‘அருகிலுள்ள பாடசாலை நல்ல பாடசாலை’ என்றால் அத்தகைய வளங்களைக் கொண்ட எத்தனை பாடசாலைகள் வடக்கில் இருக்கின்றது? – டக்ளஸ் எம்.பி கேள்வி!

Friday, March 15th, 2019

வவுனியா மாவட்டத்தைப் பொறுத்தவரையில் தேசிய பாடசாலைகள் அடங்கலாக 300க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுவதாகத் தெரிய வருகின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 438 ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுவதாகத் தெரிய வருகின்றது. இதேபோன்று வடக்கு மாகாணத்தில் ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் அதிகளவில் காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

அதேநேரம், பல கிராமிய மட்ட பாடசாலைகளில் காணப்படுகின்ற ஆசிரியர் மற்றும் வளப் பற்றாக்குறைகள் காரணமாக பல பாடசாலைகளுக்கு செல்கின்ற மாணவர்களது எண்ணிக்கையில் வீழ்ச்சி நிலை காணப்படுகின்றது. இதற்குக் காரணம், அப்பாடசாலைகளில் காணப்படுகின்ற பற்றாக்குறைகளாகும். ஒழுங்கு முறையில் ஆசிரியர் மற்றும் ஏனைய வளங்கள் பகிரப்பட்டிருந்தால் இந்நிலை ஏற்பட்டிருக்காது.

இன்று, குறிப்பாக மீள்குடியேற்றப் பகுதிகளில் – வன்னிப் பகுதிகளில் – அப் பகுதிகளில் பாடசாலைகள் இயங்குகின்ற நிலையிலும் மாணவர்கள் அப்பாடசாலைகளுக்குச் செல்லாது, 10 முதல் 20 கிலோ மீற்றர் தூரம் வரையில் நடந்து சென்று வேறு பாடசாலைகளில் கல்வி கற்கின்ற நிலையும் காணப்படுகின்றது என்றால், அதற்குக் காரணம் இந்த வளப் பற்றாக்குறையே ஆகும்.

கடந்த 10 ஆண்டுகளாக 50 மாணவர்களுக்கும் குறைந்த மாணவர்களைக் கொண்டிருக்கின்ற பாடசாலைகள் மூடப்படும் என்றும் இந்த நிலையில் வடக்கில் 248 பாடசாலைகள் மூடப்படும் சாத்தியம் இருப்பதாகவும் கூறப்படுகின்றது. வடக்கு மாகாணத்தில் ஏறத்தாள 1000 பாடசாலைகள் தற்போது இயங்குகின்றன என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற 2019 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் கல்வி, நகர திட்டமிடல், நீர் வழங்கல், வடிகாலமைப்பு மற்றும் உயர் கல்வி ஆகிய அமைச்சுக்கள் தொடர்பில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

ஏறத்தாள இந்த 1000 பாடசாலைகளில் 248 பாடசாலைகள் மூடப்படுமானால், மூடப்படுகின்ற பாடசாலைகளின் மாணவர்களை அருகிலுள்ள பாடசாலைகள் இணைப்பதானால்,  அவ்வாறு இணைக்கப்படுகின்ற பாடசாலைகளிலும் வளப் பற்றாக்குறைகள் காணப்படுமானால், அந்த மாணவர்களது கல்வி நிலை என்னாவது? என்ற கேள்வி எழுகின்றது.

‘அருகிலுள்ள பாடசாலை நல்ல பாடசாலை’ என்ற திட்டத்தின் கீழ் அந்தப் பாடசாலை சகல வளங்களுமுள்ள பாடசாலையாக்கப்படும் என நீங்கள் அதற்குப் பதில் கூறினால், அந்த வகையில் எத்தனைப் பாடசாலைகள் வடக்கு மாகாணத்திற்குக் கிடைக்கும்? என்ற கேள்வி எழுகின்றது.

Related posts:

சமுர்த்தி நலனுதவி கோரும் குடும்பங்களுக்கு விரைவில் தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் - டக்ளஸ் ...
வடக்கு போக்குவரத்து சபைகளில் இடம்பெற்ற பதவி உயர்வு முறைகேடுகள் இன்னமும் உரியவாறு விசாரிக்கப்படவில்லை...
எமது மக்கள் நான் பயணிக்கும் பாதையை பலப்படுத்துவார்களாயின்தமிழ் மக்களின் எதிர்காலத்தை வெற்றிகொண்டு சா...

தனியார்துறை ஊதிய உயர்வு வெறும் எழுத்து மூல ஆவணம்தானா? நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா
மக்களுக்கான அபிவிருத்தித்திட்டங்களை நான் செயல்படுத்துவதை யாரும் தடுக்க முடியாது – ஊடகவியலாளர் சந்திப...
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை - அவசியமான எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை ...