நாடெங்கும் 2500 இற்கும் மேற்பட்டோர் எலிக்காய்ச்சலால் பாதிப்பு

Thursday, November 16th, 2017

இவ்வருடம் இது வரையில் 2,544 பேர் எலிக்காய்ச்சல் நோயால் பீடிக்கப்பட்டுள்ளார்கள் என இவர்களில் பெரும்பாலானோர் செம்ரெம்பர் மற்றும் அக்ரோபர் மாதங்களிலேயே எலிக்காய்ச்சல் நோயாளிகளாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தேசிய தொற்று நோய்கள் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு எலிக்காய்ச்சலால் பீடிக்கப்பட்ட 2,544 பேரில் சுமார் 90 வீதமானோர் இரத்தினபுரி, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே.

இப் பிரதேசங்களில் பெரும்போக நெல் விதைப்புக்காக செப்ரெம்பர் மற்றும் அக்ரோபர் மாதங்களில் வயல்களை உழுது தயார்படுத்தும் போது அங்கிருந்து வெளியேறும் எலிகள் கடிப்பதாலேயே இவ்வாறு எலிக்காய்ச்சலால் பீடிக்கப்படுகிறார்கள் எனவும் ஆய்வு நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

ஏலிக்காய்ச்சல் என்பது சில பக்டீறியாக்களின் தொற்று காரணமாக ஏற்படுவதாகவும் எலிக்காய்ச்சல் தொற்றுவதைத் தடுப்பதற்கும் காய்ச்சலை முற்றாக சுகப்படுத்தும் அனைத்து மருந்துகளும் இலங்கையில் உள்ளதாகவும் இந்த மருத்துவ வசதிகளை அனைத்துப் பிரதான வைத்தியசாலைகளிலும் தொற்று நோயாளர் தடுப்பு நிலையங்களிலும் பெற்றுக் கொள்ள முடியுமெனவும் தேசிய தொற்று நோயாளர்கள் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

எனவே எலிக்காய்ச்சலின் தொற்று கூடுதலாகக் காணப்படும் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் நெல் விதைப்பு காலத்துக்கு முன்னரே எலிக்காய்ச்சல் தடுப்புக்கான சிகிச்சைகளை செய்து கொள்வதன் மூலம் காய்ச்சல் பரவுவதை பெருமளவில் தடுக்க முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: