இந்திய இழுவை வலைப் படகுகள் ஏற்படுத்தும் அழிவுகளுக்கு நட்டஈடு ஈடாகாது. – தடுத்து நிறுத்துமாறு அமைச்சர் டக்ளஸிற்கு சிலாபத்திலும் அழுத்தம்!

Saturday, May 13th, 2023


~~~
இலங்கையின் கடல் வளங்களை அழிக்கும் வகையில் இந்தியக் கடற்றொழிலாளர்கள் இலங்கை கடலில் மேற்கொண்டு வருகின்ற சட்டவிரோதமான இழுவைமடி வலைத் தொழிலை முற்றாக கட்டுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளதுடன், இழப்பீடுகள் எவையும் இந்தியப் படகுகளினால் ஏற்படுத்தப்படுகின்ற அழிவுகளுக்கு ஈடாக அமையாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிலாபத்திற்கான விஜயத்தினை இன்று(13.05.2023) மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் குறித்த பிரதேச கடற்றொழிலாளர் பிரதிநிதிகளுக்குமான கலந்துரையாடலின் போதே மேற்குறிப்பிடப்பட்ட விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சர், இந்தியக் கடற்றொழிலாளர்களின் அத்துமீறி எல்லை தாண்டிய சட்ட விரோத தொழில்முறை காரணமாக சிலாபம் புத்தளம் பிரதேச கடற்றொழிலாளர்கள் மாத்திரமன்றி வடக்கு மாகாணத்தை சேர்ந்த கடற்றொழிலாளர்களும் பெரும் அச்சுறுத்தலை எதிர்கொண்டு வருவதாகவும், அதனை தடுப்பதற்கு முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பாகவும் தெளிவுபடுத்தினார்.

அதேவேளை, இந்திய கடற்றொழிலாளர்களுக்கு இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க அனுமதி வழங்குவது தொடர்பாக சிலாபம் கடற்றொழிலாளர்களினால் வெளிப்படுத்தப்பட்ட சந்தேகத்தினை, முற்றாக மறுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, விரைவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளமையில், குறித்த விஜயத்தின் போது கடற்றொழிலாளர் விவகாரம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் எனவும் நம்பிக்கை வெளியிட்டார்.

சிலாபம் பகுதியில் வாழ்ந்து வருகின்ற சுமார் 15,000 கடற்றொழிலாளர்களின் பிரதிநிதிகளுக்கும் கடற்றொழில் அமைச்சருக்கும் இடையிலான இன்றைய கலந்துரையாடலில், சிலாபம் மீன் சந்தையில் அமைக்கப்பட்டுள்ள சந்தை கட்டிடத்தில் வியாபார நடவடிக்கையை முன்னெடுத்தல், சிலாபம் துறைமுகத்தில் பொருத்தப்பட்டிருந்த வானொலி தொடர்பாடல் கருவியை பழுதுபார்த்து செயற்படுத்தல், பேர்ள் எக்ஸ்பிரஸ் நட்ட ஈட்டினை சிலாபம் கடற்றொழிலாளர்களுக்கும் கிடைக்கச் செய்தல், ஒயிலை குறைந்த விலையில் பெற்றுக் கொடுத்து கடற்றொழிலாளர்களுக்கான எரிபொருள் செலவை கட்டுப்படுத்தல் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பாக பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தது.

ஊடகப் பிரிவு:- கடற்றொழில் அமைச்சர் – 13.05.2023

Related posts:


வடமராட்சி பகுதி மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் செயலாளர் நாயகம் நேரில் ஆராய்வு!
மக்களின் நலன்களுக்காக நீதிமன்றம் செல்லாதவர்கள் சுயலாபங்களுக்காக நீதிமன்றம் சென்றுள்ளார்கள் – செயலாளர...
குண்டு வெடிப்புக்கள் கண்டனத்திற்குரியவை : மக்கள் பாதுகாப்பாகவும் விழிப்புனர்வுடனும் இருக்க வேண்டும் ...