கல்விச் சமூகத்தின் கனவை நிறைவேற்றியதுபோல் தமிழ் மக்களது ஒட்டுமொத்த கனவுகளையும் நிறைவேற்றிக் கொடுப்பேன் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!

Friday, June 8th, 2018

எமது கல்வி சமூகத்தின் நீண்ட காலக் கனவை இன்று நிறைவேற்றி கொடுத்ததுபோல் தமிழ் பேசும் மக்களின் ஒட்டு மொத்த கனவுகளையும் நிறைவேற்றி கொடுக்கும் இலக்கு நோக்கி தொடர்ந்தும் நடப்பதற்கு அனைத்து தரப்பினரின் ஆதரவையும் நான் சகோதர வாஞ்சையோடு கோரி நிற்கிறேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு நிதியம் திருத்தச் சட்டமூல தொடர்பிலான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

வரலாற்றில் இன்று ஒரு மகிழ்சிகரமான நாள். வட பகுதி கல்விச்சமூகத்தின் கனவுகளில் ஒன்று நிறைவேறிய நாள். யாழ் பல்கலைக்கழகத்தின் 33 ஆவது பொதுப்பட்டமளிப்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழக பொறியியல் பீடத்தில் இருந்து வரலாற்றில் முதல் தடவையாக 33 பேர் பொறியியல் விஞ்ஞானமாணி பட்டம் பெற்று பொறியியலாளர்களாக இன்று வெளியேறி வருகின்றனர்.

கடந்த ஆட்சியின் போது தேசிய பாதுகாப்பின் காரணமாக படையினரிடம் இருந்த பல்லாயிரம் ஏக்கர் நிலங்களை நான் விடுவித்து மக்களிடம் கையளித்திருக்கிறேன். அதில் 650 ஏக்கர் பரப்பளவை கொண்ட கிளிநொச்சி அறிவியல் நகரும் ஒன்றாகும்.

யாழ் பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் விவசாய பீடங்களை அமைப்பதற்கு அந்த அறிவியல் நகரை படையினர் விடுவிக்க வேண்டும் என்று நான் பல்வேறு பிரயத்தனங்களை எடுத்திருந்த போதும், அதற்கான அமைச்சரவை பத்திரத்தை அமைச்சரவையில் நான் சமர்ப்பித்திருந்த போதும்,. அதற்கான அங்கீகாரத்தை நான் பெறுவதற்கு அன்று ஒரு அமைச்சராக இருந்து ஆதரவு வழங்கிய இன்றைய ஜனாதிபதி மைத்திரி பாலசிறீ சேனா அவர்களுக்கும்  முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களுக்கும்  மற்றும் உயர் கல்வி அமைச்சராக இருந்த எஸ் பி. திசநாயக்கா அவர்களுக்கும் எனது முயற்சிகளுக்கு ஆதரவு நல்கிய ஏனையவர்களுக்கும் வட பகுதி கல்வி சமூகத்தின் சார்பில் நான் நன்றி கூறக்கடமைப்பட்டிருக்கிறேன்.

பொறியியல் துறையை விரும்பும் வட பகுதி மாணவர்கள் தென்னிலங்கையில் தங்கியிருந்து தங்களது பட்டப்படிப்பை தொடர வேண்டிய சிரமங்களுக்கு மத்தியில் தமது சொந்த மண்ணிலேயே அவர்களுக்கான வளாகங்களை அமைக்க வேண்டும் என்ற யாழ் கல்வி சமூகத்தின் நீண்ட காலக்கனவை இன்று நிறைவேற்றி கொடுத்ததுபோல் தமிழ் பேசும் மக்களின் ஒட்டு மொத்த கனவுகளையும் நிறைவேற்றி கொடுக்கும் இலக்கு நோக்கி தொடர்ந்தும் நடப்பதற்கு அனைத்து தரப்பினரின் ஆதரவையும் நான் சகோதர வாஞ்சையோடு கோரி நிற்கிறேன்.

யாழ் பல்கலையில் இருந்து இளம் பொறியியலாளர்களாக வெளியேறி வரும் எம் தேசத்து கல்விக்கண்மணிகளுக்கு வாழ்த்துக்களை கூறி எனது உரையை முடிக்கின்றேன் என தெரிவித்துள்ளார்.

112

Related posts: