அரசியல் தீர்வும், அபிவிருத்தியும் சமாந்தரமாக முன்னெடுக்கப்பட வேண்டும் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Wednesday, July 11th, 2018

அரசியல் உரிமைக்கான தீர்வையும், அபிவிருத்தியை தமிழ்க் கட்சிகள் இரு கண்களைப்போன்று முன்னெடுக்க வேண்டும் என்று அமைச்சர் மனோகணேசன் கூறியிருப்பதை வரவேற்கும் அதேவேளை, இதற்கு முன்னர் ஒரு சந்தர்ப்பத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் அரசின் ஆதரவு எதிர்க்கட்சித் தலைவராக இருப்பதை விடவும் மத்திய அமைச்சராக இருந்தால் தமிழ் மக்களுக்கு பல காரியங்களைச் செய்யலாம் என்றும் கூறியிருந்ததையும் நான் ஞாபகப்படுத்திக் கொள்கின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

அமைச்சர் மனோகணேசன் கூறியதைக் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக எமது அரசியல் வேலைத்திட்டமாக வகுத்துக்கொண்டு தேசிய அரசியல் நீரோட்டத்திலும், தொடர்ச்சியாக 25 வருட நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அனுபவத்தின் ஊடாகவும் முன்னெடுத்து வருகின்றேன்.

யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதும், யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னரும் யுத்தப்பாதிப்புக்கு முகம் கொடுத்தும் அரசியல் அநாதரவாக தமிழ் மக்கள் நின்றபோது நாம் முன்னெடுத்த அபிவிருத்தித் திட்டங்களையும், மீள் எழுச்சித் திட்டங்களையும்,

வாழ்வாதாரங்களையும் எதிர்த்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், அரசியல் தீர்வு பெற்றுக்கொள்ளப்பட்ட பின்னரே அபிவிருத்தியும், மக்களுக்கு உணவும், வேலைவாய்ப்பும், வாழ்வாதாரமும் தேவை என்று கூறியதுடன், எம்மை தூற்றினார்கள். அவதூறுகளைச் சுமந்து கொண்டும் எமது மக்களின் அபிவிருத்திக்காகவும், மீள் எழுச்சிக்காகவும் நாம் உழைத்தோம்.

அதற்காகவே யுத்தத்தை நடத்திய அரசுகளுடனும், யுத்தத்தை வென்ற அரசுடனும் பல்வேறு அசௌகரியங்களுக்கு மத்தியிலும் ஆட்சியில் பங்காளியாக இருந்து மக்கள் சேவையை முன்னெடுத்தோம்.

இன்று யுத்தக் கெடுபிடி இல்லாத போதும், ஆட்சியை ஏற்படுத்தியவர்கள், ஆட்சியாளர்களின் ஆசிர்வாதத்துடன் எதிர்க்கட்சியாக இருப்பவர்கள் தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சனைக்குத் தீர்வையும் உரிய காலத்தில் பெற்றுக்கொடுக்கவில்லை. நாளாந்தப் பிரச்சனைகளுக்கும் தீர்வைப்பெற்றுக்கொடுக்கவில்லை.

அரசியல் தீர்வு கிடைக்கத்தான் வேண்டும். அதற்காக நடைமுறைச்சாத்தியமாக முயற்சிக்கவும் வேண்டும். ஆனால் தீர்வு கிடைக்கும்வரை எமது மக்கள் எதிர்கொள்ளும் அபிவிருத்தி உள்ளிட்ட நாளாந்தப் பிரச்சனைகளுக்கும் தீர்வுகளும் பெற்றுக் கொடுக்கப்படவும் வேண்டும்.

தீர்வு கிடைத்த பிறகுதான் தமிழ் மக்களின் நாளாந்த பிரச்சனைகளுக்கு தீர்வைக்காணலாம் என்று கூறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மட்டுமல்ல ஏனைய சுயலாப தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும், தீர்வு கிடைத்த பிறகே உள்ளுராட்சி உறுப்பினர்களாகவும், மாகாணசபையின் உறுப்பினர்களாகவும், நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் அரசியல் பதவிகளை பெற்றுக்கொண்டிருக்க வேண்டும்.

அதுவரை அபிவிருத்தியையும், அரசியல் தீர்வையும் சமாந்தரமாக முன்னெடுப்போருக்கு இடையூறாக இருக்காமல் தமது வழிமுறையில் தீர்வுக்காக முயற்சிக்க வேண்டும்.

தமது குடும்பங்களின் சுகபோகமான வாழ்வை தீர்வுக்குப் பிறகு அணுபவிக்கச் செய்ய வேண்டும். தமது உறவுகளுக்கு அரச வேலைகள், அரசியல் சலுகைகளை தீர்வு கிடைத்த பின்னரே பெற்றுக்கொடுக்க வேண்டும்.

அவ்வாறில்லாமல் தமக்கும், தமது உறவுகளுக்கும் அரசிடம் பெற்றுக்கொண்டு, தமிழ் மக்களுக்கு தேவையானதை மட்டும் அரசியல் தீர்வுக்குப் பிறகுதான் செய்வோம் என்று கூறுவது நியாயமில்லை.

Related posts: