மீண்டும் அணு ஆயுத சோதனை நடத்த வடகொரியா தயாராக உள்ளது – தென்கொரியா!

உலக நாடுகளின் எதிர்ப்பை பொருட்படுத்தாமலும் சர்வதேச உடன்படிக்கைகளை கண்டுகொள்ளாமலும் பெரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் வடகொரியா அணுகுண்டு சோதனைகளையும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளையும் நடத்தி வருகிறது.
2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் திகதி முதன் முதலாக அணுகுண்டு வெடித்து சோதித்த அந்த நாடு தொடர்ந்து 2009, 2013 ஆண்டுகளில் அணுகுண்டு சோதனைகளை நடத்தி உள்ளது.
நான்காவதாக கடந்த ஜனவரி மாதம் 6ஆம் திகதி அணுகுண்டை விட சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் குண்டுவெடித்து சோதித்தது. (இதுவும் அணுகுண்டு சோதனையாகவே கணக்கில் கொள்ளப்படுகிறது).
இதையடுத்து 5–வது முறையாக கடந்த 9 ஆம் திகதி மீண்டும் அணுகுண்டு சோதனை நடத்தி உலக நாடுகளை வடகொரியா அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இந்த சோதனை புங்கியே–ரி என்ற இடத்தில் நிலத்துக்கு அடியில் நடத்தப்பட்டுள்ளது. வடகொரியாவின் இந்த அத்துமீறிய செயலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன. 5–வது முறையாக அணுகுண்டு வெடித்து சோதித்துள்ள வடகொரியா மீது புதிய பொருளாதார தடைகளை விதிப்பதற்கு அமெரிக்கா முயற்சித்து வருகிறது.
இந்த நிலையில், மீண்டும் ஒரு அணு ஆயுத சோதனை நடத்த வடகொரியா தயாராகி வருவதாக அண்டை நாடான தென் கொரியா குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து தென் கொரியாவின் இராணுவ செய்தி தொடர்பாளர் கூறுகையில், “ மற்றொரு அணு ஆயுத சோதனை சுரங்கங்களில் நடத்தப்படலாம். இதற்கான ஏற்பாடுகள் தயாராகிவிட்டது. நில அத்துமீறல் நடைபெற்றால் பதிலடி கொடுக்க தென்கொரியா முழு வீச்சில் தயாராக உள்ளது” என்றார்.
Related posts:
|
|