வட கொரிய அணு ஆயுத மையம் அழிப்பு!

Friday, May 25th, 2018

வட கொரியாவின் பங்கை-ரீ கிராமத்திலுள்ள அணு ஆயுத சோதனை மையத்தை சர்வதேச செய்தியாளர்கள் முன்னிலையில் அந்த நாடு அழித்ததுள்ளது.

பல மணி நேரத்துக்கு தொடர்ந்து நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்புகள் மூலம் அந்த மையம் அழிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் சிங்கப்பூரில் ஜூன் 12-ஆம் தேதி நேரடி பேச்சுவார்த்தை நடத்துவதாக திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அதற்கான சாதக சூழலை ஏற்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தற்போது நடத்தப்பட்ட குண்டுவெடிப்புகள் மூலம், மக்கள் அதிகம் வசிக்காத மலைப் பகுதியான பங்கை-ரீயில் நிலத்தடி அணு ஆயுத சோதனை நடத்துவதற்காகப் பயன்படுத்தப்பட்டு வந்த 3 சுரங்கங்களும், அந்த மையத்தில் அமைந்துள்ள கட்டடங்களும் தகர்க்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து வட கொரிய அதிகாரிகள் கூறியதாவது:

அணு ஆயுத சோதனை மைய அழிப்பு, உள்ளூர் நேரப்படி காலை 11 மணிக்கு தொடங்கியது. 2009-ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரை நிலத்தடி அணு ஆயுத சோதனைக்குப் பயன்படுத்தப்பட்ட வடக்கு சுரங்கம் முதலாவதாக வெடி வைத்துத் தகர்க்கப்பட்டது.

அதையடுத்து, மதியம் 2.20 மணிக்கும், மாலை 4 மணிக்கும் முறையே மேற்கு மற்றும் தெற்கு சுரங்கங்கள் வெடி வைத்துத் தகர்க்கப்பட்டன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த சுரங்கங்கள் தவிர, அணு ஆயுத சோதனை மையத்தைப் பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கோபுரங்கள், வீரர்கள் தங்குவதற்காக அமைக்கப்பட்டிருந்த கட்டடங்களும் வெடி வைத்து தகர்க்கப்பட்டன. கிழக்கே அமைக்கப்பட்டிருந்த மற்றொரு சுரங்கம், கடந்த 2006-ஆம் ஆண்டு அணு குண்டு பரிசோதனைக்குப் பிறகு ஏற்கெனவே மூடப்பட்டுவிட்டது.

சர்வதேச அளவிலான தொலைக்காட்சி செய்தியாளர்களை அழைத்து இந்த குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியதன் மூலம், அணு ஆயுத சோதனைக்குப் பயன்படுத்தப்பட்ட சுரங்கங்களும், கட்டடங்களும் தகர்க்கப்படும் காட்சிகளை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்க வட கொரியா முயன்றிருப்பதாகக் கூறப்படுகிறது. எனினும், இந்த நிகழ்ச்சியைக் கண்காணிக்க சர்வதேச அணு ஆயுத நிபுணர்களை அந்த நாடு அழைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: