இலங்கை பொலிஸ் சேவையில் பதவி உயர்வுகளில் பெண்களுக்கு அநீதி இளைக்கப்படுகின்றதா? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி.கேள்வி!

Thursday, September 20th, 2018

இலங்கை பொலிஸ் சேவையானது கடந்த 03ஆம் திகதி தனது 152ஆவது வருடத்தினைப் பூர்த்தி செய்துள்ளது. இந்த நிலையில், இலங்கை பொலிஸ் சேவையில் பெண் பரிசோதகர்கள் பதவி உயர்வுகளிலிருந்து தடுக்கப்பட்டு வருகின்றனர் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகின்றது.

1997ஆம் ஆண்டு இலங்கை பொலிஸ் சேவையில் 120 பெண்கள் உதவி பரிசோதகர்களாகப் பதவியில் இணைந்து கொண்டனர் என்றும், இவர்களில் சிலர் 2003 மற்றும் 2006ஆம் ஆண்டுகளில் சிரேஷ்ட பரிசோதகர்களாக பதவி உயர்த்தப்பட்டனர் என்றும், ஏனையோர் அனைவரும் பதவி உயர்த்தப்படவில்லை என்றும், சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் நிலைக்கான பெண்கள் தரப்பு வெற்றிடங்கள் இன்மையே இதற்குக் காரணம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலைமை காரணமாக இலங்கை பொலிஸ் சேவையில் இணைந்து கொள்கின்ற பெண்கள், உதவி பொலிஸ் மா அதிபராகவோ, சிரேஷ்ட பொலிஸ் மா அதிபராகவோ, பொலிஸ் மா அதிபராகவோ வர இயலாத சூழ்நிலை இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போதைய நிலையில் அரசியலில் பெண்களுக்கு 25 வீதமான ஒதுக்கீடுகளை வழங்குவதற்கு முன்வந்துள்ள நாட்டில், பொலிஸ் சேவையில் பெண்கள் தொடர்பில் காணக்கூடியதான மேற்படி நிலைப்பாடானது, பெண்களின் உரிமையினை மறுதலிப்பதாகவே உள்ளதாகத் தெரிய வருகின்றது.

இந்நிலையில் இலங்கை பொலிஸ் சேவையில் இதுவரையில் பதவி உயர்வு பெற்றுள்ள பெண் பரிசோதகர்கள் எத்தனைப் பேர்? உயர்த்தப்பட்ட பதவி நிலைகள் என்ன?

இலங்கை பொலிஸ் சேவையில் பதவி உயர்வு பெறக்கூடிங நிலையில் தற்போதைய நிலையில் எத்தனை பெண் பரிசோதகர்கள் சேவையில் இருக்கின்றனர்?

மேற்படி பெண் பரிசோதகர்களுக்கான பதவி உயர்விற்கான வெற்றிடங்கள் இல்லை எனக் கூறப்படுகின்ற நிலையில், வெற்றிடங்களை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா?

மேற்படி பெண் பரிசோதகர்களுக்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட இயலும் எனில், எப்போது அதனை வழங்க முடியும் என்பதை அறியத்தர முடியுமா?

மேற்படி விடயம் தொடர்பில் பதில்களையும், எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பான விளக்கங்களையும் கௌரவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார அவர்கள் வழங்குவார் என எதிர்பார்க்கின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அரச நிர்வாக, முகாமைத்துவ மற்றும் சட்டம், ஒழுங்கு விவகார கௌரவ அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார அவர்களிடம் கோரிக்கைவிடுத்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற கேள்வி நேரத்தின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts:

உங்கள் எதிர்காலம் உங்கள் கரங்களில் : வழிகாட்டியாக நான் இருக்கிறேன் என்னுடன் கைகோருங்கள்-கிளி.கல்மடு ...
நாவலர் கலாசார மண்டப வாக்குச் சாவடியில் தனது வாக்கைப் பதிவுசெய்தார் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!
தோழர் அமீனின் இழப்பு, எமது இனத்திற்கு மாத்திரமன்றி எனக்கு தனிப்பட்ட ரீதியிலும் பாரிய வெற்றிடத்தை ஏற்...