“புதிய அரசாங்கம் அதிகார பூர்வமாக பதவியேற்காததால், இந்தியப் பிரதமரை வாழ்த்துவது பற்றி இதுவரை கருத்து வெளியிடவில்லை – பாகிஸ்தான் தெரிவிப்பு!

Saturday, June 8th, 2024

இந்தியா உட்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் சுமூகமான மற்றும் கூட்டுறவையும், பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கவும் விரும்புவதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக பதவியேற்க உள்ள நிலையில் பாகிஸ்தான் வெளியுறவு அலுவலக செய்தித் தொடர்பாளர் மும்தாஜ் சஹ்ரா பலோச் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

இந்திய மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 இடங்களைக் கைப்பற்றி மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது.

இந்த நிலையில் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் வாழ்த்து தெரிவித்துள்ளதா என எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மும்தாஜ் சஹ்ரா பலோச்,

“புதிய அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக பதவியேற்காததால், இந்தியப் பிரதமரை வாழ்த்துவது பற்றி இதுவரை கருத்து வெளியிடவில்லை.” என பதிலளித்தார்.

இந்தியாவுடனான உறவுகளை விரிவாகக் கூறிய மும்தாஜ் சஹ்ரா பலோச், பாகிஸ்தான் எப்போதுமே தனது அண்டை நாடுகளுடனான அனைத்து சர்ச்சைகளையும் ஆக்கபூர்வமான உரையாடல் மூலம் தீர்க்க முயல்கிறது எனக் கூறினார்.

“பாகிஸ்தான் எப்போதும் இந்தியா உட்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் கூட்டுறவை விரும்புகிறது. ஜம்மு மற்றும் காஷ்மீரின் முக்கிய பிரச்சினை உட்பட அனைத்து நிலுவையில் உள்ள பிரச்சினைகளையும் தீர்க்க ஆக்கபூர்வமான உரையாடல் மற்றும் ஈடுபாட்டை நாங்கள் தொடர்ந்து பரிந்துரைத்துள்ளோம்,” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பாகிஸ்தானுடன் சுமூகமான உறவை விரும்புவதாகவும், பயங்கரவாதம் மற்றும் விரோதம் இல்லாத சூழலை உருவாக்க வேண்டிய பொறுப்பு இஸ்லாமாபாத்தின் மீது இருப்பதாகவும் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், பாகிஸ்தானுடன் சுமூகமான பேச்சுகளை முன்னெடுக்க நடவடிக்கைகளை எடுத்திருந்ததாகவும் இந்தியா கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: