தண்டப் பணத்தை இலகுவாக செலுத்தி லைசன்ஸ் மீளப் பெறும் வழிமுறைகள் – பொலிஸார், அஞ்சல் துறையினர் விளக்கமளிப்பு!

Tuesday, May 8th, 2018

போக்குவரத்து குற்றங்களுக்கு விதிக்கப்படும் தண்டப் பணத்தை இலகுவாகவும் விரைவாகவும் செலுத்தி மீண்டும் சாரதி அனுமதிப் பத்திரத்தை எவ்வாறு பெறுவது? என்பது தொடர்பில் சாரதிகளுக்கு விளக்கமளிக்கும் செயற்பாட்டை சாவகச்சேரி பொலிஸார் மற்றும் அஞ்சல் சேவைத் துறையினர் இணைந்து முன்னெடுத்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை காலை சாவகச்சேரி பேருந்து நிலையத்திற்கு முன்பாக அஞ்சல் அதிபர் அ.லம்பேட் இன்பராஸ் மற்றும் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி பி.விக்கிரமசிங்க ஆகியோர் இணைந்து இது தொடர்பான விளக்கமளிக்கும் துண்டுபிரசுரங்களை விநியோகம் செய்தனர்.

அந்தத் துண்டுபிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவை வருமாறு,

பொலிஸாரால் தண்டப்பணத்திற்காக தரப்படும் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரத்தை (வெள்ளை நிறதுண்டு) தங்களுக்கு அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று கொடுத்து அங்கு தண்டப்பணம் கட்டுவதற்கான நீல நிறத்திலான துண்டினைப் பெறவேண்டும்.

தண்டப்பணத்தை 14 நாட்களுக்குள் அருகில் உள்ள அஞ்சல் அலுவலகத்தில் செலுத்துதல் வேண்டும். தவறின் இருமடங்கு தண்டமாக அறவிடப்படும்.

தண்டப்பணத்தை சாவகச்சேரி அஞ்சல் அலுவலகத்தில் அதிகாலை 4.30 தொடக்கம் இரவு 7.30 வரையும், யாழ்ப்பாணம் அஞ்சல் அலுவலகத்தில் 7 மணிமுதல் இரவு 9 மணி வரையும்  சகல உப அஞ்சல் அலுவலகங்களிலும் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையும் பிற்பகல் 1 மணி முதல் மாலை 5 மணி வரையும் செலுத்தலாம்.

தண்டப்பணம் செலுத்தும் போது தண்டம் விதிக்கப்பட்ட தொகையுடன் 10 வீதம் அதிகம் சேர்த்தே அறவிடப்படும். உதாரணமாக 500 ரூபா எனின் 550 ரூபா செலுத்தப்பட வேண்டும். 14 நாட்கள் முடிவடைந்தால் 28 நாட்கள் வரை இதன் இருமடங்கு 1,100 ரூபா செலுத்தப்படல் வேண்டும்.

தபாலகத்தில் தரப்படும் பணம் கட்டியமைக்கான பற்றுச்சீட்டுடன் பொலிஸாரால் தரப்பட்ட தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரத்தையும் (வெள்ளை நிற துண்டு) சேர்த்து தண்டப்பணம் அறவிடப்பட்ட பொலிஸ் நிலையத்தில் செலுத்தி தங்களது சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக் கொள்ளலாம்.

Related posts: