‘எண்டபிரைஸ் சிறி லங்கா’ திட்டம் வடக்கு கிழக்கு மக்களின் தேவைகளை நிறைவுசெய்யவில்லை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்பி சுட்டிகாட்டு!

‘எண்டபிரைஸ் சிறி லங்கா’ என்கின்ற திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த வரவு – செலவுத் திட்டமானது தயாரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்ற நிலையில், இத்திட்டத்தின் கீழ் வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த எத்தனை பேர் பயனடைந்துள்ளார்கள் என்ற கேள்வி இருந்து வருகின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்;தா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்றையதினம் இடம்பெற்ற வரவுசெலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –
வங்கிகளால் இத் திட்டங்கள் தொடர்பில் பலர் புறந்தள்ளப்பட்டு வருகின்ற ஒரு நிலையினையே எமது பகுதிகளில் காணக்கூடியதாக இருக்கின்றது. வங்கிகளைப் பொறுத்த வரையில் அவற்றின் நலன் கருதிய திட்டங்களிலேயே அவை மும்முரமாகச் செயற்படும் என்பதை நாம் ஏற்றுக் கொள்ளவே வேண்டும். அதைவிடுத்து மக்களின் பொருளாதாரத்தினை மேம்படுத்துவதற்கு உதவுமாறு வங்கிகளின் நலனிலிருந்து வெகுவாக ஒதுங்கிய திட்டங்களுக்காக வற்புறுத்துவது என்பது நடைமுறைக்குச் சாத்தியமற்ற விடயம் என்றே கருத வேண்டியுள்ளது.
மேலும் இங்கே பல்வேறு திட்டங்கள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளன. கம்பரெலிய – நங்வமு சிறி லங்கா – ரண் அஸ்வென்ன – ரெக்கவர்ண – சிகின மாளிகா – சிங்கித்தி பாசல – சுவசெறிய – சுகிந்த புரவர – பிரஜா ஜல அபிமான – சஹசர – ஹரித்த உத்யான – ரண் மாவத் என நிறையவே திட்டங்கள் பற்றிக் கூறப்பட்டுள்ளன.
நான் தொடர்ந்து வலியுறுத்தி வருவதைப் போல், மேற்படி சிங்கள சொற் பதங்களின் அர்த்தத்தை தமிழிலும் பயன்படுத்துங்கள். அப்போதுதான் தமிழ் பேசும் மக்களுக்கு அத்திட்டங்கள் பற்றி உணர்வுகள் ஏற்படும்.
‘பனை நிதியம்’ என்ற திட்டத்திற்கு நீங்கள் ‘தல் அரமுதல’ என சிங்களத்திலே அர்த்தம் கொடுத்திருப்பதைப் போல் மேற்படித் திட்டங்களக்கு தமிழில் அர்த்தத்தை இணைத்து வெளியிடுங்கள் எனக் கேட்டுக் கொள்கின்றேன். தேசிய நல்லிணக்கம் கருதி பல மில்லியன்களை ஒதுக்குவதாகக் கூறுகின்ற நிலையில், இந்த சிங்களப் பெயர்களுக்கு தமிழில் அர்த்தததை; வெளியிடுவதற்கு எந்தச் செலவுகளும் மேற்கொள்ளத் தேவையில்லை. அதேநேரம், தேசிய நல்லிணக்கத்திற்கு இது வலுவுள்ளதொரு ஏற்பாடாக அமையும்.
Related posts:
|
|