50 ஆயிரம் வீட்டுத் திட்டத்திற்கு தமிழ் அரசியல்வாதிகளே தடை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா

Wednesday, November 15th, 2017

வடக்கு, கிழக்கு மக்களுக்கு 50 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கும் திட்டம் தமிழ் அரசியல் தலைமைகளின் இழுபறியினால் தொடர்ந்தும் தாமதமடைந்து வருகின்றதே தவிர அதற்கு நாங்கள் காரணம் கிடையாது என்று நேற்று திங்கட்கிழமை சபையில் தெரிவித்த அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, இந்த விடயத்தில் தமிழ் கட்சிகள் உடனடியாக உடன்பாடொன்றுக்கு வரவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவு ௲ செலவுத்திட்டத்தின் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் சிறிபால டி சில்வா இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

அவர் இங்கு மேலும் பேசுகையில்:

2017 ஆம் ஆண்டு சவால் மிக்க ஆண்டாக அமைந்துள்ளது. மின்சார சபை 32 பில்லியனும் ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் விமான சேவை 6 பில்லியனும் நட்டம் ஈட்டியுள்ளன. இதேநேரம், 55 தொழில் முயற்சிகளில் 33 இலாபமீட்டியதையும் மறுக்க முடியாது. சில துறைகளில் முன்னேற்றம் ஏற்பட்டது. எனினும், அரசாங்கம் நிவாரணங்களை குறைக்கவில்லை.

வுடக்கு, கிழக்கில் 50 ஆயிரம் வீடு நிர்மாணிப்பதற்கு கடந்த 2 வருடங்களில் பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக பல அமைச்சரவை பத்திரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. ஆனால், வடக்கிலுள்ள அரசியல் தலைமைகளுக்கிடையிலான பிரச்சினையால் இந்த வீடுகளை நிர்மாணிக்க முடியாதுள்ளது. வீடுகள் தாமதமாவது எமது தவறினால் அல்ல. பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களுக்கு துரிதமாக வீடுகளை வழங்குவதற்கு அவர்களிடையே உடன்பாடு ஏற்பட வேண்டும். மத்திய அரசாங்கமும் மாகாண சபையும் இழுபறியில் உள்ளன. 10 இலட்சம் தொழில் வாய்ப்பு ஏற்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. ஆனால், இளைஞர், யுவதிகள் அரசாங்க துறையிலே தொழில் எதிர்பார்க்கின்றார்கள். தனியார் துறைக்கென பலமான ஓய்வூதிய முறையொன்று அறிமுகப்படுத்தினால் அரச தொழிலை மட்டும் எதிர்பார்க்காமல் தனியார் துறையில் அவர்கள் ஈடுபாடு காட்டுவார்கள்.

நாடு கடன் நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதிலிருந்து மீள்வது இலகுவானதல்ல. அநுரகுமார திசாநாயக்காவின் ஜே.வி.பி. தலைமையிலான அரசாங்கம் இருந்தாலும் இந்தக் கடன்களை செலுத்தியாக வேண்டும். ஒன்றிணைந்த எதிர்க்கட்சி இருந்தாலும் கடனை செலுத்த வேண்டும். இந்தக் கடன் சவாலை அமைச்சர் மங்கள சமரவீர தைரியமாக முகங்கொடுத்து தீர்க்க நடவடிக்கை எடுத்துள்ளார். வரவு ௲ செலவுத்திட்ட பரிந்துரைகள் செயற்படுத்தப்படுகிறதா என ஆராய கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Related posts: