இரசாயண ஆயுதங்கள் எவ்வளவு ஆபத்தானதோ பொலித்தீன் பாவனையும் அவ்வாறானதே – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் சுட்டிக்காட்டு!
Wednesday, January 9th, 2019
இரசாயன ஆயுதங்கள் – இரசாயனப் பொருட்கள் தொடர்பிலான ஆபத்துகளிலிருந்து பாதுகாக்கின்ற வகையில், நாங்கள் இங்கு கலந்துரையாடிக் கொண்டிருக்கின்ற நிலையில், பொலித்தீன் – பிளாஸ்ரிக் போன்றவற்றின் ஆபத்தான பிடியிலிருந்து இந்த நாடு இன்றும்கூட விடுபடாமல், அவை ஒருவிதமான கோரப்பிடியாகவே தொடர்வதையும் நாங்கள் அவதானத்தில் கொள்ள வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நடைபெற்ற இரசாயன ஆயுதங்கள் சமவாயம் தொடர்பான திருச்சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் –
பொலித்தீன் – பிளாஸ்ரிக் பொருட்கள் கண்ட இடங்களில் எரியூட்டப்படுவதால், அதனால் ஏற்படுகின்ற பாதிப்புகள் தொடர்பில் எமது மக்கள் தெளிவு பெறாதவர்களாகவே இருப்பதையும் காணக்கூடியதாக உள்ளது.
அண்மையில், கரவனல்ல பகுதியில் ஓர் ஆதார வைத்தியசாலை வளாகத்தில் மருத்துவக் கழிவுகள் பகிரங்கமாக எரியூட்டப்பட்டிருந்ததாகவும் தென் பகுதி செய்திகள் தெரிவித்திருந்தன.
இத்தகையதொரு நிலைமை பலவாறாக – பல்வேறு இடங்களிலும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரப்படும் நிலையில், நேற்றைய தினம் மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களால் மக்கள் பயன்பாட்டிற்கு அளிக்கப்பட்டிருந்த ‘புதிய லக்கல பசுமை நகரானது’ பொலித்தின் – பிளாஸ்ரிக் பொருட்களுக்கு தடை செய்யப்பட்ட நகரமாக அமையும் என அந்த நகரவாசிகள் குறிப்பிட்டிருக்கிறார்கள். இது ஒரு வரவேற்கத்தக்க முன்மாதிரியாகும். ஏற்கனவே, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இந்த நடைமுறையை மேற்கொண்டு வருகின்றது என்ற விடயத்தினையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
இந்த வகையில் அந்தந்த நிறுவனங்கள், மக்கள் சமுதாயம் தெளிவு நிலை பெற்று, இந்த நாட்டின், நாட்டு மக்களின், நாளைய சந்ததிகளின் நன்மை கருதி, செயற்பட முன்வருவார்களேயானால், இந்த நாடும், நாட்டு மக்களும் நன்மையடைவார்கள் என்பது நிச்சயம்.
ஆனால், எமது மக்களின் பணத்தில் ஊதியம் உட்பட ஏனைய வரப்பிரசாதங்களையும் பெற்றுக் கொண்டு, அந்த மக்களின் நலன்கருதி செயற்பட வேண்டிய சில அதிகாரிகளும் சில அரசியல்வாதிகளும் தங்களது தனிப்பட்ட அரசியல் நலன்களுக்காக அல்லது அரசியல் அழுத்தங்களுக்காக அல்லது சுய ஆதாயங்களுக்காக எமது மக்களை பலியிடுகின்ற செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற நிலைமைகளையே தடுத்து நிறுத்த வேண்டியுள்ளது என்பதையும் நான் இங்கு வலியுறுத்திக் கூற விரும்புகின்றேன்.

Related posts:
|
|
|


