ஜெயலலிதாவின் உடல் பதப்படுத்தப்பட்டது உண்மையே – மருத்துவர்கள் விளக்கம்!

Tuesday, February 7th, 2017

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் அவரது மறைவுக்குப் பின்னர் பதப்படுத்தப்பட்டது உண்மையே எனவும் அவரது கால்கள் அகற்றப்படவில்லை எனவும் அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.

முதல்வர் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அம்மருத்துவமனை மருத்துவரும் அரச மருத்துவர் ஒருவரும், இலண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலேவும் விளக்கமளித்துள்ளனர்.

ஜெயலலிதாவின் உடல் டிசம்பர் 5 ஆம் திகதி இரவு 12.20 மணிக்கு பதப்படுத்தப்பட்டதாகவும் 15 நிமிடங்கள் பதப்படுத்தல் இடம்பெற்றதாகவும் இதன்போது கூறப்பட்டுள்ளது.

பெருந்தலைவர்களின் மறைவுக்குப் பின் அவர்களது உடல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்பதற்காக எம்பாமிங் எனும் பதப்படுத்தல் செய்யப்படுவது வழமை எனவும் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்கும் கூட இதுபோல் செய்யப்பட்டதாகவும் உடற்கூறியல் மருத்துவர் விளக்கமளித்துள்ளார்.

ஜெயலலிதாவிற்கு சர்க்கரை அளவு கட்டுக்குள் இல்லாமல் இருந்ததாகவும் செப்சிஸ் நோய் தாக்கம் உடல் முழுவதும் பரவியதால் அவரின் உடல் உறுப்புகள் அடுத்தடுத்து செயலிழக்கத் தொடக்கியதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், அவருக்கு உலகத்தரம் வாய்ந்த மருத்துவ சிகிச்சைகளையே தாம் வழங்கியதாக ஊடகவியலாளர்கள் சந்திப்பில் மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

துரதிர்ஷ்ட வசமாக மாரடைப்பு ஏற்பட்டமையே இறப்பு ஏற்படக் காரணமாக இருந்ததாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்கான கட்டணம் 5.5 கோடி இந்திய ரூபா எனவும் அதன் பற்றுச்சீட்டு உறவினர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

jay

Related posts: