ந்தளிக்கப்படுமேயானால் அவர்கள் அரசாங்க தேசிய வீடமைப்பு திட்டத்தினால் வழங்கப்படும் வீட்டுத்திட்டத்தை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.

அதன்படி முறையற்றவகையில் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் காணிகளை எமது பகுதி மக்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு தருமாறு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

குறித்த மகஜரை பெற்றுக் கொண்ட செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அக்காணிகள் வழங்கியதில் தவறுகள் இருப்பின் அவை தொடர்பில் அவதானம் செலுத்தப்படும். அதற்காக துறைசார் தரப்பினருடன் பேச்சுக்களை நடத்தி தீர்வுகளைப் பெற்றுத்தர முயற்சிப்பேன் என்றார்.

Related posts: