சட்டம் நிறைவேற்றப்பட்டது நாடாளுமன்ற உறுப்பினர்களால் ௲ சபாநாயகரால் அல்ல என்பதையும் மனதில் கொள்ள வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Friday, March 22nd, 2024

நிகழ்நிலை காப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது நாடாளுமன்ற உறுப்பினர்களால் என்பதுடன்  சபாநாயகரால் அல்ல என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும் எனஅமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன அவர்களுக்கு எதராக எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பிலும் நாட்டில் நிலவும் சில பிரச்சினைகள் தொடர்பிலும் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் –

முழுமையான நாடாளுமன்ற உரை – 21.03.2024

கௌரவ சபாநாயகர் அவர்களே

இன்றைய தினம் கௌரவ சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன அவர்களுக்கு எதராக எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பிலும், மேலும் இந்த நாட்டில் தற்போது நிலவுகின்ற சில பிரச்சினைகள் தொடர்பிலும் எனது கருத்துக்களை முன்வைப்பதற்கு வாய்ப்பு வழங்கியமை தொடர்பில் முதலில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நிகழ்நிலை காப்புச் சட்டத்திற்கு (ழுடெiநெ ளுநகநவல டீடைட) கௌரவ சபாநாயகர் அவர்கள் கையொப்பமிட்டதானது, அரசியல் அமைப்பையும், நாடாளுமன்ற நிலையியல் கட்டளைகள் சட்டத்தையும் மீறியிருப்பதாகவும், உயர் நீதிமன்றத்தை அவமதித்திருப்பதாகவும் தெரிவித்தே எதிர்க்கட்சிகளால் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது.

அதே நேரம், 2024ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க நிகழ்நிலைக் காப்புச் சட்டமானது அவசர அவசரமாகக் கொண்டுவரப்பட்டதாகவும் ஒரு கதை நிலவுகின்றது.

2016ஆம் ஆண்டு நீதிச் சேவை ஆணைக்குழுவின் ஊடாக இதற்கான சட்ட வரைபு தயாரிக்கப்பட்டது. அத்துடன், சிங்கப்பூர் நாட்டில் செயற்பட்டு வருகின்ற 11 சமூக வலைத் தளங்களின் முகவர்களுடன் இது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இதன்போது, சமூக வலைத்தளங்களில் சுய ஒழுக்கக் கட்டுப்பாட்டுக் கோவையினை அறிமுகப்படுத்துவதாக அந்த முகவர் நிறுவனங்கள் தெரிவித்திருந்த போதிலும், அது சாத்தியமாக்கப்படாத நிலையில்தான் இந்த சட்டம் சுய ஒழுக்கக் கோவையை முதன்மைப்படுத்தி இயற்றப்பட்டிருக்கின்றது.

நாடாளுமன்றத்தின் சட்டங்களை இயற்றுகின்ற ஏற்பாடுகள் சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் சட்ட வரைவாளர் திணைக்களம் என்பவற்றுடன் இணைந்ததாகவே முன்னெடுக்கப்படுகின்றன. எனவே, இதன்போது உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புகளுக்கு மாறாக அல்லது அரசியல் அமைப்பிற்கு முரணாக செற்படக்கூடிய வாய்ப்புகள் இல்லை என்றே கருத முடிகிறது.

அந்த வகையில், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிரகாரம் சட்டமா அதிபர் திணைக்களம் அதனை உறுதி செய்ததன் பின்னரே இந்த நிகழ்நிலை காப்புச் கட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதனை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அதன் அடிப்படையில்தான், அரசியல் அமைப்பின் 78 (1) மற்றும் (2) மற்றும் 79ஆம் பிரிவுகளின் அடிப்படையில் மிகச் சரியாகவே கௌரவ சபாநாயகர் அவர்கள் 2024ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தில் கையொப்பமிட்டுள்ளார்.

அடுத்ததாக இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது நாடாளுமன்ற உறுப்பினர்களால் என்பதையும,; கௌரவ சபாநாயகரால் அல்ல என்பதையும் நாம் மனதில் கொள்ள வேண்டும்.

மேலும், பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன் அவர்கள் நியமிக்கப்பட்டமை தொடர்பிலும் அரசியல் அமைப்பினை கௌரவ சபாநாயகர் அவர்கள் மீறியுள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் தரப்பினரால் தெரிவிக்கப்படுகின்றது.

அரசியல் அமைப்புப் பேரவையில் அங்கம் வகிக்கின்ற எட்டு உறுப்பினர்களில் நான்கு உறுப்பினர்கள் பொலிஸ் மா அதிபர் நியமனத்திற்கு ஆதரவு தெரிவித்தும், இருவர் எதிர்ப்பு தெரிவித்தும், இருவர் வருகை தராத நிலையிலுமே, பெரும்பான்மை ஆதரவுடன் புதிய பொலிஸ் மா அதிபர் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது தெளிவாகவே தெரியவருகின்றது.

அந்த வகையிலே கௌரவ சபாநாயகர் அவர்கள் சரியான முறையிலேயே இதனை மேற்கொண்டுள்ளார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

கௌரவ சபாநாயகர் அவர்களே

அடுத்து, இன்னொரு முக்கிய விடயம் தொடர்பிலும் எனது கருத்துக்களை முன்வைக்க விரும்புகின்றேன்.

இந்த நாட்டிலே வாழுகின்ற இந்துக்களிடையே மட்டுமல்ல மத சுதந்திரத்தை மதிக்கின்ற அனைத்து மக்களிடையேயும் மனக் கசப்பினையும், விரக்தி நிலையினையும் ஏற்படுத்தி இருக்கின்ற விடயம். அதாவது, வவுனியா, நெடுங்கேணி, வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்தில் கடந்த சிவராத்திரி தினத்தன்று இடம்பெற்றுள்ள சம்பவம்.

மகா சிவராத்திரி என்பது இந்து வருடத்தில் வரும் கிருஸ்ணபட்ச, தேய்ப்பிறை சதுர்தசி திதியில் இரவில் வழிபடுகின்ற சிவனுக்குரிய விரதமாகும்.

சிவராத்திரி என்பதற்கு ‘மங்களகரமான இரவு’, ‘இன்பம் தரும் இரவு’ எனப் பொருள்கள் உண்டு.  ஆனால், எமது மக்களுக்கு அமங்களமான இரவாகவும், துன்பம் தரும் இரவாகவும் இந்த வருட சிவராத்திரி அமைந்துவிட்டது.

வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்தில் பக்தர்கள் வழிபாடுகளை மேற்கொள்வதற்கான அனுமதி இருக்கின்ற நிலையில், இரவில் வழிபாடுகளை மேற்கொள்ள முடியாதென பொலிஸார் அதனைத் தடுத்திருப்பதும், சப்பாத்துக் கால்களுடன் ஆலய வளவுக்குள் நுழைந்து, அங்கிருந்த பூஜைப் பொருட்களை அப்புறப்படுத்தியிருப்பதும் ஏற்றுக் கொள்ள முடியாத செயற்பாடுகளாகும்.

மேலும், வழிபாடுகளுக்கென சென்றவர்கள் மீது தாக்குதல்களை நடத்தியமையும், அவர்களை அங்கிருந்து வெளியேற்றிய முறையும், பூஜைகளை இடைநடுவில் நிறுத்தியமையும் மிக மோசமான மிலேச்சத் தன்மையையே காட்டி நிற்கின்றன.

இந்த சம்பவமானது மதங்களுக்கிடையிலான கசப்புத் தண்மையினை தோற்றுவிக்கின்ற அதேவேளை, தேசிய இன நல்லிணக்கத்திற்கும் பாதிப்பினை ஏற்படுத்தும் செயற்பாடாகும்.

ஒரு பக்கத்தில் பொலிஸாரின் செயற்பாடுகள் இவ்வாறிருக்க, அங்கு சென்றிருந்த சிறு அரசியல் குழுவினரின் செயற்பாடுகளும் நிலைமைகளை மோசமாக்கி இருக்கின்றன என்பதையும் நான் இங்கு தெரிவித்துக் கொள்ள வேண்டும்.

தங்களது சுயலாப அரசியலை எல்லா இடங்களிலும் பயன்படுத்த முடியும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற இத்தகைய அரசியல் குழுவினர், எமது மக்களை பகடைக் காய்களாகப் பயன்படுத்தி வருவதையே நோக்கமாகக் கொண்டவர்கள்.

தேர்தல் காலங்களின் போது பல பொய்யான வாக்குறுதிகளை வழங்கி, எமது மக்களை ஏமாற்றி, வாக்குகளை அபகரித்துக் கொண்ட இவர்கள், அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வாய்ப்புகள் அற்ற நிலையில், மக்களை திசை திருப்புகின்ற வகையில், எமது மக்களைத் தூண்டிவிட்டு, குளிர்காயும் நிலைமைகளை உருவாக்குவதையே இலக்காகக் கொண்டு, செயற்பட்டு வருகின்றனர்.

எனவே, இவர்களிடம் எமது மக்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

அதேநேரம், மேற்படி வெடுக்குநாறி மலை சம்பவம் தொடர்பில் ஒரு குழுவினை அமைத்து, சுயாதீனமானதொரு விசாரணையை ஆரம்பிக்குமாறு கடந்த அமைச்சரவைக் கூட்டத்திற்கு முந்தைய அமைச்சரவைக் கூட்டத்தில் நான் கோரிக்கை விடுத்திருந்ததுடன், அதனை எழுத்து மூலமாகவும் மேன்மைதங்கிய ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்ஹ அவர்களிடம் கையளித்துள்ளேன். இதற்கு மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்கள் சாதகமான முடிவினை எடுப்பார் எனவும் நம்புகின்றேன்.

இறுதியாக, இன்னுமொரு விடயத்தை இங்கு தெரிவிக்க விரும்புகின்றேன்.

உணவுப் பாதுகாப்பு, எமது மக்களுக்கான வாழ்வாதாரங்களை பெருக்குதல், தேசிய உற்பத்தியினை அதிகரித்தல் மற்றும் ஏற்றுமதி உற்பத்திகளின் மூலம் அதிகளவு அந்நியச் செலாவணியை நாட்டுக்குள் கொண்டு வருதல் போன்ற நோக்கங்களின் அடிப்படையில் நாம் எமது கடற்றொழில் அமைச்சின் ஊடாக கடற்றொழில் கைத்தொழிலையும், நீர் வேளாண்மையினையும் பரவலாகவும், அதிகரித்த அளவிலும் மேற்கொண்டு வருகின்றோம்.

இத்தகைய நிலையில், எமது மக்கள் பொருளாதார நிலையில் மேம்பாடு அடையக் கூடாது எனவும், அவர்கள் அரசியல் ரீதியிலும், வாழ்வாதார ரீதியிலும் தங்களுக்கு அடிபணிந்தே இருக்க வேண்டும் எனவும் எண்ணுகின்ற சில தரப்பினர், எமது  முன்னெடுப்புகளுக்கு குந்தகம் விளைவிக்கின்ற வகையில் செயற்பட்டு வருவது தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

இத்தகைய நிலையில் இத் தரப்பினர் வடக்குக் கடலை பல்தேசியக் கம்பனிகளுக்கு தாரை வார்க்கப் போவதாக ஒரு கதையினை கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.

யானையைப் பார்த்த பார்வையற்றவரைப் போல், சில அரசியல்வாதிகள் இந்தப் பிரச்சினைகளபை; பாhர்த்து தங்களுக்கேற்றவாறு வியாக்கியானம் செய்து  குளிர்காய முற்படுகின்றனர்.

வடக்கிலே எமது அமைச்சு, அவ்வப் பகுதிகளில் செயற்படுகின்ற கடற்றொழிலாளர் சங்கங்கள், பிரதேச செயலாளர்கள், தேசிய நீர்வாழ் உயிரினங்கள் செய்கை நிறுவகம், தேசிய நீர்வாழ் உயிரினங்கள் அபிவிருத்தி மற்றும் ஆய்வு முகவர் நிறுவகம், கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம் போன்றவற்றின் அனுமதிகள் மற்றும் சிபாரிசுகளின் அடிப்படையில் உள்@ர் உற்பத்தியாளர்களுக்கே கடலட்டைப் பண்ணைகள் மற்றும் கடல் பாசி செய்கைகள், நண்டு வளர்ப்பு, இறால் வளர்ப்பு, மீனின உற்பத்தி போன்ற செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு வாய்யப்பளித்து வருகின்றது.

இத்தகைய செயற்பாடுகளின்போது எந்தவொரு சிறு கடற்றொழில் கைத்தொழிலாளர்களும் பாதிக்கப்படாத வகையிலேயே வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எமக்கிருக்கின்ற வளங்களை நாங்கள் சரியான முறையில், உச்ச பயன்பாடுகளை பெறத்தக்க வகைகள் பயன்படுத்தி வருகின்றோம். இதுவரைக் காலமும் ஒரு சிலர் வசமிருந்து வந்த கடலட்டை உற்பத்தி நடவடிக்கைகளை நாம் பலர் மத்தியில் விரிவுபடுத்தியிருக்கின்றோம். இதில் எந்தவொரு வெளிநாட்டவரும் ஈடுபடுத்தப்படவில்லை என்பதையும் ஆணித்தரமாக நான் இந்த சபையிலே கூறிவைக்க விரும்புகின்றேன்.

அத்துடன், இந்திய இழுவை மடி வலைப் படகுகளின் எல்லைத் தாண்டியதும், அத்துமீறியதும், தடைசெய்யப்பட்ட கடற்றொழில் உபகரணங்களைக் கொண்ட கடற்றொழில் முறைமையினாலும், பாதிக்கப்பட்டு வருகின்ற வடக்கு கடற்றொழிலாளர்களின் நிலைமைகளை உலகுக்கு எடுத்துக் காட்டும் வகையில் யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர்கள் முன்னெடுத்து வருகின்ற உண்ணாவிரதப் போராட்டமானது இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது.

இந்த விடயம் தொடர்பில் நாங்கள் சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். நேற்றும்கூட யாழ்ப்பாணத்திலே மூன்று இந்திய இழுவை மடி வலைப் படகுகள் கடற்படையினரால் பிடிக்கப்பட்டு 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னாரில் இரு படகுகள் பிடிக்கப்பட்டு 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேநேரம், தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்களின் கடற்றொழில் துறை சார்ந்த அமைச்சர்கள் இந்திய இழுவை மடி வலைப் படகுகளின் பிரச்சினைகள் தொடர்பில் என்னுடன்  கதைத்து வருகின்றனர். அதேபோல் இம் மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்களையும் சந்தித்து கலந்துரையாடுவதற்கான சூழல் உருவாகி வருகின்றது. அது விரைவில் சாத்தியமாகும் என்று எதிர்பார்க்கபடுகின்றது. ஒருவேளை இந்திய நாடாளுமன்றத் தேர்தல் காரணமாக அதில் சிறிது காலதாமதம் ஏற்படக்கூடும். எவ்வாறாயினும், அவர்களும் இழுவை மடி வலைப் படகுகளின் மூலமான பாதிப்புகளை உணர்ந்து கொண்டிருப்பதாகவே தெரிய வருகின்றது. எனவே, பேச்சுவார்த்தைகள் மூலம் ஒரு சுமுகமான தீர்வினை எட்ட முடியும் என நான் எதிர்பார்க்கிறேன்.

000

Related posts:

வரிச் சுமைகளிலிருந்து மக்கள் விடுவிக்கப்பட வேண்டும் - நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!
நாட்டின் அனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ளும் அரசியல் தீர்வையே நாம் ஆதரிப்போம்  - புதிய அரசியல் யாப்ப...
தனிப்பட்ட பிரச்சினை இனவாத பிரச்சினையாக மாற்றப்பட்டிருப்பது  கண்டிக்கத்தக்கது – கண்டிச் சம்பவம் குறித...

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 24 பெப்ரவரி 2010அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம்
வடக்கின் வறிய குடும்பங்களும் மின்சார ஒளி பெற விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் - நாடாளுமன்றில்...
வடக்கு கிழக்கில் இயற்கை வளங்கள் சூறையாடப்படுவதை உடனடியாகத் தடுத்து நிறுத்த நடவiடிக்கை அவசியமாகும் நா...