அமைச்சர் டக்ளஸின் இணக்கமான முயற்சியால் இரண்டாக பிரிக்கப்பட்டது கிளிநொச்சி கல்வி வலயம்!

கடற்றொழில் அமைச்சரும், ஒருங்கிணைப்புக்குழு இணைத் தலைவருமான டக்ளஸ் தேவானந்தாவின் இணக்கமான முயற்சியால் கிளிநொச்சி கல்வி வலயத்தை இரண்டு வலயங்களாகப் பிரிக்கப்பட்டது.
பல வருடங்களாக தீர்க்கப்படாமல் இருந்த இரண்டு வலயங்களை உருவாக்கும் கிளிநொச்சி மாவட்ட மக்களின் கோரிக்கையை, இணைத் தலைவர்களான அமைச்சர் டக்ளஸ் மற்றும், வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் ஆயோர் நேற்று வியாழக்கிழமை கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் பலதரப்பினரது கருத்துக்களையும் உள்வாங்கி நிறைவேற்றி வைத்தனர்.
முன்னதாக, கடந்த ஒக்டோபர் மாதம் 8 ஆம் திகதி யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற சமூக உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கான அமைச்சர்கள் குழுக் கூட்டத்தில், கிளிநொச்சி வலயப் பிரிப்பு தொடர்பாக கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது. இதையடுத்து அதற்கான முயற்சிகளை எடுக்க கல்வியமைச்சின் செயலாளர் இணக்கம் தெரிவித்திருந்தார்.
இதன் தொடர்ச்சியாக, இந்த வலயப் பிரிப்பை எவ்வாறு மேற்கொள்வது என்பது தொடர்பாக நவம்பர் மாதம் 23 ஆம் திகதி கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் மாவட்டச் செயலாளர் ரூபாவதி கேதீஸ்வரன் தலைமையில், கல்வியமைச்சின் செயலாளர் இளங்கோவன் மற்றும் மாகாண கல்விப் பணிப்பாளர், வலயக் கல்விப் பணிப்பாளர், கிளிநொச்சி மாவட்ட முன்னாள் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் பிரதேச பிரதிநிதிகள் பங்கேற்புடன் கூடி ஆராயப்பட்டது.
இதன்போது, கிளிநொச்சியில் தற்போது காணப்படும் கரைச்சி கோட்டத்தை ஒரு வலயமாகவும், பூநகரி, கண்டாவளை, பளைக் கோட்டங்களை ஒரு வலயமாகவும் பிரிப்பதாக யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது.
எனினும், பூநகரி, கண்டாவளை என்ற இரண்டு பரந்த நிலப்பரப்புக்களைக் கொண்ட கோட்டங்களை ஒரே வலயத்துக்குள் கொண்டு வருவதால், நிர்வாகத்தை நடத்துவதில் சிக்கல் ஏற்படும் என்று பிரதேச கல்வியலாளர்கள் தரப்பில் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து. இதுவிடயம் தொடர்பாக அனைத்துத் தரப்பினரதும் கருத்துக்களையும் உள்வாங்கும் வகையில், மாவட்டத்திலுள்ள அனைத்துப் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைப்பாளர் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் வை.தவநாதன் ஊடாகக் கேட்டறிந்துகொண்ட இணைத்தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இணைப்பாளர்களின் பங்கேற்புடன் வலயக் கல்பிப் பணிமனையில் நடைபெற்ற கலந்துரையாடலில் கோட்டக் கல்வி அதிகாரிகளின் கருத்துக்களையும் கேட்டறிந்துகொண்டார்.
இவ்வாறு அனைத்துத் தரப்பினரிடமிருந்தும் பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில், பரந்த நிலப்பரப்பில் அமைந்துள்ள கிளிநொச்சி மாவட்டத்தில் நான்கு கோட்டங்களைச் சேர்ந்த பாடசாலைகளுக்கும் நன்மை பயக்கும் வகையில் வலயப் பிரிப்புத் தொடர்பான முடிவை ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த மக்கள் பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடி இறுதி முடிவை எட்டினார்.
இதன்படி, ஒரே நிலத்தொடர்புள்ள கரைச்சி, பூநகரி கோட்டங்களை ஒரு வலயமாகவும், கண்டாவளை, பளைக் கோட்டங்கள் ஒரு வலயமாகவும் பிரிப்பது என்று ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|