விழுந்து வெடித்து சிதறிய பாகிஸ்தான் இராணுவ விமானம் – 17 பேர் பலி!

Tuesday, July 30th, 2019

பாகிஸ்தானில் சிறிய ரக இராணுவ விமானம் ஒன்று குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளாகி வெடித்து சிதறியதில் 17 பேர் பலியாகியுள்ளனர்.

குறித்த விமான விபத்து காரணமாக பல வீடுகள் தீக்கிரையாகி முற்றிலுமாக சேதமடைந்துள்ளன.

வழக்கமான பயிற்சிக்காக இஸ்லாமாபாத் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட பாகிஸ்தான் இராணுவத்திற்கு சொந்தமான ஒரு சிறிய விமானம், ராவல்பிண்டி நகரில் குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த இரண்டு விமானிகள், மூன்று விமானக்குழுவினர் உட்பட 17 உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 18 பேர் காயமடைந்துள்ளதாகவும், இடிபாடுகளில் பலர் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுவதால் உயிர் சேதம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

விபத்து காரணமாக ராவல்பிண்டி மற்றும் இஸ்லாமாபாத்தில் உள்ள மருத்துவமனைகளில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விபத்துக்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை, விமானம் திடீரென கட்டுப்பாட்டை இழந்துவிட்டதாக மீட்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும், பலியானவர்களில் பெரும்பாலானவர்களுக்கு தீக்காயங்கள் ஏற்பட்டன. இறந்தவர்களில் குழந்தைகளும் உள்ளனர் என கூறினர்.

இராணுவ ஹெலிகாப்டர்கள் விபத்துக்குள்ளான இடத்தின் மீது சுற்றிக் கொண்டிருந்தன, மீட்புப் பணிகள் முடிந்தபின் விமான பாகங்கள் மற்றும் பிற ஆதாரங்களைத் தேடுவதற்காக இராணுவ படையினர் மற்றும் பொலிசார் அந்தப் பகுதியை சுற்றி வளைத்துள்ளனர்.

Related posts: