ஆணைக் குழுக்கள் என்ற பெயரில் மக்களின் பணம் வீணடிக்கப்பட்டுக் கொண்டிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Saturday, October 13th, 2018

நாட்டில் ஆணைக்குழுக்கள் அமைக்கப்படுகின்ற நிலையில், அவை அவற்றுக்கு பொறுப்பு ஒப்படைப்படுகின்ற பணிகளை உரிய முறையில் ஆற்றவில்லை எனில், அந்த ஆணைக்குழுக்கள் பெயரளவில் இயங்கி, இந்த நாட்டு மக்களின் பணத்தை வீண் விரயம் செய்து கொண்டிருப்பதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதை முதலில் ஒவ்வொருவரும் அவதானத்தில் கொள்ள வேண்டும் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் விசாரணை ஆணைக்குழுக்கள் திருத்தச்சட்டம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டபின் கருத்து தெரிவிக்கையிலேயே   அவர் இவ்வாறு தெரிவித்ததுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

இந்த நாட்டில் இலஞ்சம், ஊழல், மோசடி என்பவை தொடர்பில் பல நிறுவன அமைப்புகள் செயற்பட்டு வருகின்றன. இந்த நாட்டில் இலஞ்சம், ஊழல், மோசடிகள் மலிந்து காணப்படுவதாக அன்றாட ஊடகங்களில் வெளிவருகின்ற செய்திகள் ஊர்ஜிதப்படுத்திக் கொண்டிருக்கின்றன.

1994ஆம் ஆண்டு இலஞ்சம், ஊழல் தொடர்பிலான ஆணைக்குழு நிறுவப்பட்டது முதல் கடந்த ஆண்டுவரையில் சுமார் 23 வருடங்களாக இலஞ்சம், ஊழல், மோசடிகள் தொடர்பில் 75 வழக்குகளே நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, அதில் 4 பேரினது குற்றங்கள் மாத்திரமே நிரூபிக்கப்பட்டு, தண்டனை வழங்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது.

இப்படியானதொரு செயற்பாட்டு நிலையில், இத்தகைய ஆணைக்குழுக்கள் இந்த நாட்டுக்குத் தேவையா? என மக்கள் கேட்பதில் நியாயம் இருக்கின்றது.

இந்த நாட்டில் இலஞ்சம், ஊழல், மோசடிகள் தொடர்பில் ஊடகங்கள் வெளிக் கொண்டு வருகின்றன. இந்த தகவல்களைப் பெற்று, அதனை உறுதிப்படுத்திக் கொண்டு, மேலதிகத் தகவல்களைப் பெற முயற்சிகளை மேற்கொண்டு, அந்தந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரித்து, மேலதிக சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கும் இந்த ஆணைக்குழுக்கள் முனையலாம். அப்படியும், சாத்திய ரீதியில் எதுவும் நடப்பதாக இல்லை. ஆக, இந்த நாட்டில் ஊடகங்கள் இத்தகைய பணிகளை மேற்கொள்கின்றபோது, ஊடகங்கள் கூறுவதெல்லாம் தவறு, பிழை, பொய் எனக் கூறிக் கொண்டிருக்காமல், அந்த தகவல்களை உறுதி செய்து பெற்றுக் கொள்வதற்கும் இந்த அரச நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்பதையும் இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.

அத்துடன் தற்போது இந்த இலஞ்ச, ஊழல், மோசடிகளை விசாரிப்பதற்கென மூன்று நீதிபதிகளைக் கொண்ட விசேட நீதிமன்றமொன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் மூன்று நீதிமன்றங்கள் நாட்டில் அமைக்கப்படும் என்று கூறப்பட்டது.

வடக்கு மாகாண சபையிலும், ஏற்கனவே வடக்கு மாகாண உள்ளூராட்சி சபைகள் பலவற்றிலும், அண்மையில் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றிருக்கின்ற யாழ்ப்பாணம் மாநகர சபையிலும் ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்ற இலஞ்சம், ஊழல், மோசடிகளைப் பார்க்கின்றபோது, வடக்கு மாகாணத்திற்கும் இத்தகையதொரு நீதிமன்றத்தின் தேவை ஏற்பட்டுள்ளது என்றே கூற வேண்டும்.

மேலும், இந்த நாட்டில் இலஞ்சம், ஊழல், மோசடிகளை இல்லாதொழிக்கும் வரையில் இந்த நாடு முன்னேற்றம் காணாது என்பதே யதார்த்தபூர்வமான விடயமாகும். இந்த அரசாங்கமும் இதனை ஒழிப்பதாகக் கூறிக் கொண்டுமே ஆட்சிக்கு வந்தது. இருந்தும் இவ்விடயம் தொடர்பில் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றதே தவிர, எதுவுமே உரிய முறையில் மேற்கொள்ளப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு மக்கள் மத்தியில் இருந்து வருவதையும் இங்கு நினைவூட்டி,

அமைக்கப்படுகின்ற ஆணைக்குழுக்கள் அவற்றுக்கான பொறுப்புகளை செவ்வனே நிறைவேற்றுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும், அவற்றின் சுயாதீனமான செயற்பாடுகளுக்கு எவ்விதமான வெளித் தலையீடுகளும் இருக்கக்கூடாது என்றும், வெளிநாடுகள் கூறுவதற்காக ஆணைக்குழுக்களை, அலுவலகங்களை அமைத்தோம் என்றிருக்காமல், அவை இந்த நாட்டில் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மக்களின் நலன்; சார்ந்து பணியாற்ற வேண்டும் என்றும்.

Related posts:


திருமலை மாவட்ட கிராம மக்களது நிலைமைகள் தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று ஆராய்வு!
மாற்றத்தை விரும்பும் தமிழ் மக்களுக்காக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் குறித்து நாம் எடுத்திருக்கும் உ...
திருமலையில் தமிழர்களின் இருப்பை பாதுகாத்து தாருங்கள்: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் திருமலையில் கோர...