கடந்த 5 ஆண்டுகளில் வடக்கு மாகாணசபையில் எதுவும் நடக்கவில்லை – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

வடக்கு மாகாணமும், கிழக்கு மாகாணமும் பிரிக்கப்பட்டதன் பின்னர், கிழக்கு மாகாணம் ஓரளவு நன்மைகளை மாகாண சபையின் வாயிலாகக் கண்டுள்ள போதிலும், வடக்கு மாகாணம் இந்த நாட்டில் மிகவும் பின்தங்கிய நிலைக்கே இப்போது தள்ளப்பட்டுள்ளது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றில் நடைபெற்ற மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதை வலியுறுத்துகின்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் –
கல்வியில், விளையாட்டுத்துறையில், சுகாதார வசதிகளில், ஏனைய அபிவிருத்திகளில் இந்த நாட்டில் ஒன்பதாம் இடத்தையும், வறுமையில், வேலைவாய்ப்புகள் இன்மையில், மக்களது வாழ்வாதார வசதிகள் இன்மையில் முதலாம் இடத்தையும் வகிக்கின்ற சாதனையை அது நிகழ்த்திக் கொண்டிருக்கின்றது.
எதற்காக மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டோம்?, எதற்காக மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை வழங்கி அத் தேரதலில் வென்றோம்? எதற்காக மாகாண சபையின் கதிரைகளில் ஐந்து வருடங்கள் அமர்ந்திருந்தோம்? என எதுவுமே தெரியாதவர்களாக அதன் கடந்தகால ஆட்சியாளர்களும் கலைந்து போய்விட்டார்கள்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக வடக்கு மாகாண சபையில் ஆட்சி என்றொன்று நடந்ததா? என்பதை எமது மக்கள் உணர்ந்து கொள்வதற்கு ஏதுவாக அங்கு எதுவுமே எமது மக்களுக்கென செயற்படுத்தப்படவில்லை.
இப்போது எமது மக்கள் மத்தியில் தீவிரமான விழிப்புணர்வுகள் தோன்றியிருக்கின்றன. அதாவது, எமது மக்களது அடிப்படை, அன்றாடப் பிரச்சினைகளைத் தீர்த்துக் தருகின்ற, அபிவிருத்திகளை முன்னெடுக்கின்ற, அரசியல் உரிமைகளைப் பெற்றுத் தருகின்ற முயற்சியும், விருப்பமும், ஆளுமையும் கொண்ட, இதுவரைக் கால செயற்பாட்டு அரசியலில் எமது மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்துள்ள, தேவைகளை நிறைவேற்றியுள்ள, எமது மக்களின் உரிமைகளுக்காக நடைமுறை சாத்தியமான முறையில் உழைக்கின்ற தரப்பினர் வசம் வடக்கு – கிழக்கு மாகாண சபைகளை ஒப்படைப்பதற்கு எமது மக்கள் எதிர்பார்ப்பு கொண்டுள்ளனர்.
இந்த மாகாண சபை முறைமையை எமது மக்களுக்குக் கிடைத்த பொன்னான வாய்ப்பாகக் கருதுகின்ற நாங்கள், மாகாண சபைகள் முறைமை ஏற்படுத்தப்பட்டதன் பின்னர் ஆயுதமேந்திய போராட்டத்தைக் கைவிட்டு, ஜனநாயக வழிமுறைமீது நம்பிக்கை வைத்து, இந்த வழிமுறை மூலமாக எமது மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்கின்ற அபிலாசையுடன் தேசிய அரசியல் நீரோட்டத்திற்குள் வந்தவர்கள். அதுமட்டுமல்லாது, நாடாளுமன்ற ஜனநாயகத்தின் ஊடாகவும், மாகாண சபைகளின் ஊடாகவும் எமது மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்கின்ற நம்பிக்கையை தமிழ் அரசியல் களத்தில் முதன் முதலாக விதைத்தவர்களும் நாங்கள்தான்.
அதே நேரம், தமிழ் இயக்கங்களுக்கு உள்ளேயும், இயக்கங்களுக்கு இடையேயும் ஏற்பட்டிருந்த பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு கையாண்டிருந்த வன்முறைகள், சகோதர படுகொலைகள் காரணமாகவும் ஆயுதப் போராட்டத்தை நாங்கள் கைவிடும் நிலைப்பாட்டிற்கு வந்திருந்தோம். இன்றும்கூட நாடாளுமன்றத்தை பிரதிpநிதித்துவப்படுத்துகின்ற தழிழ்த் தரப்பு உறுப்பினர்களுக்கு எமது ஆயுதமேந்தியப் போராட்டத்துடன் நேரடி பங்களிப்புகள் இல்லாவிட்டாலும், இதனை அவர்கள் விளங்கிக் கொள்வார்கள் என நினைக்கின்றேன்.
எனவே, மாகாண சபை முறைமையை எமது மக்களின் நலன்கள் கருதிய சபையாக செயற்படுத்த வேண்டும் என்கின்ற விருப்பம், தேவை, ஆளுமை என்பன எமக்கு இருக்கின்றன. மக்களை மறந்து விட்டு, வெறும் பதவிகளுக்காகவும், சலுகைகளுக்காகவும் வடக்கு மாகாண சபையை ஆண்ட காலம் மலையேறி போய்விட்டது. இனி, எமது மக்களுக்காக வடக்கு மாகாண சபை இயங்கவேண்டும். எமது மக்கள் விரும்புகின்ற பிரதிநிதிகளால் அது இயங்க வேண்டும்.
தற்போதைய நிலையில், நாட்டில் சப்பிரகமுவ, வட மத்தி மற்றும் கிழக்கு ஆகிய மூன்று மாகாண சபைகளின் தேர்தல்களை நடத்தாது சுமார் ஒன்றரை வருட காலம் கழிந்துள்ளது.
வடக்கு, வட மேல் மற்றும் மத்திய மாகாண சபைகளின் உத்தியோகப்பூர்வ ஆட்சிக் காலம் முடிவடைந்து சுமார் 3 மாதங்கள் ஆகிவிட்டுள்ளன. மேல் மாகாணம் மற்றும் தென் மாகாணங்களின் உத்தியோகப்பூர்வ ஆட்சிக் காலம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10ஆம் திகதியுடன் முடிவடையப் போகின்றன.
எனவே, மாகாண சபைகளுக்கான தேர்தலை துரிதமாக நடத்த வேண்டியதன் தேவை இன்று மிக முக்கியமானதாகக் கருதப்படுகின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
|
|