பத்திரிகையாளர் கஷோஜியின் உடல் கழிவுநீருடன் வெளியேற்றம்? துருக்கி நாளிதழ் அதிர்ச்சித் தகவல்!

Monday, November 12th, 2018

துருக்கியிலுள்ள சவுதி தூதரகத்தில் கொலை செய்யப்பட்ட செய்தியாளர் கஷோஜியின் உடல் திரவத்தில் கரைக்கப்பட்டு கழிவு நீருடன் வெளியேற்றப்பட்டிருக்கலாம் என்று துருக்கி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து அந்நாட்டிலிருந்து வெளியாகும் சாபா நாளிதழ் சனிக்கிழமை தெரிவித்துள்ளதாவது: இஸ்தான்புலில் உள்ள சவுதி அரேபிய துணைத் தூதரகத்தில் கொல்லப்பட்ட செய்தியாளர் கஷோஜியின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டதாகவும் அதிகாரிகள் ஏற்கனவே தெரிவித்துள்ளனர்.

தற்போது புதிதாக கிடைத்துள்ள அமிலத்தில் கரைக்கப்பட்ட கஷோஜியின் உடல் கழிவு நீருடன் கலந்து வெளியேற்றப்பட்டதாக தெரிய வந்துள்ளது. சவுதி துணைத் தூதரகத்தின் கழிவு மாதிரிகளை சேகரித்து அதிகாரிகள் சோதனை செய்த போது அதில் அமிலங்கள் இருந்தது கண்டறியப்பட்டது. எனவே கஷோஜியின் கரைக்கப்பட்ட உடல் அந்த கழிவுகளுடன் சேர்த்து வெளியேற்றப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகின்றது என்று அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது.

சவுதி அரேபியாவைச் சேர்ந்த செய்தியாளர் ஜமால் கஷோஜி சர்ச்சைகள் காரணமாக சொந்த நாட்டிலிருந்து தப்பி அமெரிக்காவில் வசித்து வந்தார். அங்கு வெளியாகும் வாஷிங்டன் போஸ்ட் நாளிதழில் அவர் கட்டுரைகளை எழுதி வந்தார்.

சவுதி அரசின் கொள்கைகளுக்கு எதிராகவும் பட்டத்து இளவரசருக்கு எதிராகவும் அவர் கருத்துக்களை தெரிவித்து வந்தார்.

இச்சூழலில் துருக்கி நாட்டு பெண்ணை திருமணம் செய்ய விரும்பிய அவருக்கு அந்த நாட்டு சட்டப்படி அவரது முன்னாள் மனைவியிடமிருந்து முறைப்படி விவாகரத்து பெற்றதற்கான சான்றுகள் தேவைப்பட்டன.

ஆதனை பெறுவதற்காக அவர் துருக்கியின் இஸ்தான்புல் நகரிலுள்ள சவுதி அரேபிய துணைத்தூதரகத்துக்கு கடந்த மாதம் 2 ஆம் திகதி சென்றார். ஆனால் அதன் பிறகு அவரைக் காணவில்லை. தூதரகத்துக்குள் அவரை சவுதி அனுப்பிய ஆட்கள் கொன்று விட்டதாக துருக்கி குற்றம் சாட்டியது.

எனினும் இந்தக் குற்றச்சாட்டுகளை ஆரம்பத்தில் மறுத்து வந்த சவுதி அரேபியா 18 நாட்களுக்குப் பிறகு தங்களது துணைத் தூதரகத்தில் செய்தியாளர் கஷோஜி கொல்லப்பட்டதை ஒப்புக் கொண்டது.

Related posts: