பாதுகாப்பு வசதியே உயிரைப் பறித்தது – கார்ப் பந்தய வீரர் மரணம் குறித்து பொறியியலாளர்!

Monday, March 20th, 2017

பிரபல கார் பந்தய வீரர் அஸ்வின் சுந்தர் கார் விபத்துக்குள்ளானதற்கு, அதிக பாதுகாப்பு வசதியே காரணம் என பொறியாளர் ஆர். ராஜீ தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது,

அஸ்வின் சுந்தர் ஓட்டிச்சென்றது ‘பி.எம்.டபிள்யு இசட் 4’ வகை கார். இருவர் மட்டுமே அமர்ந்து செல்லக்கூடிய சொகுசு கார். இதன் விலை ரூ.70 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை உள்ளது. பொதுவாக, இசட் 4 வகை கார்கள் அதிக பாதுகாப்பு அம்சங்கள் கொண்டவை. அதுதான் தற்போது அவர்களது உயிரைப் பறித்தது என்று கூறலாம்.

தற்போது விற்பனைக்கு வரும் ஆடி, பிஎம்டபிள்யு போன்ற சொகுசு கார்கள் விபத்துக் குள்ளானால், திறந்துகொள்ளாத அளவுக்கு கதவுகள் தானாகவே ‘லாக்’ ஆகும். காற்றுப் பைகளும் (ஏர்பேக்) உடனடியாக திறந்துவிடும். இதனால் கார் எப்படி உருண்டாலும்உள்ளே இருப்பவர்களுக்கு அடிபடாது. அஸ்வின் காரும் இதேபோல விபத்துக்குள்ளானதும், கதவுகள் தானாகவே ‘லாக்’ ஆகி, காற்றுப்பைகள் திறந்துவிட்டன.

எதிர்பாராதவிதமாக காரில் தீ பிடித்துக்கொண்டதால், வெளியே வரமுடியாமல், பரிதாபமாக தீயில் சிக்கி இறந்துள்ளனர். விபத்தில் சிக்குபவர்களுக்கு 10 விநாடிகள் வரை தங்களுக்கு என்ன நடக்கிறது என்பதையே உணர முடியாது. மற்றவர்கள் உதவிக்கு வந்தால் மட்டுமே அவர்களைக் காப்பாற்ற முடியும்.

காரில் ஏன் தீ பிடிக்கிறது?

காரின் முன் பகுதியில் ஏராளமான மின் வயர்கள் இருக்கும். விபத்து ஏற்படும்போது இந்த வயர்கள் சேதம் அடைந்து தீப்பிடிக்கும்.

முன் பகுதியில் மின் விளக்குகள், பேட்டரி, ஏசி மெஷின் என எளிதில் தீப்பிடிக்கக் கூடிய கருவிகள் அதிகம் இருப்பதால், மோதிய வேகத்தில் உடனே தீப்பிடித்துக் கொள்ளும். அஸ்வின் காரில் பெட்ரோல் டேங்க்கும் வெடித்ததால், கார் முழுவதுமாக எரிந்துவிட்டது.

5 விநாடிக்குள் 100 கி.மீ. வேகம்

அஸ்வின் கார் இன்ஜின் 2,979 சிசி சக்தி கொண்டது. புறப்பட்ட 5 விநாடிகளுக்குள் 100 கி.மீ. வேகத்தை எட்டிவிடும். ஸ்போர்ட்ஸ் மாடல் கார் என்பதால் தரையை ஒட்டியவாறு இருப்பதுபோல வடிவமைக்கப்பட்டிருக்கும். இங்குள்ள சாலைகளில் இதை ஓட்டுவதே கடினம். சாதாரண வேகத்தடையில்கூட காரின் அடிப்பகுதி சாலையில் உரசும். இதனால் அதிவேகத்தில் சென்றபோது காரின் அடிப்பகுதி வேகத்தடையில் உரசி கட்டுப்பாட்டை இழந்திருக்கலாம் என்று கூறியுள்ளார்.

Related posts: