உயர்கல்வித்துறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான விரிவான கலந்துரையாடலை ஆரம்பிக்கத் தயார் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Friday, February 17th, 2023

உயர்கல்வித்துறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான விரிவான கலந்துரையாடலை ஆரம்பிக்கத் தயார் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அரசியல் ஸ்திரத்தன்மை, சமூகத்தில் புதிய மனப்பாங்கு மாற்றம் மற்றும் புத்தாக்க பொருளாதாரத்திற்காக புதிதாக சிந்திப்பது அவசியம் என்றும், அதற்காக புதிய பல்கலைக்கழகங்கள் தேவை   என்றும் கூறிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தற்போதைய இலங்கை, மாற்றத்தின் யுகத்தில் இருப்பதாகவும் வலியுறுத்தினார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், 15 ஆம் திகதி புதன்கிழமை கொழும்பு ட்ரேஸ் சிட்டியில் அமைந்துள்ள இலங்கை தொழில்நுட்பப் பல்கலைக்கழக ஆராய்ச்சி நிறுவனத்தில் அரச கொள்கை மற்றும் அரசியலமைப்புக்கான மத்திய நிலையத்தை ஸ்தாபிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க –

பல்கலைக்கழகங்கள் மாற வேண்டும் என்று நான் நம்புவதால், இந்த நிகழ்வில் கலந்துகொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். இலங்கை தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் என்பது இலங்கைப் பல்கலைக்கழகங்களின் வரிசையில் அண்மையில் இணைந்த ஒரு புதிய வகை நிறுவனமாகும்.

அது தொலைத்தொடர்பு துறையில் இணைந்து சாதனை படைத்துள்ளது. தற்போது இந்த நிறுவனத்தின் கிளைகள் நிறுவப்பட்டுள்ளன. அதேபோன்று இந்த ஆண்டு, இந்த பல்கலைக்கழகம் ஆராய்ச்சி பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டுள்ளது. மானிடவியல், கலை மற்றும் சமூக அறிவியல் நிறுவனமே இன்று திறக்கப்படுகிறது.

நமது நாட்டிற்கு தொழில்நுட்பத் துறைகளில் சமச்சீர் கல்வி தேவை. அதற்காக இன்று “ஆட்சி மற்றும் அரச கொள்கை மையம்” உள்ளது. இலங்கையில் எமக்கு ஒரு ஆராய்ச்சிப் பல்கலைக்கழகம் தேவை என்பதையும், அரச சார்பற்ற பல்கலைக்கழகங்கள் கூட ஆராய்ச்சிக்கு உதவுகின்றது என்பதை கூற வேண்டும்.

அதற்கான திட்டத்தை நீங்கள் முன்வைத்தால், நாங்கள் நிதி உதவிகளை வழங்க முடியும். நமது நாடு பொருளாதார நெருக்கடியில் இருந்தாலும், இவ்வாறானதொரு நிதி உதவியைக் கூட வழங்க முடியாத அளவுக்கு சரிந்துவிடவில்லை.

ஆனால் இந்த நெருக்கடியை ஒரு “வாய்ப்பு” என்று கலாநிதி ஹார்வர்ட் நிக்லஸ் கூறியதை நான் கேட்டேன். ஏற்றுமதி பொருளாதாரத்திற்கு மாத்திரமின்றி, உயர்கல்வி, ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத்திற்கும் இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். ஏனெனில் பசுமை ஹைட்ரஜன், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, வழங்கல், புதிய சுற்றுலாக் கைத்தொழில், தொழில்நுட்ப  டிஜிட்டல் மயமாக்கல் ஆகியவற்றிற்கான நமது திறனின் அடிப்படையில் அமைந்த புதிய பொருளாதாரமொன்றைக் கட்டியெழுப்பும் நமது ஏற்றுமதிப் பொருளாதாரத்தை அதுதான் இயக்குகின்றது.

நாம் வெற்றிபெற வேண்டுமாயின், உற்பத்திச் செயல்முறை தன்னியக்க மற்றும் அரை தன்னியக்க அடிப்படையில் இருக்க வேண்டும். இந்தியா, பங்களாதேஷ் அல்லது மியான்மார் போன்ற தெற்காசியாவில் ஊதியம் பெறும் தொழிற்படையின் எண்ணிக்கையை மிஞ்ச எங்களுக்கு வேறு வழியில்லை. எனவே, இது பொருளாதாரத்தின் ஒரு துறையாகும். நாம் இப்போது பொருளாதார ஸ்திரத்தன்மையின் ஒரு கட்டத்தில் இருக்கிறோம்.

மார்ச் மாதத்திற்குள், நமது நாட்டின் கடன் மறுசீரமைப்பை ஆரம்பிக்கலாம் என்று சர்வதேச நாணய நிதியம் அறிவிக்கும் என்று நான் நம்புகிறேன். ஆனால் அதற்கு அரசியல் ஸ்திரத்தன்மையும் சமூகத்தில் புதிய மனப்பாங்கு மாற்றமும் தேவை. புத்தாக்கத்துக்கு புதிதாக சிந்திக்கவும் வேண்டும்.

புதிய சிந்தனைக்கு புதிய பல்கலைக்கழகங்கள் தேவை. எனவே 1978ஆம் ஆண்டிலிருந்து பல்கலைக்கழகங்களுக்கு எவ்வளவு பணம் செலவழித்துள்ளோம் என்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

இன்று உயர்கல்வியில் ஏற்பட்டுள்ள அனைத்து மாற்றங்களையும் நாம் சிந்திக்க வேண்டும். நான் கல்வி கற்ற கொழும்புப் பல்கலைக்கழகத்தைப் பற்றிக் கூறினால், அறுபதுகளின் இறுதியில் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம்தான் முழு ஆசியாவிலும் கௌரவத்தைப் பெற்றிருந்தது.

ஆனால் நாம் செலவழித்த பணத்திற்கு ஏற்ப பல்கலைக்கழகங்களுக்கு பெறுமதி இருக்கிறதா என்று கண்டறிய வேண்டும். எனவே, உயர்கல்வி நிறுவனங்களுக்கு பணம் கொடுக்கையில் , ஏற்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து சிந்திக்க வேண்டும். பல்கலைக்கழகங்களில் என்ன நடக்கிறது என்பதை அறிய இந்த நாட்டு மக்களுக்கு உரிமை உள்ளது

கூட்டுத்தாபனத்தில் அல்லது பல்கலைக்கழகத்தில் மக்கள் வேலைநிறுத்தம் செய்த மாத்திரத்தில் இந்த அரசாங்கம் மாறாது. நாங்கள் விதிகளைப் பின்பற்றி அதன்படி செயல்படுகிறோம்.

இல்லை என்றால் அடுத்த முறை பீடாதிபதிகளையும் அதன் பிறகு துறைத்தலைவர்களையும் நீக்க விரும்புவார்கள். அப்போது அவர்களின் சம்மதம் இல்லாமல் பேராசிரியரை நியமிக்க முடியாது என்பார்கள்.

பல்கலைக்கழகங்களில் என்ன நடக்கப் போகிறது என்பதை நாம் ஆழமாகக் கண்காணிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

பாரிய எதிர்பார்ப்புகளுடனே பெற்றோர் தமது பிள்ளைகளின் கல்விக்காக செலவு செய்கின்றனர்.   எனவே, பல்கலைக்கழகங்கள் முறையாகச் செயல்பட வேண்டும். ருஹுனு பல்கலைக்கழகத்தின் நிலை குறித்து மிகவும் வருந்துகிறோம்.

ஆனால், இன்று புதிய மையமொன்றை ஆரம்பிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இன்று நாம் ஒரு மாற்று யுகத்தை கடந்து கொண்டிருக்கிறோம்.

எனவே,  உயர்கல்வி மாற வேண்டும். நாட்டில் பரந்துபட்ட கலந்துரையாடலுக்குப் பிறகுதான் அது மாற வேண்டும். சர்வதேச நாணய நிதியம் மற்றும் கடன் மறுசீரமைப்பு தொகுப்பு நிறைவடைந்ததுடன் அந்த விரிவான கலந்துரையாடல்களை ஆரம்பிக்க எதிர்பார்க்கின்றோம்.

இன்று நீங்கள் ஆட்சி மற்றும் அரச கொள்கைக்கான மையத்தைத் திறந்துள்ளீர்கள். இலங்கையில் குறைவாக  கவனம் செலுத்தப்படும்  துறைகளில் இதுவும் ஒன்று. மேலும், ஆட்சி மற்றும் அரச கொள்கை குறித்த பல்கலைக்கழகத்தை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

தலைமன்னாருக்கும், இராமேஸ்வரத்திற்குமிடையிலான கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ...
தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் 10 நாள்களில் 10 ஆயிரம் கட்டில்கள் திட்டம் - வடக்கு மாகாண சுகாதாரப் பணிப...
நிரந்தர நியமனங்களை விரைவுபடுத்தித் தருமாறு சுகாதாரத் தொண்டர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரி...