கட்சி உட்பூசல்களை மக்களின் பாதிப்புகளுக்கு பயன்படுத்த வேண்டாம்! டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

Tuesday, January 2nd, 2018
வட பிராந்திய போக்குவரத்துச் சபையினர் நேற்று முதல் ஆரம்பித்துள்ள பணிப் பகிஸ்கரிப்பு நடவடிக்கைகள் தொடரும் நிலையில், எமது மக்கள் பெரிதும் பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர். இவ்விடயம் தொடர்பில் பொறுப்பு கூற வேண்டிய ஆட்சி அதிகாரமிக்கோர் விரைவான நடவடிக்கைகளை மேற்கொண்டு, மக்களைப் பாதிப்புகளிலிருந்து மீட்க முன்வர வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், வவுனியா புதிய பேரூந்து நிலையத்தின் பிரச்சினையை முன்வைத்து மேற்படி வட பிராந்திய போக்குவரத்துச் சபையின் ஊழியர்கள் நேற்றைய தினம் முதல் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக எமது மக்கள் போக்குவரத்து தொடர்பில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையினைக் காணக்கூடியதாகவுள்ளது. அதே நேரம், பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்களும் பெரிதும் பாதிப்புகளுக்கு உட்பட வேண்டிய நிலையே ஏற்பட்டுள்ளது.
ஆட்சி அதிகாரங்களில் இருப்போர், எச் சந்தர்ப்பத்திலும் எமது மக்களுக்கு பாதிப்புகள் ஏற்படாத வகையில் தங்களது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். எமது மக்களை பாதிப்புகளுக்குள் தள்ளிவிடுவதற்காக எமது மக்கள் அவர்களை அரச அதிகாரங்களில் அமர்த்தவில்லை என்பதையும், எமது மக்களின் பிரச்சினைகள் மற்றும் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்காகவே எமது மக்கள் அவர்களை ஆட்சி அதிகாரங்களில் அமர்த்தியுள்ளனர் என்பதையும் அவரவர் மனதில் கொள்ள வேண்டும். அதே நேரம். எமது மக்களின் தேவைகளை – பிரச்சினைகளை தீர்க்க இயலாமல் இவர்கள் இருக்கின்ற நிலையில், எமது மக்களுக்குக் கிடைக்கின்றவற்றையாவது தடுக்காமல் இருந்தாலே அது எமது மக்களுக்குச் செய்கின்ற பேருதவியாக அமையும்.
தற்போதைய நிலையில், மேற்படி பணிப் பகிஸ்கரிப்பு ஏற்படுவதற்கு ஆட்சியதிகாரத்தில் உள்ளோரது உட்கட்சிப் பூசல்களை மக்கள் சார்ந்த பணிகளில் திணிப்பதற்கு எத்தனித்துள்ளமையே காரணமெனக் கூறப்படுகின்றது. எனவே, கட்சிக்குள் நிலவுகின்ற பூசல்களை மக்கள்மீது திணித்து, மக்களை பாதிப்புகளுக்கு உட்படுத்த வேண்டாம் என சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கேட்டுக் கொள்கின்றேன்.
அந்தவகையில், உட்கட்சிப் பூசல்களை மக்களுக்குரிய பொது விடயங்களில் பயன்படுத்தி, எமது மக்களுக்கான பணிகளைத் தடை செய்து கொண்டிருக்காமல், சம்பந்தப்பட்ட ஊழியர்களுடன் சுமுகமான முறையில் கலந்துiயாடி, ஓர் இணக்கப்பாட்டினை எட்டி, மேற்படி போக்குவரத்துச் சேவையினை விரைந்து செயற்படுத்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
உட்கட்சிப் பூசல்களை கட்சிக்குள் தீர்த்துக் கொண்டு, எமது மக்களை பாதிப்புகளிலிருந்து மீட்பது குறித்தே சம்பந்தப்பட்ட அனைவரினதும் செயற்பாடுகள் அமைய வேண்டும் என டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


மாணவர்களது நலனில் அக்கறை கொண்டு புகையிரத தொழிற்சங்கத்தினர் செயற்பட வேண்டும்! அரசும் சில விட்டுக்கொடு...
மீன்பிடிப் படகு உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் எடுக்கப்பட வேண்டிய நியம ஒழுங்கு...
உள்ளூரில் உற்பத்திசெய்யப்படும் ரின் மீன்களின் தர நிலை தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா துறைசார் த...