இந்தியா எமது நாட்டின் மீது அதிருப்தியாக இருக்கும் என்று நான் கருதவில்லை – அமைச்சர் டக்ளஸ் நம்பிக்கை!

Saturday, February 13th, 2021

இந்தியக் கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய சட்ட விரோதச் செயற்பாடுகள் தொடர்பாக இந்தியா எமது நாட்டின் மீது அல்லது அரசாங்கத்தின் மீது அதிருப்தியாக இருக்கும் என்று நான் கருதவில்லை. காரணம், குறித்த விவகாரத்தில் இருக்கக்கூடிய நியாயத் தன்மை தொடர்பாக இந்தியாவிற்கு நல்ல புரிதல் இருக்கின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியின் போது குறித்த ஊடகவியலாளர் இந்தியக் கடற்றொழிலாளர் விவகாரம் மற்றும் கொழும்புத் துறைமுக விவகாரம் போன்றவற்றில் இந்தியா திருப்தியாக இல்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றனவே. இந்நிலை தொடர்பில் தங்களது கருத்து என்ன என எழுப்பியிருந்த கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில் –

குறித்த விவகாரத்தினை தீர்த்து வைப்பதற்காக தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே அமைச்சு அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுககள் ஆரம்பித்துள்ள நிலையில், கொள்கை ரீதியான முடிவுகளை மேற்கொள்வதற்கான அமைச்சர்கள் மட்டப் பேச்சுவார்த்தை தொடர்பான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

அதேநேரம் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் நீண்ட வரலாற்றுத் தொடர்பு இருக்கின்றது. உணர்வுகளால் உறவுகளினால் கலாச்சாரத் தொடர்புகளினால் இரண்டு நாடுகளுக்கும் இடையில் இருக்கும் நெருக்கம் பிரிககப்பட முடியாதது.

அது மாத்திரமன்றி, பூகோள அரசியல் ரீதியிலும் இலங்கையின் அமைவிடம் இந்தியாவிற்கு முக்கியமானது. அதேபோனறு இலங்கையின் ஸ்திரத்தன்மைக்கு  இந்தியாவுடனான உறவு அவசியமானது. எனவே இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவென்பது எப்பொழுதும் பலமானதாகவே இருக்க வேண்டும். 

அதேபோல நல்லாட்சி என்று பெயரில் கடந்த ஆட்சிக் காலத்தில் அரசாங்கத்தினை நடத்தியவர்கள் ஏற்படுத்திய குழப்பங்களில் ஒன்றுதான் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய விவகாரம்.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தினை சீனாவிடம் கையளித்தார்கள். அதேபோன்று கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தினை இந்தியாவிற்கும் ஜப்பானிற்கும் வழங்குவது தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திட்டார்கள். இவ்வாறு பூகோள அரசியலை கையாளும் திறனற்ற சில தீர்மானங்களினால் எமது நாட்டை சுற்றிக் குழப்பங்களை உருவாக்கி வைத்திருக்கின்றார்கள்.

அதேவேளை. கடந்த அரசாங்கம் செய்து கொண்ட புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு மாறாக தற்போதைய அராசாங்கம் தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளுமாயின், அது பூகோள அரசியல் சார்ந்த சிந்தனையின் அடிப்படையில் இந்தியாவிற்கு தற்போதைய அரசாங்கம் தொடர்பாக தவறான புரிதலையும் ஏற்படுத்தும் என்பதை அண்மையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அவர்கள் வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்தான், அண்மையில் அமைச்சரவை பத்திரம் ஒன்று துரைசார் அமைச்சரினால் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில் 51 வீதமான உரிமையா இலங்கை துறைமுக அதிகார சபைக்கும் 49 வீதமான பங்குகளை இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்குவது தொடர்பாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தொழிற்சங்ககள் குறித்த முனையத்தின் ஒரு பகுதியைக்கூட வெளியாருக்கு வழங்குவதற்கு அனுமதி அளிப்பதில்லை என்ற நிலைப்பாட்டில் இருப்பதாக தெரிகின்றது என தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  எவ்வாறெனினும், தனது 50 வருட கால அரசியல் அனுபவத்தில் தொழிற்சங்கப் போராட்டங்கள் பலவற்றை வெற்றிகரமான தீர்த்து வைத்த அனுபவமுள்ள எமது பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் வழிநடத்தலிலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தலைமையிலும் செயற்பட்டு வருகின்ற தற்போதைய அரசாங்கம் குறித்த விவகாரத்தினை வெற்றிகரமாக கையாளும் என்று நம்புவதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்து.

Related posts:


பணமோசடி செய்த சப்றா நிறுவன உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் - நாடாளுமன்றில் டக்...
மக்கள் நலனை முன்னிறுத்திய சட்ட ரீதியான செயற்பாடுகளுக்கே அனுமதி - பூநகரியில் அமைச்சர் டக்ளஸ் திட்டவட்...
வடக்கு கிழக்கில் பிராந்திய ஆராய்ச்சி நிலையங்களை உருவாக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்க...