யுத்தக்குற்ற விசாரணை: வங்காளதேச முன்னாள் எம்.பி.க்கு மரண தண்டனை !

Thursday, August 11th, 2016

வங்காளதேசத்தில் கடந்த 1971–ஆம் ஆண்டு நடந்த விடுதலை போரின் போது ஜமாத்–இ–இஸ்லாமி கட்சியை சேர்ந்த தலைவர்கள் பல்வேறு போர்க்குற்றங்களில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக விசாரணை நடத்த நீதிபதி அன்வருல் ஹேக் தலைமையில் 3 உறுப்பினர்களை கொண்ட வங்கதேச சர்வதேச குற்ற தீர்ப்பாயம் கடந்த 2010–ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்த சுதந்திர போரின் போது ஜமாத்–இ–இஸ்லாமி கட்சியின் மாணவர் அமைப்பில் உறுப்பினராக இருந்த சகாவத் உசேன் மீது ஆள்கடத்தல், சித்ரவதை, கற்பழிப்பு, கொலை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு இருந்தது.

பின்னாட்களில் வங்கதேச தேசிய கட்சியில் இணைந்த அவர் எம்.பி.யாக பதவி வகித்தார். இவர் மீதான போர்க்குற்ற விசாரணை தீர்ப்பாயத்தில் நடந்து வந்தது. இதில் அவருக்கு மரண தண்டனை விதித்து நேற்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். இதே குற்றச்சாட்டுகளில் சிக்கிய மேலும் 7 பேரை வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த தீர்ப்பாயம் அமைக்கப்பட்ட பிறகு இதுவரை 4 போர்க்குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related posts: