ஆழிப் பேரலை அனர்த்த தினத்தை அனைவரும் நினைவு கூருவோம்- செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அழைப்பு!

Sunday, December 25th, 2016
ஆழிப் பேரலை நிகழ்ந்து 12 வருடங்கள் கழிந்துள்ள நிலையில், அதனை நாளைய தினமும் நினைவுகூர்ந்து இரண்டு நிமிட நேர மௌனத்தினாடாக இறந்த மக்களுக்கு எமது அஞ்சலியினைத் தெரிவிப்போமாக என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் அவர்கள், 2004ம் வருடம், டிசம்பர் மாதம் 26ம் திகதி இந்தோனேசியாவை அண்மித்த கடற்பரப்பில் பூகம்பம் ஒன்று எற்பட்டு சுமார் 3 மணி நேரம் கழிந்த நிலையில் சுனாமி பேரலைத் தாக்கம் இலங்கையை வந்தடைந்தது. ஒரு மணி நேரத்திற்கு சுமார் 1000 கிலோ மீற்றர் வேகத்தில் மேலெழுந்திருந்த பேரலைகள் காலை 8.05க்கு இலங்கையில் முதலில் காரைநகர் பகுதியைத் தாக்கின. பின்னர் காலியில் சுமார் 7000 மக்களைக் காவு கொண்டதுடன், ஹிக்கடுவ பகுதியில் புகையிரதத்தில் பயணஞ் செய்திருந்த சுமார் 3000 மக்களையும் பலியெடுத்து, எமது நாட்டில் வடக்கு, கிழக்கு என பாரிய உயிரிழப்புக்களை ஏற்படுத்தியதுடன், சொத்துக்கள் பலவும் அழிக்கப்பட்டன.
உலகளாவிய ரீதியில் நிகழ்ந்த மிகவும் கோரமான சுனாமி அனர்த்தமானது, எற்கனவே யுத்தம் காரணமாகப் பாதிக்கப்பட்டிருந்த எமது வடக்கு – கிழக்கு மாகாண மக்களுக்கு மேலதிகமான பாதிப்பினையே உண்டு பண்ணியிருந்தது.
அந்த வகையில், சுனாமி காரணமாக வடக்கில் மிக அதிகமான உயிரிழப்புக்களுக்கு உடுத்துறை பகுதி முகங்கொடுத்திருந்தது.   சுனாமியால் உயிரிழந்த மக்களது 1084 கல்லறைகள் காணப்படுகின்ற இப் பகுதியில் 2009ம் வருடம், யுத்தம் முடிவடைந்ததன் பின்னரான முதலாவது நினைவேந்தல் நிகழ்வினை நாம் கொல்லப்பட்ட அந்த மக்களின் உறவுகளுடன் முன்டுனெடுத்திருந்தோம். பாதுகாப்புத் தரப்பினரின் கட்டுப்பாட்டில் அப்பகுதி இருந்த நிலையில் இந்த நினைவேந்தலை மேற்கொள்வதற்கும், பின்னர் அப்பகுதி உட்பட வடமராட்சிக் கிழக்கில் 80 வீதமான எமது மக்களின் நிலங்களை விடுவித்து, அவற்றை எமது மக்களிடம் கையளிக்கவும் எம்மால் இயலுமாயிற்று. மேலும், அப்பகுதியில் கடல் நீர் உட்புகும் பாதைகளின் பாதுகாப்பு தொடர்பிலும் அண்மையில் நாம் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் அவதானத்துக்கு கொண்டு வந்துள்ளோம்.
எனவே, வருடந்தோறும் நாம் சுனாமி நினைவு தினத்தை நினைவு கூர்ந்து, கொல்லப்பட்ட எமது உறவுகளுக்கு ஆத்ம சாந்நி வேண்டுவதுடன், இனியும் அவ்வாறானதொரு பாதிப்பு ஏற்படாத வகையில் எமது சுற்றுச் சூழலைப் பாதுகாத்துக் கொள்வதற்கும் முன்வரவேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Untitled-3 copy

Related posts: