மேற்கத்திய நாடுகளின் நடவடிக்கைக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடும் சாடல்!

Tuesday, March 8th, 2022

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பைக் கண்டிக்குமாறு பாகிஸ்தானுக்கு அழைப்பு விடுத்துள்ள உலக அரசாங்கங்களை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடுமையாக சாடியுள்ளார்.

கடந்த வாரம், இஸ்லாமாபாத்தைச் சேர்ந்த 22 தூதரக அதிகாரிகள் உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலைக் கண்டிக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தில் பாகிஸ்தான் அரசாங்கமும் இணைய வேண்டும் என்று ஒரு கூட்டுக் கடிதத்தை வெளியிட்டனர்.

இத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இருந்து பாகிஸ்தான் புறக்கணித்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

“எங்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நாங்கள் உங்கள் அடிமைகளா? நீங்கள் என்ன சொன்னாலும் நாங்கள் செய்வோம்?” என்றவாறு ஒரு அரசியல் பேரணியின் போது கான் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இவ் விடயம் தொடர்பில் இம்ரான் கான் மேலும் தெரிவித்ததாவது,

“ஐரோப்பிய யூனியன் தூதர்களிடம் நான் கேட்க விரும்புகிறேன், நீங்கள் இந்தியாவுக்கு இப்படி ஒரு கடிதம் எழுதியீர்களா?” இந்தியரும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை என்று கான் இதன்போது கேள்வியெழுப்பியுள்ளார்.

“நாங்கள் ரஷ்யாவுடன் நண்பர்கள், நாங்கள் அமெரிக்காவுடனும் நண்பர்கள்; நாங்கள் சீனா மற்றும் ஐரோப்பாவுடன் நண்பர்கள்; நாங்கள் எந்த முகாமிலும் இல்லை” என்றும் கான் கூறினார்.

மோதலில் நடுநிலை வகித்து, போரை முடிவுக்குக் கொண்டு வருபவர்களுடன் இணைந்து பணியாற்ற திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தான் தலைவர் இதன்போது தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் இஸ்லாமாபாத்தைச் சேர்ந்த 22 தூதரக அதிகாரிகள் எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டதாவது, இராஜதந்திரிகள், அவர்களில் பலர் ஐரோப்பிய ஒன்றியம் நாடுகளை சேர்ந்தவர்கள் “பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசின் தூதரகத் தலைவர்கள் என்ற முறையில், ரஷ்யாவின் நடவடிக்கைகளைக் கண்டிப்பதில் எங்களுடன் சேருமாறு பாகிஸ்தானை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts: