தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களைத் தவிடு பொடியாக்கி வரும் கூட்டமைப்பு –   பத்தி எழுத்தாளர் தமிழின் தோழன்

Monday, May 23rd, 2016

கடந்த  ஆட்சிக்காலத்தில் அரசுடன்  இணக்க  அரசியல் நடத்திய ஈ.பி.டி.பி கட்சியினர் நாடாளுமன்றத்தில் அமைச்சுப் பதவியை பெற்றுக் கொண்டு அதன் மூலம் வடக்குத் தமிழ் மக்கள் நன்மையடையும்  வகையிலான பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டதுடன் மக்களுக்கான வாழ்வாதார உதவிகளையும் தொழில் வாய்ப்புக்களையும் பெற்றுக் கொடுத்தது மத்திய அரசுடனான இணக்க அரசியலில்  அப்போது அமைச்சராகப் பதவி வகித்த டக்ளஸ் தேவானந்தா வெற்றிகண்டார்.

ஆனால் , தற்போதைய அரசாங்கத்துடன் இணக்க அரசியல் நடத்தி வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மத்திய அரசுடன் சரணாகதி அரசியலையே நடத்தி வருகிறது என எண்ணுமளவுக்கு அவர்களின் செயற்பாடுகள் தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கையீனத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. அத்துடன் இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைமைப்  பதவியைப் பெற்றிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  பிரதமர் அதிகாரத்திற்கு நிகரான இந்தப் பதவி மூலம் தமிழ் மக்களுக்கு  இதுவரை பெற்றுக் கொடுத்தது என்ன ?  என்ற கெள்வியையும்  பத்தி எழுத்தாளர் தமிழின் தோழன் தனது கட்டுரையில் எழப்பியுள்ளார். அவரது கட்டுரையை எமது இணையத்தள வாசகர்களுக்காக பதிவிடுகின்றோம்.

யாழ். குடாநாட்டில் பல்வேறு சமூக விரோதச்  செயற்பாடுகள், போதைப் பொருள் பாவனை போன்ற செயற்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில் இவை அனைத்திலும் இளம் வயதினர் ஈடுபடுவதற்குத் தொழிலின்மைப் பிரச்சினையே பிரதான காரணமாகும் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி ) செயலாளர் நாயகமும், நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் சுட்டிக் காட்டியிருந்தார். அதுமட்டுமன்றி சுமார் மூன்று தசாப்த காலமாக யுத்த சூழ்நிலைக்குள் சிக்குண்டு, தற்போது அதிலிருந்து படிப்படியாக விடுபட்டு வருகின்ற சூழ் நிலையில் குறிப்பாக வன்முறைகளைத் தூண்டக்கூடிய தமிழ்நாட்டுத் திரைப்படங்கள், புதிய தகவல் தொழில்நுட்பங்களினூடான பாவனைகள், அதிகரித்துள்ள போதைவஸ்துப் பாவனைகள் என இவை அனைத்தும் சமூகச் சீர்கேடுகளுக்கான உந்து சக்திகளாக அமைகின்றன எனவும் கோடிட்டுக் காட்டியிருந்தார் .

அதுமட்டுமன்றி 10 இலட்சம் வேலைவாய்ப்புக்களை உருவாக்கும் தங்களது திட்டத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு – கிழக்கு மாகாண இளைஞர், யுவதிகள் உட்படக் கூடிய விகிதாசாரம் குறித்து தெளிவுபடுத்த முடியுமா? , கல்விப் பொதுத் தராதர உயர் தர பரீட்சையில் சித்தியடைந்தும் பல்கலைக்கழகம் செல்ல இயலாது, தற்போது தொழில்வாய்ப்புகளின்றி இருக்கின்ற இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்கக்கூடிய  திட்டங்கள் ஏதேனும் உள்ளனவா என்பது பற்றி அறியத்தர முடியுமா?, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு – கிழக்கு மாகாணங்களில் புதிய தொழில்வாய்ப்புக்களை உருவாக்கக்கூடிய வகையில் மேற்கொள்ளப்படக்கூடிய திட்டங்கள் ஏதேனும் உண்டா என்பது குறித்து அறியத்தர முடியுமா?  உள்ளிட்ட பல விடயங்களை சமூகப் பொறுப்புணர்வுடன்  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் அடுக்கடுக்காக வினாவியிருந்தார்.

அவர் நாடாளுமன்றத்தில் பிரதமரிடம் விடுத்த கோரிக்கையொன்றுக்கு பதிலளித்த பிரதமர்  புனர்வாழ்வு வழங்கப்பட்ட போராளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக சலுகை அடிப்படையிலான கடன் வழங்கப்படவுள்ளதாகக் கூறினார். இன்னொரு கோரிக்கைக்குப் பதிலளித்த அவர்  வடக்கு, கிழக்கு மாகாணங்களில் விதவைகள் மற்றும் குடும்பங்களை தலைமையேற்று நடத்தும் பெண்களது வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்களை உருவாக்கி உள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவி வகித்து வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் , தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் எனத் தங்களைத் தாமே தம்பட்டம் அடித்துக் கொள்ளும் கூட்டமைப்பு  நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூட யாழ்.குடாநாட்டில் அதிகரித்து வரும்  சமூக விரோதச் செயற்பாடுகள் தொடர்பில் இதுவரை தமது கரிசனையையும் , ஆக்க பூர்வமான கருத்துக்களையும் நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தியிருக்க்வில்லை. இந்த நிலையில் அண்மைக் காலமாக யாழில் தலை விரித்தாடும் சமூகவிரோதச் செயற்பாடுகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கெளரவ டக்ளஸ் தேவானந்தாநாடாளுமன்றத்தில் தனது கரிசனையையை வெளியிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

மகிந்த ராஜபக்ஷ  ஆட்சிக் காலத்தில் அந்த அரசுடன்  இணக்க அரசியல் நடாத்திய ஈ.பி.டி.பி கட்சியினர் நாடாளுமன்றத்தில் அமைச்சுப் பதவி பெற்றுக் கொண்டு அதன் மூலம் வடக்குத் தமிழ் மக்கள் நன்மையடையும்  வகையிலான பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் , திட்டங்களைப் பெற்றுத் தந்தார்கள். குறிப்பாக யாழ்.குடாநாட்டில் பிரதேசங்கள் தோறும் கட்சி அலுவலகங்களை அமைத்து மக்கள் குறைகளைக் கேட்டறிந்ததுடன், மக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதிலும் முன்னின்று செயற்பட்டனர். படித்து முடித்து விட்டு வேலையின்றித் தவித்த பல இளைஞர் , யுவதிகளுக்கு மத்திய அரசுடன் கதைத்துத்  தகுதிக்கேற்ப  தொழில் வாய்ப்பைப் பெற்றுக் கொடுப்பதற்கும், பாதிக்கப்பட்ட பல மக்களுக்கு வாழ்வாதார உதவிகளையும் பெற்றுக் கொடுத்ததில் அப்போது அமைச்சராகப் பதவி வகித்த கெளரவ டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை எடுத்து அதில் வெற்றியும் கண்டார்.

ஆனால் , தற்போதைய அரசாங்கத்துடன் இணக்க அரசியல் நடாத்தி வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணக்க அரசியல் என்பதை விட சரணாகதி அரசியலேயே நடாத்தி வருகிறதோ என எண்ணுமளவுக்கு அவர்களின் செயற்பாடுகள் தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கையீனத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைமைப்  பதவியைப் பெற்றிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதமர் அதிகாரத்திற்கு நிகரான இந்தப் பதவி மூலம் தமிழ் மக்களுக்கு  இதுவரை பெற்றுக் கொடுத்தது என்ன ? என்று கேட்டால் ஒன்றுமில்லை என்பது தான் பதிலாகவிருக்க முடியும் . தங்களுக்குப் புதிய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவி வேண்டாம் எனக் கூறிய கூட்டமைப்பு  பொறுப்பு வாய்ந்த எதிர்க் கட்சித் தலைவர் பதவியையும் , உயர் பதவிகளையும் பெற்று விட்டுத் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில்  நாடாளுமன்றத்தில்  மெளனம் காப்பது ஏன் ?  பதவிகள் பெற்றுக் கொண்டமைக்காக கொண்ட கொள்கையை விட்டுக் கொடுப்பது சரியா ?

கடந்த-2013 ஆம் ஆண்டு வடமாகாண சபைக்கான தேர்தலில் கூட்டமைப்பு வெற்றி பெற்று முதலமைச்சராக முன்னாள் நீதியரசர் க. வி. விக்கினேஸ்வரன் தெரிவு செய்யப்பட்டதுடன் கூட்டமைப்பு சார்பாக 30 உறுப்பினர்களும் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்டனர் .அப்போது பல்வேறு மன வடுக்களைச் சந்தித்து வாழ்ந்து வந்த தமிழ்மக்கள் வடமாகாண சபை தமக்கான குரலாக ஒலிக்கும் என நம்பினர். ஆனால், இன்று வடமாகாண சபையின் ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கிடையே பிளவுகள் ஏற்படத் தொடங்கி விட்டன .இது எவ்வாறான விளைவுகளை ஏற்படுத்தப் போகின்றன என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் . வருடாந்தம் மாகாண சபைக்கென  ஒதுக்கப்படும் நிதி கூட முறையற்ற திட்டமிடல்கள் காரணமாக மத்திய அரசிடம் திரும்பிப் போகும் துர்ப்பாக்கிய  நிலை ஏற்பட்டுள்ளது. வடமாகாண சபையின், அமைச்சர்கள் உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்படும்  பிரமாண அடிப்படையிலான நிதி ஒதுக்கீடுகள் கூடப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சரியான வகையில்  சென்றடையவில்லை. குறிப்பாக அவர்கள் ஊடகங்களில் தங்கள் ஒவ்வொருவரையும் வெளிக் காட்டிக் கொள்வதில் தான் குறியாகச் செயற்படுகிறார்களே தவிர  தமிழ் மக்களுடைய நலன் சார்ந்து சிந்திப்பதாகத் தெரியவில்லை. இந்த நிலையில் அவர்களிடம் சமூக அக்கறையை எங்ஙனம் எதிர்பார்ப்பது? இவை எல்லாவற்றையும் வைத்து நோக்கும் போது கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் ,வடமாகாண சபைத் தேர்தலிலும்  தமிழ் மக்கள் பெரும்பான்மை  வாக்குகள் வழங்கிக்  கூட்டமைப்பினரை வெற்றி பெற வைத்தமைக்கான பலனேதும் கிடைக்காமற் போய்விடுமோ? எனவே தோன்றுகிறது.

இந்த நிலையில் யாழ். குடாநாட்டு மக்கள் மற்றும் வடக்குக்- கிழக்கு மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளையும் நன்கு அறிந்து கொண்டுள்ள தலைவரான  டக்ளஸ் தேவானந்தா பாதிக்கப்பட்ட எமது மக்களுக்காக நாடாளுமன்றத்தில் தொடர்ந்தும் குரல் கொடுக்க வேண்டும் . இதன் மூலம் யாழ். குடாநாட்டில் அதிகரித்து வரும் சமூக விரோதச்  செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கும் விரைவில் முடிவு எட்டப்பட வேண்டும்.

தமிழின் தோழன்

Untitled-3 copy

Related posts: