பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு ஓய்வுபெற அனுமதி – பொலிஸ் ஆணைக்குழு!

download (2) Monday, May 14th, 2018

பொலிஸ் நிதிமோசடிப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி வைத்தியலங்கார பொலிஸ் சேவையில் இருந்து ஓய்வு பெற்றுக் கொள்ள தேசிய பொலிஸ் ஆணைக்குழு அனுமதியளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

1979ம் ஆண்டின் ஒக்டோபர் மாதம் 08ம் திகதி பொலிஸ் சேவையில் இணைந்து கொண்ட ரவி வைத்தியலங்கார, 2015ம் ஆண்டு மார்ச் 16ம் திகதி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டார்.

அத்துடன் நல்லாட்சி அரசாங்கத்தில் உருவாக்கப்பட்ட பொலிஸ் நிதிமோசடிப்பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபராகவும் அவர் கடமையாற்றியுள்ளார்.

கடந்த 2015ம் ஆண்டு ரவி வைத்தியலங்கார மீது ஊழல் மற்றும் லஞ்சக் குற்றச்சாட்டொன்று முன்வைக்கப்பட்டிருந்த நிலையில் அது தொடர்பான விசாரணைகள் தற்போதைக்கு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இம்மாதம் 14ம் திகதியுடன் சேவையில் இருந்து ஒய்வு பெறவிருந்த நிலையில் ரவி வைத்தியாலங்காரவுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு இருப்பதால் அவருக்கு ஓய்வூதியம் உடனே பெறும் வகையில் பதவியிலிருந்து ஓய்வுபெற அனுமதிக்கப்படக் கூடாது என்று பொலிஸ் மா அதிபர் வலியுறுத்தியிருந்தார்.

விசாரணைகளின் பின்னரே அவருக்கு ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் என்று அவர் பொலிஸ் ஆணைக்குழுவுக்கும் பரிந்துரைத்திருந்தார்.

எனினும் ரவி வைத்தியலங்கார பதவியில் இருந்த இரண்டு வருட காலத்தினுள் பொலிஸார் குறித்த விசாரணைகளை நிறைவு செய்யாத காரணத்தினால் அவருக்கு ஓய்வூதியத்துடன் பதவியில் இருந்து விலகிச் செல்ல பொலிஸ் ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது.