கடற்றொழில் மூலம் நாட்டிற்கு அந்நிய செலாவணியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

உள்ளூர் கடற்றொழிலாளர்களுக்கு நவீன தொழில்நுட்ப வசதிகளையும் சந்தை வாய்ப்புக்களையும் எற்படுத்திக் கொடுப்பதன் மூலம் கடற்றொழில் ஊடாக அந்நிய செலாவணியை அதிகரிப்பதற்கு எதிர்பார்ப்பதாக கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
ஆழ்கடல் கடற்றொழிலில் ஈடுபடும் பலநாள் கலன்களின் உரிமையாளர்கள் மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை இன்று (02.03.2020) சந்தித்து தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக எடுத்துரைத்தனர்.
இதன்போதே மேற்கண்டவாறு தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஆழ்கடல் தொழிலில் ஈடுபடுகின்ற மீன்பிடிப் படகுகளுக்கு வி.எம்.எஸ் மற்றும் ஆர்.எஸ்.டபிள்யூ வசதி ஏற்படுத்தித் தரப்படும் எனவும் தெரிவித்தார்.
குறித்த சந்திப்பின்போது 35 வெளிநாட்டு மீன்பிடிப் படகுகளுக்கு கடந்த ஆட்சிக் காலத்தில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. எனினும் மீன்களை விற்பனை செய்வதற்கான கட்டுப்பாட்டு விலைகள் எவையும் நிர்ணயிக்கப்டாமையினால் இலங்கையை சேர்ந்த ஆழ்கடல் பலநாள் கலன்களின் உரிமையாளர்களும் பணியாளர்களும் பாதிப்பை எதிர்கொள்வதாக அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் அவர்கள் குறித்த விடயம் தொடர்பாக ஆராயந்து இலங்கை மீனவர்கள் நன்மையடையும் வகையிலான தீர்வினைப் பெற்றுத் தருவதாக உறுதியளித்தார்.
அத்துடன் அனுமதி வழங்கப்பட்டுள்ள வெளிநாட்டு மீன்பிடிப் படகுகளுக்கான அனுமதி நிறைவடைகின்ற போது அவற்றை மீண்டு வழங்குவது தொடர்பாக மீளாய்வு செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.
அத்துடன் இலங்கையில் மீன் வளம் அதிகரித்து காணப்படுகின்ற ஒக்டோபர் தொடக்கம் மார்ச் வரையான காலப் பகுதியில் இறக்குமதி செய்யப்படும் மீன்களுக்கான வரியை அதிகரித்து உள்ளூர் மீனவர்களுக்கு நியாயமான வருமானத்தை பெற்றுக் கொடுப்பது தொடர்பாக நிதி அமைச்சுடன் கலந்துரையாடி நடவடிக்கை மேற்கொள்வதற்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|