எதிர்ப்புக்காட்டுவதனூடாக மக்கள் நலன்சார்ந்த திட்டங்கள் எதனையும் சாதிக்க முடியாது – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Saturday, June 2nd, 2018

மக்கள் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்படுபவர்கள் அரசுக்கு வழிகாட்டியாக இருந்து மக்கள் நலன்சார்ந்த விடயங்களை முன்னெடுக்க வேண்டுமே தவிர அதைவிடுத்து எதிர்ப்புக்காட்டுவதனூடாக எதனையும் சாதிக்க முடியாது என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்றையதினம் நடைபெற்ற கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர்கள், பிரதேச நிர்வாக செயலாளர்கள் உதவி நிர்வாக செயலாளர்கள் ஆகியோருடனான சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

கிடைக்கப்பெற்ற அதிகாரங்களையும் வாய்ப்புக்களையும் வடக்கு மாகாணசபை மக்கள் நலன்சார்ந்து எவற்றை சரியாகச் செய்து முடித்துள்ளார்கள் என்பது தொடர்பில் மக்களே சிந்திக்கின்ற நிலைமை இன்று உருவாகியுள்ளது.

2013 ஆம் ஆண்டு வடக்கு மாகாணசபைத் தேர்தல் நடைபெறுவதற்கான அறிவித்தல் வந்த வேளை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அந்த அதிகாரத்தை பெற்றுவிடக்கூடாது என்பதற்காக கடந்தகாலங்களில் வடக்கு மாகாணசபையை நிராகரித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட்டு அதன் அதிகாரத்தை பெற்றிருந்ததையும் அதன் பின்னர் முதலாவது வடக்கு மகாணசபையின் அமைச்சர்கள் நான்கு பேரை நிதி மோசடி மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டு முதலமைச்சரால் பதவிநீக்கம் செய்யப்பட்டிருந்ததையும் சுட்டிக்காட்டிய செயலாளர் நாயகம் அதிகாரம் இல்லை என்றும் நிதி இல்லை என்றும் கூறியவர்களால் எப்படி நிதி மோசடி மற்றும் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட முடிந்தது என்று தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்தில் வாழும் மக்கள் பெரும்பாலானோர் நாளாந்த வாழ்வுக்கு கூட பல துன்ப துயரங்களை சந்தித்துவரும் நிலையில் அந்த மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் நோக்கோடு துளியளவேனும் செயற்படாதவர்கள் தேர்தல் காலங்களில் கூறிய வாக்குறுதிகளுக்கமைவாகவும் செயற்படவில்லை.

அதிகாரங்களை பெற்றுக்கொண்டபின் அரசை  குறைகூறுவதில் மட்டும் கவனமாக இருப்பவர்கள் மக்கள் நலன்சார்ந்து உழைப்பதற்கு ஒருபோதும் தயாராக இருந்ததும் கிடையாது இருக்கப்போவதும் கிடையாது.

கடந்தகாலங்களில் எமக்கு கிடைக்கப்பெற்ற பல வாய்ப்புகளையும் சந்தர்ப்பங்களையும் எமது மக்களின் நலன்களுக்காக பல்வேறுபட்ட சவால்கள் மற்றும் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து அவற்றை சிறந்தமுறையில் மக்களிடம் எடுத்துச்சென்று நாம் சாதித்துக் காட்டியுள்ளோம்.

அந்தவகையில் மக்கள் பிரதிநிதிகளே அரசுக்கு உரிய வழியைக்காட்டி மக்களுடைய தேவைகள் உள்ளிட்ட நலன்சார்ந்த விடயங்கள் தொடர்பில் சரியான முறையில் செயற்றிட்டங்களை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

எதிர்ப்புக்காட்டுவதனூடாக எதனையும் சாதிக்கமுடியாது என்பதனையும் கடந்தகால அனுபவங்களூடாக நாம் கற்றுக்கொண்டுள்ளோம்.

கடந்தகாலங்களில் எமது பகுதிகளுக்கு தேவையான சிற்றூழியர்கள் உள்ளிட்ட ஆளணி வெற்றிடங்களை எமது பிரதேசத்திலுள்ள இளைஞர் யுவதிகளைக்கொண்டே நிவர்த்தி செய்திருந்தோம். ஆனால் இன்று  அவ்வாறானதொரு நிலை காணப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

இதனிடையே முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளன்று மாகாண சபையில் அரைக்கம்பத்தில் கொடியை ஏற்றி தனக்குள்ள அதிகாரத்தை நிலை நிறுத்திய வட மாகாண முதலமைச்சர், மக்கள் பிரச்சினைகளுக்காக தனக்குள்ள அதிகாரங்களை மத்திய அரசு முடக்கி வைத்திருக்கிறது என தெரிவிப்பது ஏன்…? என்றும் கேள்வி எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts:


விதியை மதியால் வெல்லமுடியும் – தமிழ் மக்களுக்கு சுட்டிக்காட்டுகின்றார் அமைச்சர் டக்ளஸ்!
இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு நிரந்தரத் தீர்வு - ஒலுவிலில் மீன்பிடித் துறைமுகத்தை செயற்படுத்த...
ஊர்காவற்றுறை பிரதேச கடற்றொழிலாளர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரா...